கேள்வி: தலைமுடி காணிக்கை குறித்து விளக்குங்கள்?
இறைவன் அருளால் பலமுறை இது குறித்து கூறியிருக்கிறோம். மேலும் கூறுகிறோமப்பா. ஒரு மனிதன் இறைவனை நோக்கி பக்தி செலுத்தும் பொழுது எடுத்த எடுப்பிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால் பக்தியை செலுத்தலாம். இல்லையென்றால் ஒரு குழந்தைத் தனமான ஒரு பக்திதான் இறைவனிடம் தோன்றும். இறைவா என்னுடைய பிரச்சனையைத் தீர்த்துவிடு. என் முடியைக் காணிக்கையாகத் தருகிறேன். இறைவா என் குழந்தைக்கு உன் சந்நிதியில் வந்து காதினை நகையலங்காரம் செய்து பார்க்கிறேன். இறைவா உன்னுடைய சந்நிதிக்கு இதை செய்கிறேன் என்பதெல்லாம் மிக மிக ஆதி நிலை பக்தியாகும். அதற்காக இதனை ஏளனம் செய்யத் தேவையில்லை.
தன்னுடைய தலை சிகையை முடி காணிக்கையாக தந்தால்தான் இறைவன் அருள்வார் என்ற மனப்பான்மை இருக்கும்வரை அந்த பக்தி நிலை சரி. ஆனால் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தால் இறைவன் அருள்வார் மகிழ்வார். நாம் நேர்மையாக வாழ்ந்தாலே இறைவன் அருள்வார். நம் மீது கருணை செய்வார் என்ற சிந்தனை வளர்ந்த பிறகு மீண்டும் இந்த பக்தி நிலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் வேண்டிக் கொள்ளும் பொழுது எந்த மனநிலையில் இருந்து வேண்டிக் கொள்கிறானோ அந்த வேண்டுதலை கூடுமானவரை அவன் மனநிலைக்கு ஏற்ப சரியாக கடமையாற்றுவது மிக சரியான செயலாகும். எனவே பக்தியில் எல்லா நிலைகளும் உயர்வுதான். ஒரு நிலை உயர்வு ஒரு நிலை தாழ்வு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உயரே செல்ல செல்ல தாழ்ந்த நிலையில் இருக்கின்றவனை பார்த்து உயர்ந்த நிலையில் இருப்பவன் ஏளனம் செய்ய வேண்டாம்.