கேள்வி: துன்பங்களிலிருந்து வெளிவருவற்கான வழி என்ன?
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இறைவனின் மாற்று வடிவங்கள் என்பதை உணர்வதும் தனக்குள் உள்ள அண்ட சராசர பேராற்றலை உணர முயல்வதும் தான் துன்பமின்றி வாழ்வதற்கு ஒரு வழியாகும். அதற்கு ஆன்மாவை படிப்படியாக எடுத்துச் செல்வதற்குத்தான் யாம் காட்டுகின்ற வழிமுறைகள் நெறிமுறைகள் பக்தி வழிகாட்டுதல் ஆகமங்கள் தர்ம காரியங்கள். ஆனால் துன்பமில்லாத நிலையென்றால் அங்கு அவன் மனநிலை அதுபோல் மாறிவிடுமே தவிர வாழ்வு நிலை மாறாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு நோக்கமானது மாறிக் கொண்டே இருக்கும். அவன் நிம்மதியை ஒத்திப் போட்டுக் கொண்டே செல்வான். சந்தோஷத்தை ஒத்தி வைப்பது தானே விதியின் வேலை. மாயையின் வேலை. எனவே இவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது தான் மனிதனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதுபோல் ஒரே தினத்திலோ ஒரு சில ஆண்டுகளிலோ இதை செய்ய இயலாது என்பது எமக்கு தெரியும். அந்த ஞானத்தை நோக்கி பயணத்தை துவங்க வைப்பது தான் எமது பணியாக உள்ளது. ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவத்தை குறைத்தால் தான் இதுபோல் விஷயமே அவன் சிந்தனைக்கு எட்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தர்மம் செய்யாமல் ஒருவன் பாவங்களை குறைக்கவே இயலாது. படைப்பெல்லாம் இறைவனுக்கே சொந்தம். இந்த கருத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அசைபோட துன்பங்களிலிருந்து வெளி வருவதற்கான வாய்ப்பு ஒவ்வொரு மனிதருக்கும் கிட்டும். ஆசைகள் சுபம்.
இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால் லலிதா சகஸ்ரநாமத்தை ஒன்று மூன்று ஐந்து மண்டலம் (ஒரு மண்டலம் என்பது 48 நாள்) பிரார்த்தனையாகவோ யாகமாகவோ ஆலயத்திலோ இல்லத்திலோ அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றுமப்பா. இது பக்தி வழி. யோக மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால் குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பை கற்றுக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து நித்தமும் உச்சரித்து வந்தால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது எழுவதை உணரலாம். எனவே எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும் அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்புமப்பா.
ராம நாமம் ஜெபித்தார்கள். சம்பாதிக்கு சிறப்பு முளைத்தது என்றெல்லாம் படிக்கும் பொழுது இது சாத்தியமா? என்று கேட்கத் தோன்றும். அப்படியானால் ஒரு பறவையைப் பிடித்து சிறகுகளை அரித்துவிட்டு ராம நாமம் ஜெபித்தால் சிறகுகள் முளைக்குமா? என்றால் ராம நாமம் சக்தி உடையது. சிறகு என்ன கரங்கள் கால்கள் கூட ஒரு மனிதனுக்கு முளைக்கும். ஆனால் நாம ராமத்தை சொல்கிறவர்கள் பக்குவம் அடைந்து ஆத்ம சுத்தியோடு பற்றற்ற தன்மையோடு பல காலம் ராம நாமத்தை ஜெபித்து ஜெபித்து ஜெபித்து சித்தி பெற்றிருந்தால் உடனடியாக நடக்கும். மனம் ஒன்றாத பிரார்த்தனைகள் பலனளிக்காது. மந்திரங்களும் வழிபாடுகளும் ஒன்று தானப்பா. அதை கையாளும் மனிதனைப் பொறுத்துதான் உடனடி முடிவும் தாமதமான முடிவும். எனவே விளைவு எப்படி இருந்தாலும் பாதகம் இல்லை என்று தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்ய செய்ய பலன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும்.
இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல் பிரதமை என்று ஒரு திதி துவங்கினாலும் கூட பல்வேறு காலம் சில அன்பு சேய்களின் விருப்பத்திற்கு இணங்க யாம் இதுபோல் பொழுது நெடிய பொழுது வாக்கை பகிரலாம் என்று எல்லாம் வல்ல பரம்பொருளின் அருள் அனுமதி பெற்று இதுபோல் வாக்கை ஓதுகின்ற தருணத்திலே என் முன்னே அமர்ந்து வாக்கை கேட்கின்ற அனைவருக்கும் யாம் இறைவனின் அருளைக் கொண்டு பரிபூரண நல்லாசியை இத்தருணம் இயம்புகின்றோம். இதுபோல் எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு லோகாய ரீதியாக எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அந்த பிரச்சனைகளின் மூல வேர் பாவங்கள் தான். இதனை மனிதர்கள் பல்வேறு தருணங்களில் மறந்து விடுகிறார்கள். எங்கே பாவம் தொடர்கிறதோ அங்கே எல்லா வகையிலும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவே தான் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும். உளைச்சல்கள் இல்லாமல் வாழ வேண்டும். மெய்யான நிம்மதியோடு வாழ வேண்டும். என்று எண்ணுகின்ற மாந்தர்கள் எந்த நிலையிலும் துன்பங்களை பிறருக்கு எந்த வழியில் செய்யாமல் இருக்க பழக வேண்டும். கடினம் தான். மனிதப் பிறவி எடுத்துவிட்டால் அறிந்தும் அறியாமலும் பாவங்களை செய்ய நேரிடுகிறது. அறிந்த பிறகு மீண்டும் மீண்டும் அதுபோல் பாவ நினைவை பாவ செயலை பாவ வாக்கை நினையாமல் செய்யாமல் கூறாமல் இருப்பதே இறையருள் பெறுவதற்கு உகந்த வழியாகும்.
இதுபோல் நிலையிலேயே பல்வேறு மனத்தாங்கலோடு இதுபோல் ஓலையிலே வாக்கை அறியலாம் என்றும் அப்படி அறிந்து வாழ்க்கையில் நல்ல பலனை பெறலாம் என்றும் பல்வேறு அன்பர்கள் ஒருபுறம் இருக்க யாமோ இன்னும் பொதுவாகத்தான் வாக்கைப் பகிருவோம். மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு வாக்கை பகர மாட்டோம் என்று கூற வாழ்க்கையிலே காலம் சென்று கொண்டு இருக்கிறது. சித்தர்கள் மௌனமாக இருந்தால் எவ்வாறு நமது வாழ்வியல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது? என்று மனிதர்கள் எண்ணலாம். தொடர்ந்து வாக்கை கூறக்கூடாதா? என்று இந்த ஓலையே நம்பக் கூடியவர்கள் வினலாம். ஏற்கனவே கூறி இருக்கிறோம். இப்பொழுதும் கூறுகிறோம். இனியும் கூறுவோம். இதுபோல் இறைவன் அருளால் எவன் ஒருவன் பரிபூரண சரணாகதியில் இருக்கிறானோ எவன் ஒருவன் பரிபூரண சத்தியத்தில் திளைக்கிறானோ எவன் ஒருவன் பரிபூரண தர்மத்தில் வாழ்கிறானோ அவனுக்கு யாம் என்றென்றும் தோன்றாத் துணையாக இருந்து இறைவன் அருளால் நன்மைகளை செய்து கொண்டே இருப்போம்.
இதுபோல் ஒரு மனிதன் சுய விழிப்புணர்வு பெறாதவரை இறைவனே நேரில் தோன்றினாலும் பலனேதுமில்லை. இதற்கு அசுரர்களே சாட்சி. அசுரர்கள் பலரும் தெய்வத்தை (நேரில்) கண்டவர்கள்தான். ஆனாலும் முடிவில் என்ன நடந்தது? என்பது புராணத்தை ஓதியவர்களுக்குத் தெரியும். எனவே இறைவனை தரிசித்தாலும் இறைவனை உணர்ந்தாலும் ஒருவனின் மனதிலே மெய்யான மெய்யுணர்வும் சாத்வீக எண்ணங்களும் சத்ய எண்ணங்களும் தர்ம எண்ணங்களும் இல்லாதவரை ஒரு மனிதனால் மேலேற இயலாது. மனிதர்கள் வினவலாம். இறைவனைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு மனிதனுக்கு பக்குவம் வந்து விடக்கூடாதா? நீக்கமற நிறைந்துள்ள இறைவனை உணர்ந்தாலே ஒரு மனிதன் மேலேறி வர இயலாதா? என்று. இறைவனும் யாமும் அப்படித்தான் எண்ணி மனிதர்களோடு உறவாடுகிறோம். ஆனால் மனிதர்கள் எல்லா நிலையிலும் தன் நிலைக்கு ஏற்ப தான் இறைவனையும் எம்மையும் எதிர்பார்க்கிறார்களே தவிர எம் நிலைக்கு ஏற்ப அல்ல என்பது தான் சூழலாகும்.
