ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 614

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நம்பிக்கையின் அடிப்படையில் தான் பக்தியே பிறக்கிறது இறைவனை நம்பு என்பதற்காக ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒதுக்கி கொள்வது என்பது கூடாது. இந்த இறை நம்பிக்கையின் அளவு மூடத்தனமாக ஆகிவிடவும் கூடாது. அதே சமயம் நம்பிக்கையை விட்டு விலகும் வண்ணமும் ஆகி விடக்கூடாது. உடல்நலம் சரியில்லை என்றால் பிரார்த்தனை செய்வதோடு மருந்தினையும் ஏற்க வேண்டும். எப்படி ஒரு மருத்துவன் எழுதிக் கொடுத்த ஒரு மருந்தினை ஒரு பிணியாளன் நம்பிக்கையோடு ஏற்கிறானோ அதேபோலத்தான் ஆலயம் செல்வதும் பிரசாதம் ஏற்பதும் அதோடு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.

இறை தரிசனமோ சித்தர்களின் தரிசனமோ கிடைப்பது பிரார்த்தனையினாலும் புர்வ ஜென்ம புண்ணியத்தாலும். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் தானே நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரார்த்தனையும் ஒருவன் செய்கிறான். அது மட்டுமல்ல எத்தனையோ இடங்களுக்கு இறைவன் சென்று மகான்களின் வடிவிலும் சாதாரண மனிதர்கள் வடிவிலும் வேண்டிய உதவிகளை இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் ஒரு கடினம் என்னவென்றால் வந்தது இறை தான் என்று அந்த ஆன்மாவால் புரிந்து கொள்ள முடியாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 613

கேள்வி: விதியை வெல்ல என்ன வழி இருக்கிறது?

விதியை வெல்ல வேண்டும் என்கின்ற ஒரு விதி ஒருவனுக்கு இருந்தால் விதியை வெல்லலாம். பற்றற்ற ஞானிகளால் தான் விதியை வெல்ல முடியும். எனவே விதி நன்றாக இருக்கும் வண்ணம் வாழ்ந்து விட்டுப் போவதே விதியை வெல்லும் மார்க்கமாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 612

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு மனிதன் எமக்கு பிரியமானவன் எமது வழியில் வருபவன் என்றால் எமது வார்த்தைகளை உள்நிறுத்தி செவி கேட்டு செயல் நடத்திக் காட்ட வேண்டும். ஒரு செல்வந்தன் இருக்கிறான் அவன் தனக்கு பிரியமான ஒரு உதவியாளனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொழுது அவனுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவன் உதவியாளனுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆயினும் அந்த உதவியாளன் தவறுகள் ஏதேனும் செய்தால் அவனை அழைத்துச் சென்ற செல்வந்தருக்கு தானே அந்த கேவலம் ஏளனமும். அதுபோலத்தான் மிகப்பெரிய மகான்களின் உன்னத கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கும் எமக்கு எமது வழியில் வருபவன் என்று கூறிக்கொண்டு எமது வாக்கின் தன்மையை பிரதிபலிக்காமல் இருந்தால் அது எமக்கு ஏற்புடையதாக இராது. எம்மையும் ஏளனப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களுக்கு யாங்கள் பெயரளவுக்குத்தான் வாக்குகளை தருவோமே ஒழிய ஆத்மார்த்தமாக அல்ல. புத்தி சொல்லித் திருந்தவில்லை என்றால் அவன் விதிப்படி வாழட்டும் என்று விட்டுவிடுவோம்.

காலம் இடம் சூழல் சுற்றி உள்ள மனிதர்கள் வறுமை வளமை இல்லம் தொழில் இதில் எது சிக்கலாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அறம் சத்தியம் இறை பிரார்த்தனையை மறவாதே. இவற்றை பின்தொடர்ந்து கொண்டே வா. யாம் உன் அருகில் இருந்து கொண்டே இருப்போம். ஆசிகள் சுபம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 611

கேள்வி: இந்த உலகத்தை அழிக்க இறைவன் எண்ணிவிட்டாரா?

மனிதர்கள் குற்றங்கள் செய்தால் தடுப்பதற்கு சிறைச் சாலையை மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த சிறைச் சாலையே இல்லாத நிலை என்றாவது வந்து விடுமா? அப்படி என்றால் குற்றங்களே இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பொருளாகிவிடும். அதைப் போல ஆன்மாக்கள் செய்கிற தவறுகளுக்கு இந்த உலகில் பிறந்து ஏற்கனவே செய்திட்ட பாவங்களுக்கு தண்டனையாக அல்லது ஒரு விதமான துன்ப அனுபவத்தை நுகர்ந்து அந்த பாவங்களை கழிப்பதற்காகத்தான் பிறவிகள் தரப்படுகின்றன. அது விலங்கு பிறவியோ மனிதப் பிறவியோ தேவ பிறவியோ இந்த பிறவியாக இருந்தாலும் ஏற்கனவே சேர்த்த புண்ணியத்தையும் நுகர வேண்டும். பாவத்தையும் நுகர வேண்டும். அப்படி நுகர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ கூடங்களுள் இந்த பூமியும் ஒன்று. எனவே இப்போதைக்கு குற்றங்களே இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதால் இந்த பூமி என்னும் சிறைச் சாலையை ஒட்டுமொத்தமாக அழிக்க இறைவன் என்னும் எண்ணவில்லை. அப்படி ஒரு சூழலும் நிகழாது. பகுதி பகுதியாக அழிவுகள் ஏற்படும். அதற்கு காரணம் வேறு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 610

