கேள்வி: உயிர்க்கொலை செய்வது பாவம் எனப்படுகிறது. படிப்பு நிமித்தமாக உயிர்க்கொலை செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன பரிகாரம் செய்வது?
எந்த நோக்கத்தில் செய்தாலும் பாவம்தான். மருத்துவ வித்தையை (கல்வியை) கற்றுக்கொள்வதற்காக மருத்துவ அறிவு வேண்டும் என்பதற்காக உயிர்களை பகுத்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை. போகன் போஓன்ற சித்தர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? எதையும் சோதிப்பதற்கு முன்னால் தன் உடலுக்கு அந்த மருந்தை செலுத்திப் பார்த்துதான் சோதனை செய்வான். ஒன்று ஞானத்தில் அறிந்துகொள்ள முயல வேண்டும் இது தக்கது இது தகாதது என்று. ஆனால் மனிதன் எப்பொழுதுமே லோகாயரீதியாக (உலக ரீதியாக) சிந்தித்தே பழகிவிட்டான். வேறு வகையில் கூறுகிறோம். ஒரு குழந்தையின் மீது ஒரு நாகம் ஏறிவிட்டது. சற்றே கவனக்குறைவாக இருந்தாலும் அந்தக் குழந்தையை நாகம் கொன்றுவிடும். இப்பொழுது அந்த நாகத்தை அப்புறப்படுத்துவதா? அல்லது கொல்வதா? நாகத்தைக் கொன்றால் பாவம் வந்துவிடுமே? என்றால் கட்டாயம் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். ஆனாலும் நாகத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அந்த நிலையில் நாகத்தைக் கொன்றால் கட்டாயம் பாவம்தான் வரும். ஆனால் அங்கே நோக்கம் எவ்வாறு இருக்கிறது? என்று இறைவனால் பார்க்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் பாவத்தின் தன்மை அவனுக்கு அளிக்கப்படுகிறது. எனவே வெறும் சுயநல நோக்கத்திற்காக செய்யப்படுகின்ற எல்லா உயிர்க் கொலைகளும் பாவம்தான். இதை எப்படிப் பார்த்தாலும் இந்தப் பாவம் ஒரு மனிதனை பற்றத்தான் செய்யும். கூடுமானவரை இதை தவிர்ப்பது நன்மையைத் தரக்கூடிய நிலையாகும்.