கேள்வி: ஐயனே தாங்கள் தீட்டு என்பது மனதை பொறுத்தவிஷயம் என்று கூறியிருக்கிறீர்கள். இருந்தாலும் தீட்டை எந்த கால கட்டத்தில் பார்க்க வேண்டும். அப்படி எதாவது இருக்கிறதா? உதாரணமாக மாதவிலக்கு மரண வீட்டுத் தீட்டு?
உள்ளம் சுத்தமாக இருப்பதை நாங்கள் பார்க்கிறாறோம். அதற்காக உடல் அசுத்தமாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. உடலும் உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்பொழுது நீ கூறிய பெண்களுக்கு உண்டான மாதாந்திர விலக்கு என்பது ஒருவகையான உடல் சார்ந்த நிகழ்வு. இது போன்ற தருணங்களிலே உடல் சோர்ந்து இருக்கும். எனவே அவர்கள் அயர்வாக ஓய்வாக இருப்பது அவசியம். அதைக் கருதிதான் அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே தோஷம் காரணமாக விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கருதத் தேவையில்லை. என் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் தாராளமாக இயங்கட்டும். ஆனால் சித்தர்களைப் பொறுத்தவரை இது போன்ற தருணங்களில் பெண்கள் முழுக்க முழுக்க ஓய்வாக இருப்பது அவர்களின் பிற்கால உடல் நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். அனைத்து இல்லக்கடமைகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பதே ஏற்புடையது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லையே என்று மனிதன் எண்ணலாம். மனிதன் ஏதாவது ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும். இது போன்ற தருணங்களில் ஒன்றல்ல இரண்டல்ல குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இல்லையென்றால் ஐந்து நாட்கள் அமைதியாக இருப்பதும் உடலை அதிகமாக வருத்தக்கூடிய எந்த செயலையும் செய்யாமல் இருப்பதும் பெண்களுக்கு ஏற்புடையது.
இது போன்ற தருணங்களில் ஆலயம் சென்றால் தோஷம் இறைவன் சினந்து (கோபித்து) விடுவார் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. இது போன்ற தருணங்களில் எங்கும் செல்லாமல் இருப்பது ஒரு பாதுகாப்பான நிலையைத் தரும். அது மட்டுமல்ல இது போன்ற தருணங்களிலே நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால் நோய்கள் தாக்கக்கூடிய நிலைமை ஏற்படும். சில எதிர்மறை ஆற்றல்கள் எதிர்மறை சக்திகள் பெண்களை பீடிக்க வாய்ப்பு இருப்பதால் அமைதியாக இல்லத்தில் ஒரு பகுதியில் அமர்ந்து மனதிற்குள் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கலாம். இந்த அளவில் இதை எடுத்துக் கொள்ளலாமே தவிர மனிதர்கள் எண்ணுவது போல் ஏதோ மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும். கடுமையான தோஷம் ஏதோ குற்றவாளி போல் நடத்த வேண்டும் என்றெல்லாம் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அதைப்போல் இறப்பு குறித்து நாங்கள் முன்னர் கூறியதுதான். மன உலைச்சலை ஏற்படுத்தாத எந்த இறப்பும் பெரிய தோஷத்தை ஏற்படுத்தாது.