கேள்வி: வடலூர் (கடலூர் மாவட்டம்) வள்ளலார் ஔிதேகம் அடைந்ததைப் பற்றி?
இறைவன் அருளாலே வெளியில் தெரிந்த வள்ளலார் ஒருவன். தெரியாத வள்ளலார் அநேகம் பேர் இருக்கிறார்களப்பா. இருந்தாலும் இறைவன் திருவடியை அடைவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்றுதான் வள்ளலார் அடைந்த வழிமுறை. அவன் (வள்ளலார்) ஔிதேகம் பெற்றதும் உண்மை. மறைந்ததும் உண்மை. அதைப் போன்று பின்னால் பலருக்கும் அந்த வாய்ப்பை இறைவன் தந்ததும் உண்மை. இனி எதிர்காலத்தில் தரப்போவதும் உண்மை.
கேள்வி: தீர்த்தமலையில் (தருமபுரி மாவட்டம்) உள்ள தீர்த்தங்களின் சிறப்புகள் என்ன? அவைகள் எப்பொழுது உருவானது?
இறைவன் அருளால் பல்வேறு விதமான தீர்த்தங்கள் அங்கு இருக்கிறது. இராம தீர்த்தம் கூட அங்கு இருக்கிறது. அகத்தியர் என்ற நமது நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. அனுமன் நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. இது போன்ற தீர்த்தங்கள் எல்லாம் இறைவன் அருளால் காலகாலம் உருவாக்கப்பட்டு மனிதனின் தீராத கொடிய பிணிகளை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள். ஆனாலும்கூட இதுபோன்ற இடங்களில் அநாகரீகமான மனிதர்கள் சென்று பல அனாச்சாரங்களில் ஈடுபட்டால் கட்டாயம் இறைவன் அருளை மாற்றிவிடுவார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றளவு பரிசுத்த உள்ளத்தோடு சென்று பரிபூரணமான சரணாகதியோடு இறைவனை வணங்கி அந்த தீர்த்தத்தை அருந்த கட்டாயம் நன்மைகள் உண்டு. கொடும் நோய்கள் தீரும்.