கேள்வி: திருப்பதியைப் பற்றி:

திருப்பதியைப் பற்றி எத்தனையோ மகத்துவங்கள் எல்லாம் கூற வேண்டுமப்பா. பெருமாளின் அம்சம் அங்கு இருக்கிறது என்பது உண்மை. அங்குள்ள வராகர் சன்னிதியில் வணங்கினால் குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு உதவும். அச்சன்னதியில் ஹயக்ரீவரும் அன்னை கலைவாணியும் அரூபமாக இருந்து தவம் செய்வதுண்டு. பெருமாளை வணங்குவதற்கு முன் வராஹரை வணங்க வேண்டும். திருப்பதி என்பது சாட்சாத் பூலோக வைகுண்டம் தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 609

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒருவனின் கைரேகையை பார்த்தே அவனுடைய திசா புக்தியைக் கூறி விடலாம். ஒருவனின் கண்களைப் பார்த்தே ஜாதகத்தை அளந்து விடலாம். ஒருவனின் ரோமத்தை வைத்தே அவன் இன்ன லக்னத்தில் பிறந்திருக்கிறான் என்று கூறிவிடலாம். இதையெல்லாம் தாண்டி ஒருவனை சந்திக்கும்போது அப்பொழுது அவனை சுற்றி நடக்கின்ற நிமித்தங்களை வைத்தே அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று கூறி விடலாம். நுணுக்கங்களுக்கும் அடிப்படை மனப்பக்குவம். எனவே மனதிலே உள்ள லோகாயத்தை தூக்கி விட்டெறி. நீயும் சகலத்தையும் கற்று தேர்ந்து ஒரு பரிசுத்த உன்னத நிலைக்கு செல்லலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 608

கேள்வி: வள்ளல் தன்மை என்றால் என்ன?

எனக்கு வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டு தருவது ஒரு சராசரி நிலைமை. எனக்கு இல்லை என்றாலும் நாளை நான் கடுமையாக பாதிக்கப்படுவேன் என்றாலும் தன்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டாலும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் பாதகமில்லை. இன்று இந்த கணம் குறிப்பாக யாருக்காவது பயன்படும் என்றால் உடனடியாக அதை தருவதை தவிர வேறெதுவும் இல்லை. அடுத்த கணம் உயிர் இருக்குமோ? இருக்காதோ? நாளை நடப்பதை யார் அறிவார்? அடுத்த கணம் மனம் மாறலாம். எனவே சட்டென்று உடனடியாக தந்து விட வேண்டும். யோசித்து தந்தால் அது தர்மம் அல்ல. அந்த தர்மத்தில் குறை வந்துவிடும். ஒருவன் வாய்விட்டு உதவி என்று கேட்ட பிறகு தருவது கூட சற்றே குறைந்த தர்மம்தான். பிறர் குறிப்பறிந்து எவன் கொடுக்கிறானோ அவன்தான் உயர்ந்த தர்மவான். உயர்ந்த வள்ளல்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 607

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இயம்புங்கால் ஒரு மனிதனின் நல்ல எண்ணங்கள் செயல்கள் ஒரு ஆரோக்கியமான அதிர்வலைகளை அவனைச் சுற்றி உண்டாக்கும். கற்றாரை கற்றாரே காமுருவர் என்பது போல நல்லாரை கண்டவுடன் சந்தோசமும் மீண்டும் மீண்டும் இவனுடன் பழக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். நல்ல சிந்தனையற்ற ஒரு மனிதன் நல்லவரோடு பழகப் பழக காந்தமற்ற இரும்பு காந்தத்தோடு சேர்ந்து தானும் காந்தமாவது போல அவனுக்குள் நல்ல எண்ணங்கள் இடம் மாறும். ஒரு தனவானிடம் எவ்வளவு நாள் பழகினாலும் அந்த தனம் இவனிடம் வந்து விடாது. அழகான தோற்றம் உடையவனிடம் அழகற்ற ஒருவன் பல ஆண்டு பழகினாலும் அந்த அழகு இவனை வந்தடையாது.

