இறை காத்திருக்கிறது. ஆனால் இறையிடமிருந்து அருளைப் பெரும் பக்குவம்தான் மனிதனுக்கு இல்லை. முதலில் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் அது இன்பமோ துன்பமோ ஒரு மாயவலை தான். இதனைத் தாண்டி இறைவனிடம் போகும் போது எனக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நீ தான் வேண்டும் என்று உளமாற ஒரு மனிதன் வேண்டத் தொடங்கி விட்டாலே அவனை விட்டு வினைகள் ஒவ்வொன்றாக ஓடத் துவங்கும். பிறகு அவனுக்கு தேவைகள் என்று எதுவும் இருக்காது. தேவைகளுக்காக இறைவனை அணுகினால் கடைசி வரை ஒரு தேவை போக இன்னொரு தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். தேவைகளுக்கு வழிபாடு என்பதை விட ஒரு மனிதன் இறை மறுப்புக் கொள்கையிலேயே இருந்து விடலாம்.
எம்மை நம்பி வந்து இந்த ஜீவ அருள் நாடியில் உரைப்பது சித்தர்கள்தான் என்று நம்புபவர்களுக்கு மட்டும் இந்த உபதேசம் பொருந்தும். சித்தர்களுக்கு என்ன? உரைத்துவிட்டுப் போவார்கள். நேரடியான வாழ்க்கையை எதிர் கொண்டால் அவர்களுக்கு தெரியும். பிள்ளைகள் படிப்பு தாரத்தின் உடல்நிலை சொந்த இல்லம் போன்ற எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தை எல்லாம் தர்மத்திற்கு செலவழித்து விட்டால் நாளை பிள்ளைகள் கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் வறட்டு வாதம் செய்தால் நல்ல பலனை இழக்கப்போவது மனிதன்தான்.
அன்றாடம் அல்பொழுதிலே (இரவிலே) துயில் கொள்ளும் பொழுது யோசிக்க வேண்டும். இன்று நாம் எத்தனை பேருக்கு நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தையால் ஆறுதல் சொன்னோம்? எத்தனை பேருக்கு உடலால் நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு நம் கைப் பொருள் கொண்டு உதவி செய்தோம்? எத்தனை ஆத்மாக்களை குளிர வைத்தோம்? இன்னும் எத்தனை பேருக்கு செய்ய வேண்டி இருக்கிறது? என்றெல்லாம் பட்டியலிட்டு பிறகு தம்மை தாமே செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் வேண்டுமே. உறவுக்கும் தாரத்திற்கும் பிள்ளைகளுக்கும் நெருங்கிய நட்புக்கும் செய்வது தர்மத்தில் வராதப்பா. அது கடமையில் வருமப்பா. இரத்த தொடர்பு இல்லாதவர்களுக்கு செய்யும் தர்மம் இவனுக்கு செய்தால் நமக்கு பிரதிபலனாக என்ன செய்வான்? என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதே தர்மம் ஆகும். எனவே அறத்தின் தன்மையை சூட்சுமத்தை ஒரு மனிதன் உணர்ந்து கொண்டால் அவனுக்கு துன்பம் இல்லை துயரம் இல்லை சிக்கல் இல்லை. மற்றவர்கள் இப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டுப் போகட்டும் ஆன்மீகவாதிகள் எப்படி வேண்டுமானாலும் வழி காட்டட்டும்.
மீண்டும் மீண்டும் யாம் தர்மத்தை உபதேசிப்பதின் காரணம் என்ன? இந்த கலி காலத்திலே கடுமையான தவம் கோட்பாடுகள் வனாந்திரத்திலேயே செய்யும் பூஜைகள் இவைகளை எல்லாம் பின்பற்ற இயலாது. எத்தனையோ இடர்பாடுகளில் ஒரு மனிதன் கலியுகத்தில் வாழ வேண்டியிருக்கிறது. இந்த இடர்களின் வழியே அவன் இறைவழி செல்ல வேண்டும். கர்மங்களை குறைக்க வேண்டும் என்றால் நியாயமான நேர்மையான நீதியான வழியிலே தர்மத்தை துவங்கி விட வேண்டும். காலநேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சரி தர்மம் செய்கிறேன் அதை வாங்கிக் கொண்டு ஒருவன் நியாயமற்ற முறையிலே செலவு செய்தால் என்னவாகும் என்றெல்லாம் ஆய்ந்து கொண்டிருக்கக் கூடாது. ஒருவனுக்கு கஷ்டம் என்று அறிந்த உடனே தர்மம் செய்து விட வேண்டும். அவன் வாய்விட்டு வினவும் வரை காத்திருக்கக் கூடாது. தர்மத்தை நேரடியாக செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் நேர்மையாக தர்மம் செய்யும் அமைப்புகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கலி காலத்திலே பூசைகள் கடினம் என்றுதான் தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள் இயலாதவர்களுக்கு தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வர வேண்டும். ஒரு நாள் போய் விட்டால் வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே ஒவ்வொரு தினமும் கழியும் போதும் அன்றைய தினத்தில் நாம் எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது? எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம் உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால் எண்ணங்களால் பொருட்களால் மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த அதிகப்படுத்த கூடவே இறையருளும் எமது ஆசியும் தொடரும்.
