கேள்வி: பசுமாடு வளர்ப்பு பற்றி?
எல்லா உயிர்களையும் ரட்சிக்க வேண்டும் என்பது பொது விதி. அதிலும் ஆ (பசு) இனங்களை ஒரு மனிதன் நல்ல முறையிலே பாதுகாத்து உயர்வான முறையிலே சத்துக்களை கொடுத்து அதனை நன்றாக பராமரித்து ஒரு பசு மாட்டை நல்ல விதமாக வளர்த்த பிறகு அதன் கடைசி காலத்தில் அதிலே இனி அதனால் எந்த வித பயனும் இல்லை என்று ஒதுக்கப்படுகின்ற பசு மாட்டை எல்லாம் கொலை களத்திற்கு அனுப்பாமல் எவன் ஒருவன் நன்றாக உண்மையாக ஆத்மார்த்தமாக தன்னுடைய குழந்தையை போல் பராமரிக்கின்றானோ அவனுக்கு இதுதே கடைசி பிறவி எனலாம். அவன் ஒரு பசுமாட்டை உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால் அவன் பனிரெண்டு சிவாலயங்களை எழுப்பி கலச விழா செய்த பலனை அடைவான். பசு கன்றுக்குட்டி ஈன்றவுடன் மனிதனுக்குப் பால் தருவதில்லை. கன்றுக்குதான் பால் தருகிறது. பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள்தான். முதலில் கன்று திருப்தியாக திகட்ட திகட்ட உண்ட பிறகு, மிச்சத்தை தான் மனிதன் எடுக்க வேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம் கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பரிகாரமும் கிடையாது. ஆனால் இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் வாழ முடியுமா? என்று மனிதன் விதண்டாவாதம் பேசுவான். எனவேதான் பசுக்கள் காப்பகங்களுக்குச் சென்று உதவி செய்வது குறிப்பாக பரசுராம தேசத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பசுக்களை வாங்கி எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வளர்ப்பது மிகப்பெரிய புண்ணியமப்பா.
கோடிக்கணக்கான காலங்கள் யாகம் செய்தாலும் இமாசலத்தில் தவம் செய்தாலும் கிடைக்காத இறையருள் பசுக்களை பராமரிப்பதில் கிடைக்கும். அதிலும் பசுக்களால் இனி நமக்கு நன்மை இல்லை. அதனால் கொலை களத்திற்கு அனுப்புகிறோம் என்று அனுப்பப்படும் அந்த மாடுகளை எவன் அழைத்து வந்து பராமரிக்கிறானோ அவன் வேறு எந்த பூஜையும் செய்ய வேண்டாம். வேறு எந்த யாகமும் செய்ய வேண்டாம். அதை வளர்ப்பதே போதும். அது இறைவனிடம் அவனை அழைத்துச் செல்லும். ஒரு குழந்தையை தாய் தன் இடுப்பில் தூக்கி வைப்பதன் காரணம் அதன் நன்மையைக் கருதியே. பசுவின் நன்மையைக் கருதி அதை அடைத்து வைத்தால் அது பாவமல்ல. மனிதனின் நன்மையைக் கருதி பசுவை அடைத்து வைத்தால்தான் பாவம். கன்று குடித்த பிறகு மிச்சத்தை அபிஷேகம் செய்தால் அது பாவம் அல்ல. அதனால்தான் முன்காலத்தில் மன்னர்கள் ஒரு ஏற்பாடு செய்து ஆலயத்திற்கு அருகிலேயே ஒரு கோசாலை அமைத்து பாலை அபிஷேகத்திற்கு எடுத்துக் கொள்வார்கள். பசுவிற்கு பால் எதற்காகடா ஊறுகிறது? பெற்ற குழந்தை பாலை வயிறு முட்ட குடிக்க வேண்டும். அப்பொழுது யாராவது தடுத்தால் மனிதன் சும்மா இருப்பானா? ஆனால் இவன் மட்டும் எல்லா உயிர்களிடமும் அசுரன் போல் நடந்து கொள்வான்.