ஆனால் நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனோடு பழக்கத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த அதிர்வலையின் தாக்கத்தால் மெல்ல மெல்ல இவனிடம் வந்தடையும். எனவே சதா சர்வ காலமும் மனதிலேயே சினமும் வாயிலேயே தகாத வார்த்தைகளும் பிறரை பற்றி குறை கூறுவதுமாக இருந்தால் பிறகு அதுவே இயல்பாகி சமாதானமாகி பிறகு அதுதான் சரி என்றாகி பிறகு மனமும் புத்தியும் வாக்கும் எண்ணமும் செயலும் அமைந்துவிடும் என்பதால் சதாசர்வ காலமும் இறை சிந்தனையில் மனம் லயிக்க பயிற்சி எடுக்க வேண்டும். இதுபோல் நிலையை உயர்த்த உயர்த்த உயர்த்த உயர்த்த மனம் பக்குவமடைந்து பிறகு அரிவை என்ற நிலை தாண்டி சித் என்ற உன்னத நிலை அறிவு அவனுள் மலரிடத் துவங்கும். சித் எனப்படும் அந்த சித்தம் தெளிந்தால்தான் உண்மையான சித்தர்களின் வழி வாக்கு யாம் எதை ஏன் எந்த காலகட்டம் உரைக்கிறோம் என்பது புலப்பட துவங்கும். எனவே பாவத்தை நீக்குவதற்கு போராட வேண்டும். பாவம் செய்யாமல் இருப்பதற்கு போராட வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 606

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவன் அருளைக் கொண்டு உரைக்கின்றோமப்பா. இது போல் எந்த மாந்தனாக இருந்தாலும் இயம்புங்கால் இறை வணங்கி அறம் தொடருவதோடு சத்தியமும் கடுமையாக கடைபிடிக்கத்தான் நல்வாழ்வு. அதனைத் தொடர்ந்து முன் ஜென்ம பாவங்கள் குறைவதும் புண்ணியங்கள் சேர்வதுமாக வாழ்வு இருக்குமப்பா. அப்பனே இவையோடு மட்டுமல்லாமல் வெறும் தர்மமும் பூஜையும் சத்தியமும் மட்டுமல்லாமல் ஒரு மனிதன் இவ்வாறெல்லாம் வாழத் தொடங்கும் பொழுது அதுபோல் வழியிலே தடையின்றி செல்லும் பொழுது அந்த மாந்தனுக்கு பல்வேறு ஏளனங்களும் அவமானங்களும் நேரிடும். அது போல காலத்திலேயே அன்னவன் சினம் கொள்ளாமலும் பிறர் இவன் மனதை வருந்தும் வண்ணம் நடக்கும் பொழுது மிக மிகப் பொறுமையோடும் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் இது வெறும் வார்த்தை தான் என்று எண்ணி அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு வார்த்தைக்கு தான் பொருள் என்று மனித சமுதாயமே ஒரு பொருளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த பொருளை பிடித்துக் கொண்டு இவனும் மன வேதனைப்படுவது என்பது தேவையற்ற ஒன்றாகும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் உயர்வாக எண்ணினாலும் தாழ்வாக எண்ணினாலும் அது அவனுக்கு மன சங்கடத்தை தந்தாலும் அவன் உண்மையிலேயே நல்லவனாக நடந்திருக்கும் பொழுது அவனை வேண்டுமென்றே இடர்படுத்தி அவன் மனம் புண்படும் வண்ணம் பேசும் பொழுதும் அவனோடு வேறு மனிதனையும் பழக விடாமல் தடுக்கும் பொழுதும் அறிய வேண்டும் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் வாழ்விலே சர்வ சாதாரணம் என்று எண்ணி அமைதியாக இருக்க பழக வேண்டும். கர்மா வசப்பட்டு சிக்கித் தவிக்கும் மனிதனானவன் சுய சிந்தனை அறிவு எல்லாம் இழந்து சதா சர்வ காலமும் தன்னுடைய சுகத்தை மட்டும் பிடிவாதமாக வைத்துக் கொள்ளும் பொழுது அது கட்டாயம் ஒருவதலை பட்சமாக தான் இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 605

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

சித்தன் இன்று பகர்ந்தால் நாடு முழு இனம் என்பது கிடையாது. வேறு தேசத்தில் இருந்து இங்கும் இங்கிருந்து வேறு தேசங்களுக்கும் சென்று மனிதர்களோடு மனிதர்களாய் பணியாற்றுவார்கள். இங்கு மனிதனாகப் பிறந்து தன்னுள் இருக்கும் தெய்வீக ஆற்றலை உணர்ந்து கொண்ட பிறகு எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். இதுதான் சொந்த இடம் என்று சித்தர்களால் சொல்ல இயலாது. ஒரு சித்தர் என்பவரின் ஆத்மா உயர் நிலையில் இருக்கக் கூடிய ஒரு புண்ணிய ஆத்மாதான். ஆக எப்படிப் பார்த்தாலும் அந்த மேலுலகம் இறை உலகத்திலிருந்து வரக்கூடியவர்கள் தான் சித்தர்கள். போகருக்கு வேறு ஒரு சிறப்பு இருக்கிறது தெரியுமா? போகர் தான் இயேசுவாகப் பிறந்தார். இப்பொழுது சொல் போகருக்கு சீன தேசமா? இந்திய தேசமா? அல்லது வெளி தேசத்தில் வாழ்ந்த சிலுவைக்காரனா? அல்லது கைலாயமா? பழனியில் தான் போகரை காணலாம் என்று சொன்னால் அது தவறு. பழனியிலும் காணலாம் என்றால் சரி.