கேள்வி: ஒரு ஆன்மா எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறதோ அந்த உடலுடன் வளர்கிறது. சில உடல்கள் பார்ப்பதற்கு அழகாகவும் ஆரோக்யமாகவும் இருக்கிறது. அதே சமயம் அழகற்றதாகவும் ஆரோக்யமில்லாமலும் இருந்தாலும் ஒரு ஆன்மா ஆன்ம பலத்தைப் பெற்றிருக்கிறது. இவை இரண்டும் உடலை உகுந்த பிறகு எப்படி இருக்கும்?
உடலின் ஏற்ற மாற்றங்கள் ஆன்மாவை பாதிப்பதில்லை. ஆனாலும் கூட இந்த உலகிலே ஆன்மாவைப் பார்க்கின்றவர்கள் யாருமில்லை. உடலைப் பார்த்துதான் எடைப் போடுவார்கள் மதிப்பீடு தருவார்கள். அப்படி ஆன்மா உயர்வாகவும் உடல் பிறரால் மதிக்கப்படாமல் இருக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு ஒரு ஆன்மா தள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு ஏற்றாற்போல் பாவ புண்ணியங்கள் இருக்க வேண்டும். சில மகான்களும் ஞானிகளும் விரும்பியே பிறர் தன்னை மதிக்கக்கூடாது என்பதற்காக அழகற்ற தேகத்தை பெறுவதும் உண்டு. அஷ்டாவக்ரர் அப்படித்தான். அஷ்ட வக்ரம் எனப்படும் எட்டு விதமான கோணல்களோடு கூடிய உடம்பைப் பெற்று பிறவியெடுத்தார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏளனம் செய்தார்கள். அது குறித்து அவர் வருத்தப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆன்மா பயணம் செய்வதற்கு ஏதோ ஒரு உடல் என்ற அளவில் மட்டும்தான் அதை நினைத்தார். தேகம் (உடல்) அழகாக இருக்க வேண்டும் என்பதைவிட ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதில்தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும். தேகத்தை விட ஆன்மா அழகாக இருப்பதே மனிதனுக்கு ஏற்புடையது. ஆன்மாவிற்கு அழகு எது? என்றால் தர்மமும் சத்தியமும் தான். அதை மட்டும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் போதும். ஒரு நிலையிலே இந்த தேகத்திற்கு ஏற்படக்கூடிய வயோதிகம் இளமை அழகு அனைத்துமே தேகத்தோடு முடிந்து விடுகிறது. ஆன்மாவை அணுவளவும் பாதிப்பதில்லை.