அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
பெயர் புகழ் இதற்காக ஒரு மனிதன் உள்ளதை மறைத்துப் பேசுவான். ஏன் என்றால் உள்ளதை உள்ளபடி கூறினால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? யார் ஒத்துக் கொள்வார்கள்? பொய் கூறினால் தான் இந்த கலிகாலத்திலே வெற்றி கொள்ள முடியும். தம்மை மதிப்பார்கள். மெய்யைக் கூறினால் பிரச்சினைதான் வரும் என்று எண்ணிக்கொண்டு மனிதன் மெய்யை மறைத்து பொய்யைக் கூறுகின்ற வழக்கத்துக்கு வந்திருக்கிறான்.
ஆபத்தில்லாத யாருக்கும் எந்தவிதமான தற்காலத்திலும் பிற்காலத்திலும் பாதிப்பை தராத பொய்யை வேண்டுமானால் ஒருமனிதன் வேடிக்கையாக கூறலாம். ஆனால் தீய விளைவுகளைத் தரும் என்று தெரிந்தே ஒரு மனிதன் பொய் கூறினால் கடுமையான பிரம்மஹத்தி தோஷத்தையே அவன் நுகரவேண்டி வரும். ஒரு உயிரை கொன்றால் தான் பிரம்மஹத்தி தோஷம் என்பதல்ல. வெறும் வார்த்தையால் பிறரை வதைத்தாலும் பிறரை நம்ப வைத்து ஏமாற்றினாலும் ஹத்தி தோஷம் பிடிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒரு மனிதனை பயமுறுத்துவதற்காகவோ அல்லது வேடிக்கைக்காகவோ நாங்கள் கூறவில்லை. ஒரு மகான் முன் அமரும் பொழுது எதிர்காலம் இவ்வாறு இருக்கும் அவ்வாறு இருக்கும். நீ நன்றாக வருவாய் நிறைய தானம் செல்வம் சேரும். நிறைய பெயர் புகழ் வரும் என்று வழக்கத்திற்கு ஏற்ப கூறாமல் இப்படி கூறுகிறோம் என்றால் ஒரு மனிதன் என்ன சேர்த்தாலும் சிரஸிற்கு மேல் மரணம் எனும் கத்தி தொங்கி கொண்டே இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.