அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் ஒரு மனிதனின் வாழ்வும் தாழ்வும் உயர்வும் மேன்மையும் பெருமையும் தன்னை உணர்தலும் ஒரு மனிதனின் கர்ம வினைகளைப் பொருத்தே அமைகிறது. இது போல் நிலையிலே அனைத்தும் வினைப்பயனே விதிப்பயனே என்று அறிந்த பிறகு ஒரு மனிதன் ஏதும் செய்யாமல் இருந்து விட்டால் போதுமே என்று அடுத்ததொரு வினா எழும். தாராளமாக அப்படியும் இருக்கலாம். ஆனாலும் அப்படி இருப்பதற்கும் அப்படி ஒரு விதி இருக்க வேண்டும். இதுபோல் நிலையிலே பின் மனிதனுக்கு சிந்தனை ஆற்றல் எதற்காக கொடுக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விஷயம் என்றால் மனிதன் சுயமாக எந்தெந்த நிலையில் முடிவெடுக்க முடியும். அந்த முடிவை விதி அனுமதிக்கிறதா? அனுமதிக்காமல் விட்டு விடுகிறதா? என்று எப்படி புரிந்து கொள்வது.
அதாவது ஓரு மனிதன் சுயநலமாக தன்னலமாக செய்கின்ற எதனையும் கால சூழல் கருதி திசாபுத்தி அந்தரம் கருதி செய்து விடலாம். ஆனால் பொதுநலமாக பிறருக்கு உதவ வேண்டிய அனைத்தையும் அவன் எதனையும் பார்க்காமல் யோசிக்காமல் சிந்திக்காமல் செய்து கொண்டே இருக்கலாம். இதற்கு கால சூழல் ஏதும் தேவையில்லை. இதுபோல் நிலையிலே ஒவ்வொரு சமயமும் யாம் திடீரென்று வாக்குகளை சிலருக்கு கூறுவதும் பலருக்கு மௌனமாக இருப்பதும் இதுகுறித்து பலரும் பல்வேறு வினாக்களை எம்முன்னே வைப்பதும் வாக்குகளை கூறாமல் போவதற்கு காரணங்களை அறிந்து கொள்ள துடிப்பதும் எமக்கு தெரிந்தாலும் சுருக்கமாக கூறுங்கால் உலகியல் வாழ்விலே ஏற்றம் இறக்கம் எப்படி இருந்தாலும் யாங்கள் கூறுகின்ற விஷயம் ஒரு மனிதனுக்கு பலிதமானாலும் ஆகாவிட்டாலும் தொடர்ந்து எமது வழியில் எவன் வருகிறானோ பக்தியையும் சத்தியத்தையும் தருமத்தையும் விடாப்பிடியாக எவன் ஒருவன் கடைபிடிக்கிறானோ அவனுக்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு எமது அருளாசிகள் என்றும் இருக்கும்.
ஆனால் இறைவனை வணங்குவான் எம்மையும் வணங்குவான். தர்மம் என்றவுடன் யோசித்து பார்த்துவிட்டு இந்த மாதம் இதுதான் எனக்கு வருமானம் இந்த மாதம் இந்த செலவுகள் இருக்கிறது. இது போக எதிர்காலத்திற்கு இந்த அளவு சேமிக்க வேண்டியிருக்கிறது. அது போக எதிர்பாராத செலவுக்கு என்று எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. இதனையும் தாண்டி என்னிடம் தனம் இருந்தால் தருவேன். இல்லையென்றால் தர மாட்டேன். அதாவது இவனாகவே ஒன்றை முடிவைடுத்து விட்டு இந்த முடிவுக்கு ஏற்ப எம்மிடம் ஆலோசனை கேட்பதோ அல்லது தர்ம விஷயத்தில் நிபந்தனையே போடாதே என்று கூறினாலும் அதிலே மேச ரிஷபன் எவன் ஒருவன் பார்க்கிறானோ அதிலே திதி நட்சத்திரம் பார்த்து அதிலே இதைதான் செய்வேன் அதைதான் செய்வேன் இப்படித்தான் செய்வேன் என்றெல்லாம் எவன் சுயகட்டுப்பாடு விதித்துக் கொள்கிறானோ அவன் தர்மமே செய்யாதவன் என்பதை விட கீழானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே செய் செய் செய்துகொண்டே இரு என்று கூறும் போது எதனையும் ஒருவன் பார்க்க கூடாது. என்ன ஆகும் குடும்பம் எதிரகாலம் என்ன ஆகும் என் வருமானம் நின்றுவிட்டால் பிறகு நான் போய் கையேந்த வேண்டுமே என்றெல்லாம் ஒருவன் சிந்திக்க துவங்கிவிட்டாலே விதி அவன் சிரசில் ஏறி அமர்ந்து அவனை தர்மப் பாதையை விட்டு திசை திருப்பி தன் கர்மப் பாதைக்கு அழைக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தர்மத்தில் அணுவளவு கூட ஐயமில்லாம் முழுக்க முழுக்க எந்த விதமான பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் வெறும் இறை நாமத்தை மட்டுமே மனதில் வைத்து அதிலும் இங்குள்ள அனைத்தும் இறைவனுக்கு உரிமை சொந்தம் இடையில் நம்மிடம் இறைவன் கொடுத்து வைத்திருக்கிறான். கொடுத்து வைத்ததை நாமே எடுத்து வைக்க கூடாது பதுக்கி வைக்க கூடாது. இதனை யாருக்கெல்லாம் பயன் படுகிறதோ தம்மை சுற்றி யாரெல்லாம் வேதனையில் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அள்ளி வழங்க வேண்டும் என்ற சிந்தனை எப்போதெல்லாம் ஒரு மனிதனுக்கு தலை தூக்கிறதோ அப்பொழுதே அவன் எமது வாக்கை கேட்டாலும் கேட்கா விட்டாலும் எமது அனுக்கிரகம் பரிபூரணமாக இறையருறள் ஆசியுடன் அவனுடன் பின்னிப் பிணைந்து அவன் ஆத்மாவை அவனையும் அறியாமல் மேலேற்ற நாங்கள் துவங்கி விடுகிறோம்.