ஓதிமலையில் நாள் கோள் வேலை செய்யாது. ஏன் என்றால் முருகன் கோள்களுக்கு அப்பாற்பட்டவன். இதை உணர அங்கு (மலைமேல்) ஓர் இரவு படுத்து இருந்து பார். ஆனாலும் தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. ஓதியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? (சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து பிரணவத்தின் பொருளை உரைத்ததால்). அப்படி இருக்க அங்கே கிரகங்கள் செயல்படுமா?
ஓதிமலை முருகனைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கோவில் மற்றும் மலை புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
கேள்வி: அய்யனே திருவண்ணாமலை திருத்தலத்தில் நடக்கும் மகேஷ்வர பூஜையின் ரகசியத்தையும் அதன் மேனலான பலன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்க வேண்டுகின்றோம்?
எதை என்று அறிய அறிய நிச்சயம் அண்ணாமலையில் (திருவண்ணாமலையில்) செய்யும் உதவிகள் நிச்சயம் பல ரிஷிகளும் சித்தர்களும் தேவர்களும் வந்து உட்கொள்வார்கள். அண்ணாமலையில் (திருவண்ணாமலையில்) செய்த புண்ணியம் பின் இமயமலையில் எதிரொலிக்குமாம். இதனை பற்றி தீவிரமாக நிச்சயம் எடுத்துரைப்பேன் பொறுத்திருந்தால்.
இந்த உலகில் உள்ள அனைவருமே இறைவனின் பிள்ளைகள். அதில் ஒரு பிள்ளைக்கு அதிக செல்வத்தை கொடுத்ததன் காரணம் வாடுபவனுக்கு கொடுத்து உதவுகிறானா? என்று சோதிக்கத்தான். தர்மத்தை செய்து கொண்டே இருங்கள். அது புண்ணியவழி என்ற எண்ணம் இல்லாமல் செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கு எல்லாம் நேரிய வழியில் பொருள் ஈட்டி தந்து கொண்டே செல்லுங்கள். செல்வம் உங்கள் பின்னால் வரும். இதனை சோதனை மார்க்கமாக கூட செய்யலாம். ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் செல்வந்தர்கள் குறைவு. வறுமையாளர்கள் அதிகம். கொடுத்து கொடுத்து வறுமை அடையும் விதி இருந்தாலும் பாதகம் இல்லை. கொடுத்ததினால் ஒரு வறுமை நிலை வந்தால் அதுதான் அந்த உலகத்திலேயே உச்சகட்ட வளமை. அவன்தான் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கிறான் என்பது பொருளாகும். எனவே இந்த கருத்தை மனதில் வைத்து இனி வருகின்ற ஒவ்வொரு கணத்திலும் தேடித்தேடி தர்மம் செய்வதை ஒரு லட்சியமாக கொண்டு விட்டால் அவர்களுக்கு எம்ஆசி என்றும் தொடரும். ஆசிகள் சுபம்.
எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் பக்குவப்பட வேண்டும். எங்கள் கருத்துக்களை உள்வாங்கி உள்வாங்கி அவரவர்கள் சுய ஆய்வு செய்து சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று ஆய்ந்து தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனம் செம்மையாக வேண்டும். மனம் உயர வேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம் மணக்கின்ற மனமாக இருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட மனதிலே தான் இறை வந்து அமரும்.
கேள்வி: கோயிலில் எத்தனை முக தீபங்கள் ஏற்ற வேண்டும்?
