அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
இறைவனின் கருணையை பெறாத வரையில் ஒரு மனிதனால் மெய்யான மெய் இன்பத்தை பெற இயலாது. எமக்கு இறைவனின் கருணை தேவையில்லை. இந்த உலகில் வாழ வேண்டிய சகல வசதிகளும் இருந்தால் போதும் என்றுதான் பல மனிதர்கள் வாழ்கிறார்கள். இல்லையென்றால் இறைவனுக்கு பிடிக்காத அனைத்து குறுக்கு வழிகளையும் ஒரு மனிதன் கையாளுவானா? ஆலயம் செல்வதும் பாசுரங்களை ஓதுவதும் பக்திப் பழமாக தன்னைக் காட்டிக் கொள்வதும் மட்டும் இறைவனுக்கு பிடித்த விஷயமா? உண்மையான மனித நேயத்தை மறந்துவிட்ட பக்திக்கு என்றும் இறைவன் செவி சாய்க்க மாட்டான். பரோபகார சிந்தனை இல்லாத பக்தியை இறைவனோ மகான்களோ ஏற்றுக் கொள்வதில்லை. மெய்யான மெய் உணர்வு பாவங்கள் செய்யாத மன நிலை இவைகளை வளர்த்துக் கொள்ளாதவரை ஒரு மனிதனால் மெய்யான மெய் ஞானத்தை நோக்கி மெய்யாகவே நடைபோட இயலாது. எனவே விளக்கங்களை எத்தனை விதமான கோணங்களில் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் இல்லை.
இன்னும் கூறப்போனால் சித்தர்களை நாடுவதும் சித்தர்களிடம் வாக்குகளைக் கேட்பதும் கூட பெரும்பாலான மனிதர்கள் எப்படிப்பட்ட மன நிலையில் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் தன்னைப் புகழ வேண்டும் அல்லது தன் பெயரை நியாயப்படுத்தி தனக்கு ஆதரவாக சித்தர்கள் இருக்க வேண்டும். இன்னொன்று மனிதனிடம் இருக்கக் கூடிய உடனடியாக விலக்கப்பட வேண்டிய குணம் என்னவென்றால் உண்மையான ஒரு நல்ல செயலை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தே ஒவ்வொன்றையும் செய்யப் பழகுகிறான். இதை ஆரம்ப நிலையில் தவறு என்று கூற இயலாது. ஒரு குழந்தைத்தனமான ஆசை. எனவே அதை மன்னிக்கலாம். ஆனால் வளர வளர மற்றவர்கள் அங்கீகாரத்திற்காகவா ஒரு நல்ல செயலை செய்ய வேண்டும்? உண்மையாகவே வாஸ்தவமாகவே நல்ல செயலை செய்யக்கூடாதா?
இதுபோல் நிலையிலே தான் இறைவனை பார்த்திருக்கிறேன் தரிசித்திருக்கிறேன் என்பதல்ல பெருமை. மனிதனுக்கு தான் இறையை உணர்ந்ததையோ இறையை பார்த்ததையோ மற்றவர்கள் புரிந்துகொண்டு தன்னை மதிக்க வேண்டும் என்ற நிலையில்தான் மனிதனுக்கு குழப்பமே ஏற்படுகிறது. தனக்கு இறைவனின் பரிபூரண கருணை கடாட்சம் உண்டு என்பதை தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் உணர்ந்து தன்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பொழுது அல்லது அப்படி மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தன்னுடைய செயல் தன்னுடைய வாழ்க்கை நிலை இருக்க வேண்டும் என்றுதான் இறைவனிடம் மனிதன் எப்பொழுதுமே எதிர்பார்ப்பை வைத்திருக்கிறான். அப்படியில்லாத எந்தவொரு இறை தத்துவத்தையும் எந்த மெய்ஞான விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள மனிதன் தயாராக இல்லை.
ஒன்று ஆன்மீகமோ இறை வழிபாடோ உலகியல் ரீதியான வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் அல்லது இந்த மனிதன் இறையருளைப் பெற்றிருக்கிறான் என்று ஒரு குறிப்பிட்ட இனமோ சமுதாயமோ பல மனிதர்களோ அதற்கு பொறுப்பேற்று முன்னுரிமை தரவேண்டும். இப்படியில்லாத நிலையில் ஒருவன் இறை வழிபாட்டையோ வழிமுறைகளையோ விரும்புவதில்லை. உண்மையில் இறைவன் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் ஞானியர்கள் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் மனிதர்கள் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் நான் சத்தியத்தைதான் பேசுவேன். நான் என்னால் முடிந்த தர்மத்தை செய்து கொண்டேயிருப்பேன். நான் சுயநலம் இல்லாமல் வாழ்வேன். நான் யார் மனதையும் புண்படுத்த மாட்டேன். என் வரையில் என் கடமைகளை ஒழுங்காக செய்வேன் என் கஷ்டங்களுக்கு யாரையும் குறை கூறமாட்டேன். என்னுடைய இயலாமைக்கு என் வினைப்பயன் காரணம் அல்லது என்னிடம் இருக்கக்கூடிய குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் நானே பொறுப்பு என்று பலர் முன்னால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கக் கூடிய மன நிலை வராதவரை மனிதனுக்கு மெய் ஞானம் என்பது சித்திப்பது கடினம்.
எனவே உயர்ந்த கருத்துக்களையும் உயர்ந்த ஞான விஷயங்களையும் புரிந்து கொள்ள மனிதனுக்கு முதலில் பாவங்கள் குறைந்திருக்க வேண்டும். பாவங்கள் குறையாத நிலையில் ஒருவன் ஆன்மீகத்தில் இருக்கலாம். ஆனால் அது மூடத்தனமான ஆன்மீகமாகத்தான் இருக்குமே தவிர அறிவில் சிறந்த ஆன்மீகமாக இருக்க வாய்ப்பில்லை. அப்பேற்பட்ட மனிதனுக்கு போதனை என்பதைவிட முதலில் பாவத்தைக் குறைப்பதற்குண்டான பக்தி வழியையும் சத்திய வழியையும் தர்ம வழியையும்தான் காட்ட வேண்டும். தர்மத்தால் தல யாத்திரையால் அன்றாடம் செய்யும் பிரார்த்தனையால் ஒரு மனிதன்தான் பிறவிகள் தோறும் சேர்த்த பாவங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எங்கே பாவங்கள் குறைகிறதோ அங்குதான் மெய்யான மெய்யறிவு துளிர்விடும். இல்லையென்றால் அறியாமை தொடர்ந்து கொண்டே இருக்கும். அறியாமை மூடத்தனம் நிறைந்த ஆனால் இறைவனை வணங்கக் கூடிய மனிதனிடம் தொடர்பு வைத்துக் கொள்வதும் விவாதம் செய்வதும் அப்படி செய்கின்ற மனிதர்களுக்குதான் துன்பத்தைத் தருமேயன்றி வேறு எந்த நற்பலனையும் தராது. இது போன்ற மனிதர்களிடமிருந்து உண்மையாக மெய் ஞானத்தை தேடுகின்ற மற்ற மனிதர்கள் சற்றே விலகியிருக்க பழக வேண்டும். எதிர்வாதம் செய்யாமல் மௌனம் காக்க பழக வேண்டும். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் ஆன்மீகமும் புரியும். இதுபோல் உலகியலும் புரியும்.