வெறும் தத்துவார்த்தமாக கூறிக்கொண்டே சென்றால் கட்டாயமாக பலருக்கு அது ஆர்வத்தை தூண்டது என்பது எனக்கு தெரியும். ஆக சுருக்கமாக கூற வேண்டும் என்றால் தாங்க முடியாத துன்பம். உடல் நோய் வாட்டுகிறது. எத்தனை மருத்துவ சிகிச்சை செய்தாலும் தீரவில்லை என்பவர்களுக்கு தருணம் யாங்கள் கூறுகிறோம். அன்றாட அவர்கள் விரும்புகின்ற எந்த தெய்வத்திற்கும் இயன்ற வழிபாட்டை செய்யலாம். பாதகமில்லை. இருந்தாலும் குறிப்புக்காக தன்வந்திரியை நாங்கள் கூறுகிறோம். தன்வந்திரி மந்திரத்தை அன்றாடம் இரவிலே உறங்குவதற்கு முன்னால் குறைந்தபட்சம் ஒரு நாழிகையாவது உருவேற்றி விட்டு ஒவ்வொரு மனிதனும் உறங்கச் சென்றால் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடி என்றால் எந்த இறை ரூபத்தையும் வணங்கலாம். குறிப்புக்காக கூறுகிறோம். அன்னை மகாலட்சுமியை வணங்க நன்மையுண்டு. அன்றாடம் விநாயகரை வணங்கு. முருகரை வணங்கு. பைரவரை வணங்கு. நவக்கிரகங்களை வணங்கு என்றெல்லாம் நாங்கள் கூறுகிறோம். நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் ஒன்றுதான். வடிவங்கள் வேறு என்று எமக்கு தெரிந்தாலும் வருகின்ற மனிதனை படிப்படியாக மேலே அழைத்துச் செல்வதற்காக தான் இது போன்ற விதவிதமான வழிபாடுகளை நாங்கள் கூறிக் கொண்டே இருக்கிறோம்.
ஆக சுருக்கமாக கூறப்போனால் எத்தனை துன்பத்திலும் மனதை தளர விடாமல் சோரவிடாமல் இறை வழிபாட்டில் தம்மை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற தர்ம காரியங்களை செய்து கொண்டு தன் கடமைகளை நேர்மையாக ஒருவன் ஆற்றி வந்தால் கட்டாயம் விதியும் மெல்ல மெல்ல மாறி அவனுக்கு நன்மையை செய்யும். தர்மம் என்றால் ஏதோ லகரம் ககரம் செலவு செய்ய வேண்டும் என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம். அவனவன் சக்திக்கேற்ப செய்தால் போதும். ஏதும் இயலாதவர்கள் எறும்பிற்குக் கூட உணவு தரலாம் அல்லவா. எனவே பிறருக்கு ஈவதெல்லாம் மறைமுகமாக ஒருவன் தனக்குத்தானே ஈவதுதான். எனவேதான் இந்த ஓலையில் யாம் அடிக்கடி தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இதுபோல் நிலையிலே எம்முன்னே அமர்ந்துள்ள அனைத்து சேய்களுக்கும் மீண்டும் நல்லலாசி. இதுபோல் அவரவர்கள் வினைப் பயன் அவர்களை எவ்வாறு தூண்டுகிறதோ அவ்வாறு வினாக்களை எழுப்பட்டும் என்று கூறி இத்தருணம் மீண்டும் நல்லாசி கூறுகிறோம்.
கேள்வி: குருநாதர் பல கேள்விகளுக்கு மௌனமாக இருக்கிறார்?
இறைவன் அருளால் ஸ்ரீ ராமபிரானுக்கு அபிஷேகம் நடந்தது. யாராவது வந்தார்களா? ஏதாவது அங்கு அதிசயம் நடந்ததா? இது குறித்து குருநாதர் ஏதும் கூறவில்லையே? இதுகுறித்து ஏதாவது கூறினால் நன்றாக இருக்குமே. ஆஞ்சநேயர் வந்தாரா? கருடாழ்வார் வந்தாரா? சிறிய திருவடியா? பெரிய திருவடியா? அல்லது ராம பிரானே வந்து அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டாரா? இவையெல்லாம் நியாயமான வினாக்களாக இருந்தாலும் இது போன்ற வினாக்களுக்கு அதிலும் இத்தருணம் யாங்கள் ஏதும் கூற விரும்பவில்லை. இனி அவரவர்களே இதுபோன்ற இறைவழிபாட்டில் புரிந்து கொள்ளும் வண்ணம் நிகழ்ச்சி நடக்கும் வண்ணம் அவரவர்களும் தன் மனதை லயப்படுத்தி பூஜை செய்தால் பலன் உண்டு. அந்த பலனை அங்கேயே உணரக்கூடிய ஒரு தன்மைக்கு அனைவரும் ஆட்பட வேண்டும் என்று நாங்கள் மௌனம் காக்கிறோம்.
