கேள்வி: பாவங்கள் ஒரு மனிதனை ஆன்மீக வழியில் செல்லவிடாது எனும் பொழுது அது எப்படி மனித குற்றமாகும்?
இறைவன் அருளால் பாவத்தை குறைத்துக் கொள்ள மனிதன் என்றாவது ஒரு சிறு முயற்சி எடுத்திருக்கிறானா? என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். கட்டாயம் பாவங்கள் இருக்கும் வரை இறை சிந்தனையோ பெருந்தன்மையோ தர்ம சிந்தனையோ வராது என்பது உண்மை. அதனால்தான் முதலில் ஏதாவது ஒரு ஆலயம் செல்லப் பழக வேண்டும். பிறகு அன்றாடம் சில நாழிகையாவது இறை நாமத்தை மனம் சோர்ந்தாலும் தளர்ந்தாலும் பாதகமில்லை என்று உருவேற்ற வேண்டும். எல்லாம் கடினம் என்று எண்ணினால் தனம் இருப்பவர்கள் முதலில் இந்த தனம் நமக்கு உரியதல்ல என்றோ நாம் செய்த (நல்) வினைகளுக்காக இறைவன் தந்திருக்கிறார். நமக்கும் நம் குடும்பத்திற்கும் போக எஞ்சியுள்ள தனம் அனைத்தையும் பிறருக்காக தந்துவிட்டால் நல்லது என்ற சிந்தனையை அசைபோட வேண்டும். அதனால்தான் மனம் என்பது பாவத்தை நோக்கி செல்லாமல் இருக்கும். பாவங்கள் இருக்கிறது. எவ்வாறு தர்மம் செய்வது? அந்த பாவங்கள்தானே மனிதனை மேல் நோக்கி செல்லவிடாமல் தடை போடுகிறது என்ற சிந்தனை வரும் பொழுதே அந்த பாவங்களை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்துவிட வேண்டும். உடல் ஊனம் நான் எப்படி வாழ்வேன்? என்பதை விட இந்த உடல் ஊனத்தோடு என்ன முடியுமோ அதை செய்வேன் என்பதுதான் மனஉறுதி. எனவே யாம் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் வறுமை தண்டனையல்ல. வித்தை கற்காமை தண்டனையல்ல. பிணி தண்டனையல்ல. அறியாமை ஒன்று தான் தண்டனை.
விதி மனிதனிடம் விளையாடுவது அறியாமையை வைத்துத்தான்.
அறியாமை என்றால் என்ன?
ஆசை பற்று தனக்கு வேண்டும் தன் குடும்பத்திற்கு வேண்டும் தன் வாரிசுக்கு வேண்டும் தனக்குப் பின்னால் தன் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவே எப்படியாவது முடிந்தவரை தனத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறானே? இதை முதலில் மனதை விட்டு அகற்றினாலே பாவங்கள் அகன்றுவிடும். எனவே தான் மீண்டும் மீண்டும் இந்த ஜீவ அருள் ஓலையிலே பரம்பொருள் கூறுகின்ற தர்ம விளக்கத்தைக் கூறிக்கொண்டே இருக்கிறோம். சோதித்துக்கூட பார்க்கலாம். பாவம் இருக்கிறது என்னால் ஆலயம் செல்ல முடியவில்லை பிராத்தனை செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது. அடுத்தடுத்து நஷ்டம் வருகிறது. போராட்டமாக இருக்கிறது. போர்க்களமாக இருக்கிறது. ஒன்று போனால் ஒன்று கஷ்டம் வருகிறது. இதில் எப்படி நான் தர்மத்தை செய்ய முடியும்?
முதலில் நான் பட்ட கடனையெல்லாம் அடைக்க வேண்டும். நான் படும் கஷ்டங்களிலிருந்து வெளியே வரவேண்டும். நான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் தானே எதனையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அந்த நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதற்காக முதலில் எப்படி அன்றாடம் உலகியல் கடமைகளை மனிதன் ஆற்றுகிறானோ அதைப்போல அவனவனால் முடிந்த உதவியை அன்னத்தை ஆடையை தனத்தை மருத்துவ உதவியை தேடி தேடி தேடி தேடி தேடி தேடி தேடிச் சென்று தர தர பாவங்கள் குறைந்து கொண்டே வரும். பாவங்கள் குறைந்தாலே மனம் அறியாமையிலிருந்து விடுபட்டுவிடும். எனவேதான் கடுமையான பூஜைகளையும் தவங்களையும் நாங்கள் கூறாமல் இந்த எளிய வழிமுறைகளைக் கூறுகிறோம். வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.