இது ஒரு புறம் இருக்க பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டு நிறைய பக்தி சாதனைகள் எல்லாம் செய்து விட்டு யோக சாதனைகளை செய்கிறோமே எங்களுக்கு ஏதும் செய்யக் கூடாதா? என்றால் செய்யக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. தர்மத்தை மறந்துவிட்டு பிற உயிருக்கு கருணை புரிவதை ஒதுக்கிவைத்து விட்டு ஒரு மனிதன் தன் குடும்பத்தையும் தவிக்க விட்டுவிட்டு எத்தனை யோகங்கள் செய்தாலும் எத்தனை ஞானக் கருத்துக்களை அவன் வாசித்தாலும் அதனால் அனுவளவும் பயன் ஏதுமில்லை. எங்கோ குகையில் அமர்ந்து விட்டு புருவ மத்தியை நோக்கி சிந்தனையை செலுத்தினாலும் கூட அவன் செய்ய வேண்டிய அன்றாட கர்ம கடமைகள் எல்லாம் அவனை பிடித்து பின் நோக்கிதான் இழுக்கும். எனவேதான் ஒரு மனிதனுக்கு சகல விதத்திலும் காவலாக இருப்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பொதுநல நோக்கோடு அவர் செய்யக் கூடிய ஆணவமில்லாமல் தன்முனைப்பு இல்லாமல் செய்ததை தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் எவன் ஒருவன் செய்கிறானோ அந்த தர்மம் மட்டுமே ஒரு மனிதனுக்கு பரிபூரண கவசம். கர்ணனின் கவசம் கூட இந்திரனால் கவரப்பட்டு விட்டது. இந்த கவசத்தை யாராலும் கவர முடியாது.
எனவேதான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் யாம் தர்மத்தை உபதேசம் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் அதனை கேட்டு விட்டு மீண்டும் மீண்டும் மீண்டும் மனிதன் அதனைத் தவிர அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான். வேறு வழியில்லாமல் யாமும் ஒருவனுக்கு எப்படி உரைத்தால் அவன் மனம் திருப்திப்படுமோ நாங்கள் எமது பாதைக்கு அவன் வராத வரையில் அவனுக்கு எதேல்லாம் திருப்தியாக இருக்கிறதோ அதையாவது எண்ணி அவன் சந்தோசப்படட்டுமே என்று எண்ணி அவன் போக்கில் விட்டுவிடுகிறோம். எனவே இதுபோல் நிலையிலே யாங்கள் கூறுவதை நாங்கள் ஒரு கோணத்தில் கூற அதை சூழ்ச்சியாகவோ உயர்ச்சியாகவோ வேறு விதமாக புரிந்து கொள்வதும் நாங்கள் மௌனமாக இரு என்றால் மௌனமாக இல்லாமல் இப்படித்தானே கூறக்கூடாது என்று கூறினார்கள் வேறு விதமாக கூறலாம் என்று அவனவனாக பொருள் எடுத்துக் கொள்வதும் எம்மைப் பொருத்தவரையில் ஏற்புடையதல்ல என்பதால் எமது வழியில் வரும் சமயம் எல்லா வகையிலும் ஏற்றம் இருக்கலாம் இறக்கமும் இருக்கலாம் இந்த இரண்டையும் அனுசரித்துதான் வாழ வேண்டும் என்ற ஒரு கருத்தை மனதிலே மையப்படுத்திக் கொண்டு தொடர்ந்து தர்மத்தை சத்தியத்தை பக்தியை பின்பற்ற நன்மை உண்டாகும்.