கேள்வி: இறை தரிசனம் கிட்டும் போது நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஐயனே:
இறைவனே தரிசித்த பல அசுரர்களின் கதைகளை மனதிலே எண்ணி கொள்ள வேண்டும். இறைவனை தரிசித்தும் அசுரர்கள் திருந்தவில்லை. தன் அசுரத்தனங்களை விடவில்லை. எனவே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை வைக்கும் பொழுதே இறைவா நீ என்னை ஆட்கொண்டு விடு. நீ வேறு நான் வேறு என்று இல்லாமல் எப்படி நதி தனியாக இருக்கும் வரை நதி அது கடலில் கலந்து விட்டால் அது நதி இது கடல் என்று பிரிக்க முடியாதோ அதை போல் என்னை ஆக்கிவிடு என்ற ஒரு பிரார்த்தனையை வைத்தால் போதும்.
கேள்வி: காலம் தானாக சுழற்சி பெறுமா? அல்லது மறுபடியும் அதை இறைவன் ஆரம்பத்திலிருந்து இயக்குவாரா?
இறைவனின் கருணையாலே வளைந்த நிலையிலே உள்ள ஆரத்திற்கு எது ஆரம்பம்? எது முடிவு? அதைப் போலத்தான் இந்த அண்ட சராசரமும் இறைவனின் இயக்கமும் இன்று ஆரம்பம் போல் தோன்றும். இன்னொன்று முடிவு போல் தோன்றும். முடிவிலும் ஆரம்பம் இருக்கும். ஆரம்பத்திலும் முடிவு இருக்கும்.
கேள்வி: நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் மூலம் பரமசிவன் திருவிளையாடல் புரிந்ததன் தாத்பர்யம் குறித்து விளக்குங்கள்:
எத்தனை உயர்வான நிலையில் இருந்தாலும் கூட மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் கூட அவன் செய்கிற தவறை ஆதரிக்கக் கூடாது. தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகம்.
கேள்வி: ஐயனே தவிர்க்க முடியாமல் ஒரு பாம்பை கொல்ல நேர்ந்தால் என்ன செய்வது?
அப்படித்தானப்பா சித்தர்கள் இருக்கும் பகுதிக்கு மனிதர்கள் வந்து விட்டால் நாங்களும் தவிர்க்க முடியாமல் அவர்களை கொன்று விடலாமா? பாம்புக்கு தெரியுமா? பாம்பு திட்டமிட்டு ஏதாவது செய்கிறதா? ஆனால் திட்டமிட்டு பொறி வைத்து அதை பிடித்து தோலை உரித்து வியாபாரம் செய்வது யார்? எனவே வாகனத்தில் செல்லும் பொழுது கண் பார்வையில் சிக்காமல் சில ஜீவன்களை கொல்ல நேர்ந்தால் கூட பிரம்மஹத்தி தோஷம் அவனுக்கு பீடிக்கும் என்றால் மற்றவைகளுக்கு நீயே யோசித்துக்கொள். என்றாலும் ஒரு ஜீவன் ஒரு மனிதன் மூலம் விதி முடிய வேண்டும் என்று இருக்கும் பொழுது இவ்வாறு நடப்பது உண்டு. அதனால் இவனுக்கு கர்மா வர வேண்டும் என்ற விதி இருக்கும்.
கேள்வி: கோயில்களுக்கு சென்றால் தற்கொலை எண்ணம் மாறிவிடும் என்பது பற்றி:
இது அனைவருக்கும் பொருந்தாது. எதுவாக இருந்தாலும் கூட இறுதியில் ஜெயிப்பதற்கு தான் விதி படைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதியை தாண்டி ஒரு மனிதன் மேலேற வேண்டும் என்றால் அந்த அளவுக்கு அவனிடம் ஆத்ம பலம் வேண்டும். தர்மத்தாலும் பிரார்த்தனையாலும் தலங்கள் தோறும் செல்வதாலும் மனதிலே கள்ளமில்லாத எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் மட்டும்தான் சாதிக்க முடியும். ஆத்ம பலம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் விதியை வெல்ல முடியும். இல்லையென்றால் பிரம்மஹத்தி விடாது. பிதுர் சாபங்கள் விடாது.