கேள்வி: நாரதர் கலகம்தான் செய்வார் என்பது பற்றி
இறைவன் அருளால் தவறான கருத்து அப்பா. இந்த நாரதர் மிகப்பெரிய மகான் ஞானி. ஞானத்தையெல்லாம் வேடிக்கையாகப் பல பேருக்கு உபதேசம் செய்து பல ஆத்மாக்களை கரையேற்றியிருக்கிறார். இன்று வால்மீகி மனிதர்களுக்கு கிடைத்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் நாரதரின் பங்குதான் அதிகமாக இருக்கிறது. முன் ஜென்ம பாவத்தால் தவறான தொழிலை செய்ய வேண்டி நிலைமை ஏற்பட அதே வால்மீகியின் முன் ஜென்ம புண்ணியத்தால் ஒரு மகான் மூலம் ராம நாமத்தை ஜபிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் அவன் புனிதனாவான் மாமேதையாவான் மாமனிதனாவான் மகானாவான் என்கிற விதி இருக்க அந்த விதிக்குள் ஒரு விதி இருந்தது. ராம நாமத்தை அவன் நேரடியாக உபதேசம் பெறக்கூடாது. பெற்றால் பலிக்காது என்று இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் நாரத மகரிஷி வால்மீகியை கள்வனாக இருக்கும் பொழுதே கண்டு நீ மரா மரம் மரா மரம் என்று ஓதிக் கொண்டே இரு. உனக்கு வேண்டியதெல்லாம் கிட்டும் என்று கூற அவனும் ஏதும் புரியாமல் மரா மரா மரா மரா என்று ஓத அதுவே பின்னால் ராம ராம ராம ராம என்று ஆகி மனித குலத்துக்கு ஒரு வால்மீகி கிட்டினான்.
வால்மீகி மிகப்பெரிய ஞானி. வால்மீகம் என்றால் புற்று என்று பொருள். விண்ணளவு புற்று வளரும்வரை தவம் செய்தவனடா. எனவே இதுபோன்ற பல ஞானியர்களை உருவாக்கிய பெருமை நாரதருக்கு உண்டு. முன்பே கூறியிருக்கிறோம். நாரதர் வழிபாடுகளெல்லாம் இங்கு வழக்கொழிந்து இருக்கிறது. ஹரிச்சந்திரனை மயானத்தோடு நிறுத்தி விட்டார்கள். உண்மை அங்குதான் இருக்கிறது என்பதை மனிதன் சொல்லாமல் சொல்கிறான். ஊருக்குள் உண்மை வரவேண்டாம் என்று மனிதன் என்றோ முடிவெடுத்து விட்டான். அதைப்போல் நாரதரையும் இப்படியே கூறி ஒதுக்க விட்டார்கள். அவ்வாறெல்லாம் எண்ணாமல் தாராளமாக நாரதரை மிகப்பெரிய மகானாக ஞானியாக சித்தனாக முனிவனாக வணங்கலாம். நல் உபதேசங்களும் ஞான கருத்துகளும் ஞான வழியில் வருகின்ற மனிதனுக்கு நல்ல வழிகாட்டுதலும் இன்றளவும் நாரதர் செய்து கொண்டிருக்கிறார்.