கோயிலில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக பூர்வீக தோஷம் குறையும் இது அடிப்படை. ஆனாலும் ஒவ்வொரு மனிதனுனின் அன்றாட கலியுக வாழ்க்கையில் நடைமுறை என்ற ஒன்று உள்ளது. அதிக எண்ணிக்கையில் தீபங்களை வாங்கி ஏற்றக் கூடிய வாய்ப்பும் சூழலும் இடவசதியும் இருந்தால் எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம். அதில் பயன் உண்டு. இறையருளும் கூடும். ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும் பொழுது பஞ்சாட்சரம் ஓதித்தான் அதைக் கையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய இயலாது. அது போல் விதி மதி என்பதையெல்லாம் தாண்டி பிரார்த்தனை என்ற எல்லைக்கு வந்து விடு. அது உன்னை கால காலம் காத்து நிற்கும். சென்றது செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல் உள்ளுக்குள் பார்த்து பழகு. பழக பழக விதி உனக்கு சாதகமாக மாறும். பக்குவம் பெறுவதற்குத் தான் அனுபவங்கள். அந்த அனுபவங்கள் தான் மனோ பலத்தை அதிகரிக்கும் வழியாகும். மனோபலம் இல்லாது தெய்வ பலம் கூடாது. மனோ பலத்தை உறுதி செய்யவும் வளர்த்துக் கொள்ளவும் துன்பங்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதுபோலத்தான் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் மனிதனை விரட்டுகின்றன. இவற்றைக் கண்டு மனம் தளராது எதிர்த்து இறை அருளோடு போராடினால் இறுதியில் நலமே நடக்கும். உனது வாழ்விலும் கடை வரையிலும் நலமே சேரும். இது போல் இயன்ற பிரார்த்தனைகளை தர்மங்களை செய்து கொண்டு எமது வழியில் தொடர்வதை தொடர்க. யாவும் நலமே நடக்கும். பூரண நல்லாசிகள்
மனிதனின் எதிர்கால வாழ்வினை அறிய அருள் வாக்கோ ஜோதிடமோ பார்ப்பதில் தவறில்லை. ஆயினும் மனிதர்களின் முன் ஜென்ம பாவத்தின் அடிப்படையில் அமைவதுதான் அவன் வாழ்வு. எம்மை நாடுவதாலோ எமது வாக்கை அறிவதாலோ மட்டும் உடன் உயர்ந்த பலன் கிட்டி விடாது. விதி முதலில் அவன் வேலையை செய்து கொண்டே இருக்கும். அதன் போக்கிலே சென்று தான் திசை திருப்ப வேண்டும்.
விதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு பிறவிலும் செய்த பாவ புண்ணிய அளவை வைத்து நடப்பு பிறவியிலேயே அதற்கு ஏற்றவாறு தாய் தந்தை உறவினர் நட்பு பணி கல்வி ஆரோக்கியம் போன்றவை முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. இதில் விரும்பக் கூடியதை மனிதன் ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான். விரும்பக் கூடாததை மட்டும் மாற்றினால் நன்மை என்று எண்ணுகிறான். அது தவறில்லை என்றாலும் விதி அதற்கு அனுமதி தராது. ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் தர்மங்கள் செய்து தான் பிரச்சனைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வரவேண்டும். ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வு வேறொரு மனிதனுக்கு நடக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனின் கர்மா பாவங்கள் தனித்தனியான அளவீடுகளைக் கொண்டதாக இருக்கிறது. எம்மை நாடுவதும் வாக்கை அறிவதும் அறிந்த பிறகு அதனை பிழறாமல் செய்தும் எந்தவித மாற்றமும் இல்லை என்று வருந்துகின்ற மனிதர்கள் பலர் உண்டு. அங்கும் விதி கடுமையாக உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். மனச் சோர்வு கொள்ளாமல் இறைவனிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். துன்பமே இல்லாத வாழ்க்கை என்று ஒன்றுமே கிடையாது. எப்படி இன்பம் ஒரு மாயையோ துன்பமும் ஒரு மாயைதான். ஆக இவ்விரண்டையும் தாங்கக் கூடிய மனோ பக்குவத்தை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் ஞான நிலை என்று பெயர். அந்த ஞானத்தை தான் ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும் என்று யாங்கள் எதிர்பார்க்கிறோம்.