ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 98

அகத்திய மாமுனிவர் (குருநாதர்) பொதுவாக்கு

இறைவன் அருளைக் கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுக்கு நூறு எம்மை நம்பி எம் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் (சித்தர்கள்) இறைவனருளால் நல்ல வழி காட்டுவோம். உலகியல் ரீதியாக முன்னேற்றம் காட்டினால்தான் ஒருவனுக்கு நாங்கள் அனுக்ரஹம் செய்கிறோம் என்பது மிகவும் குழந்தைத்தனமான எண்ணம். நன்றாக எமது வார்த்தையை கவனித்து பொருள் கொள்ள வேண்டும். எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு (ஜீவநாடி) இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து விதவிதமான வாக்குகளைக் கூறி விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும் குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும் குணத்திலும் மனிதனைவிட மேம்பட்ட மாமனிதனாக இருக்கலாம் புனிதனாக இருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்ற வேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கிட்ட (சித்தர்கள்)கட்டளை. ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்ற வேண்டும் என்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கமாக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி அவனை மாமனிதனாக்கி அந்த மாமனித நிலையிலிருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையிலே சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ லோகாய (உலகியல் ரீதியாக) கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து எம் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தனாக்கி விடுவோம். சித்தனாக்கி விட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும்? அவன் இறையைகூட நாட தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்து போக வேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.