கேள்வி: ஆன்மா என்றால் என்ன?
என்ன? என்று எம்மை வினவுவதைவிட என்ன? என்பதை அறியுங்கால் அவனவன் மனதை வினவினால் ஆன்மா என்பது என்ன? என்பது புரியவரும். புலன்களுக்குப் புலப்படாமல் இருக்கின்ற ஒரு உயிர் தத்துவம் தான் ஆன்மா. அந்த ஆன்மாவை புரிந்து கொள்ள சுய ஆய்வும் பாவங்களற்ற தன்மையும் மிக அவசியம். அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து விடுகின்ற மூச்சுக் காற்றை சற்றே நிதானித்து உற்று கவனித்து வந்தால் ஆன்மா என்பது என்ன? தான் என்பது என்ன? தேகம் என்பது என்ன? இறை என்பது என்ன? இந்த உலக வாழ்வு என்பது என்ன? என்பது மெல்ல மெல்ல புரியவரும். நாங்கள் எத்தனை வார்த்தை பயன்படுத்திக் கூறினாலும்கூட ஐயம் மேல் ஐயம் வந்து கொண்டுதான் இருக்கும்.
கேள்வி: அழியாத புண்ணியம் எது?
புண்ணியம் எப்பொழுதுமே அழியாதப்பா. புண்ணியத்தால் ஒரு மனிதன் பெறக்கூடிய விஷயத்தைப் பொறுத்துதான் அது அழியக்கூடியதா? அழியாததா? என்பதை தீர்மானிக்க முடியும். புண்ணியம் யாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து அருட்புண்ணியமாக மாற்றிக் கொண்டால் அதனால் வரக்கூடிய பலன்கள் என்றும் அழியாது. ஆனால் புண்ணியம் யாவும் லோகாய (உலக) ஆதாயத்திற்காக ஒரு புண்ணியமாக மாற்றிவிட்டால் அதனால் வரக்கூடிய விஷயங்கள் யாவும் அழிந்துவிடும்.