ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 584

கேள்வி: குரு சண்டாளம் (குரு எதிர்ப்பு) பற்றி:

சுருக்கமாக கூறிங்கால் இவ்வாறு (ஜாதகத்தில்) ஒரு அமைப்பு பெற்றவர்கள் தனக்கு குருவாக இருக்கக் கூடியவர்களை எதிர்க்கக் கூடிய நிலை வரும். அது குருவின் குற்றம் காரணமாகவோ அல்லாத நிலையிலோ கூட வரும். குரு சிஷ்ய பகை வளர்வதற்கு இது ஒரு காரணமாக இருக்கும் பிறவிகள் தோறும். பொதுவாக குரு சாபத்தையும் குரு தோஷத்தையும் இது குறிக்கிறது. வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து குரு தலம் குரு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்தல் நலம். குருவாக இருக்கும் ஏழை மனிதனுக்கு உதவி செய்வதும் குரு தொடர்பான (ஆசிரியர் போன்ற கற்றுக் கொடுக்கும்) தொழில் செய்வோருக்கு முடிந்த உதவிகளை செய்வதும் இந்த தோஷத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 583

கேள்வி: இருள் உலக ஆன்மாக்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

தில யாகம். எதை செய்தாலும் இது இறைவனுக்கு அர்ப்பணம் என்று சொல்லிவிட்டு இந்தப் புண்ணியத்தை இருள் உலக ஆத்மாக்களுக்கு பயன்படுத்துங்கள் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 582

கேள்வி: துர்மரண வீடு பற்றி?

உரைத்தால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களப்பா. ஏனென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு குடும்பத்தில் நடக்கிறது என்றால் கடுமையான பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது என்று பொருள். முதலிலே அவர்கள் செலவை நோக்கம் பார்க்காது பல்வேறு மந்திரங்களை கற்ற நல்ல மனிதர்களை ஒன்று திரட்டி பிழை இல்லாமல் பரிபூரணமாக ராமேஸ்வரம் எனப்படும் தெய்வ சமுத்திரக் கோட்டத்திலே பூரணமாய் தில யாகம் செய்ய வேண்டும். கடுமையான பிரம்மஹத்தி தோஷத்திற்கு திருவிடைமருதூரில் முடிந்தால் ஒரு மண்டலம் தங்கி இறை தொண்டு செய்வதும் தீபங்கள் ஏற்றுவதும் அபிஷேகம் செய்வதும் சிறப்பு.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் ஆனால் தர்ம வழி நடப்பவர்கள் என்ன செய்யலாம் என்றால் தக்க ஏழைகளுக்கு பசு மாடுகளை தானம் செய்வதும் பசு காப்பகங்களுக்கு அதிகம் அதிகம் உதவி செய்வதும் தினசரி ஒரு முறையாவது பசு மாட்டை தரிசனம் செய்வதும் முடிந்தால் தொண்டு செய்வதும் பசுவை நல்ல முறையிலே குளிப்பாட்டி மஞ்சள் மங்கல பொடிகளை தேய்த்து தூய தூப தீபங்களை காட்டி நிறைய உணவுகளை தருவதும். ஆலயக் குளத்திலோ அல்லது ஏனைய மற்ற குளங்களிலே உள்ள மீன்களுக்கு உணவு தருவதும் கூடுமானவரை ஏழை எளியவர்களுக்கு அன்னம் மட்டுமல்லாது தேவைப்படும் மற்ற உதவிகளை செய்வதும்தான் இது போன்ற தோஷங்களை எல்லாம் குறைப்பதற்கு ஒரே வழியாகும். கூறப்போனால் இது போன்ற குடும்பத்தார்கள் வாழ்க்கையில் பரிகாரம் செய்வது என்பதை விட பரிகாரம் செய்வதையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டால்தான் தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 581

கேள்வி: கோவிலில் உழவாரப் பணி செய்யும் போது செடி கொடிகளை அகற்றினால் தோஷமா?

இதை கூறும் போதே இது பாவம் தான் என்றாலும் இறை இதை மன்னிக்கிறது. அகற்றப்பட்ட செடிகள் மீண்டும் துளிர்க்கின்ற தன்மையை பெறுவதால். அந்த செயல் அந்த செடி கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை. ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும்போது அது பரிபூரணமாக மரித்து விடுகிறது. ஆனால் செடி கொடிகளை அகற்றும் போது அதன் அடிவேரோ மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால் அந்த ஜீவன் அதற்கு இடம் பெயர்ந்து விடுவதால் இதனால் வரக்கூடிய தோஷம் மன்னிக்கப் படக்கூடிய தோஷமாகி விடுகிறது. என்றாலும் கூட இதிலும் பாவம் சேர்வதால் தான் பிறவியற்ற தன்மை வேண்டும் என்று கூறுகிறோம். ஏனென்றால் ஒரு மனிதனால் இந்த பூமியிலே சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. வீடுகளைப் பொருத்தவரை வீட்டைச் சுற்றிலும் சிறியா நங்கை போன்ற மூலிகைகளை வளர்த்தால் பூச்சிகள் வராது. வேறு வழியின்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளை கொல்ல நேர்ந்தால் ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக அந்த தோஷமானது மன்னிக்கப்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 580

கேள்வி: அபிராமி பட்டர் அம்மையை நோக்கி கேள்வி கேட்கிறாரே?

பாவமே செய்யாமல் வாழக் கற்றுக் கொண்டு விட்ட பிறகு இறைவனிடம் வினா தொடுக்கலாம். அவரை வம்புக்கு இழ்ழுக்கலாம். நம்மிடமே பல குறைகள் இருக்கும் பொழுது எந்த நம்பிக்கையில் இறைவனிடம் விவாதம் செய்ய இயலும்?

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 579

கேள்வி: 12 முக தீபத்தின் சிறப்புகளைப் பற்றி:

சகல வதனங்களும் அதிலே அடங்கி இருப்பதால் அத்தருணம் பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடு பாட்டோடு வழிபாடு செய்தால் அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதை விட ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 578

கேள்வி: நாகதோஷத்தைப் பற்றி

இறைவனின் கருணையால் சர்ப்ப தோஷம் நீங்குவதற்கு சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை யாகம் மற்றும் சர்ப்ப தோஷ நிவர்த்தி தரும் சில ஆலயங்கள் சென்று சில குறிப்பிட்ட பூஜைகள் செய்வது என்றெல்லாம் சில வழிமுறைகள் இருக்கின்றன. எனவே இங்கே சர்ப்பம் என்பது ஒரு அடையாளம். குறியீடு மனிதர்கள் காலாகாலமாக நம்புவதைப் போல நாகங்களை கொன்றதால் அல்லது கொல்வதால் மட்டும் இந்த நாக தோஷம் ஏற்பட்டு விடுகிறது என்பது ஒரு தவறான கருத்தாகும். அப்படியானால் ஆட்டையும் மாட்டையும் கொன்றால் தோஷம் வராதா? எந்த உயிரை கொன்றாலும் பாவம்தான் தோஷம்தான். அதற்கு எத்தனை அடிப்படை நியாய வாதங்கள் கற்பித்தாலும் அது பாவமாகத்தான் வரும். எனவே பின் நாகம் அல்லது நாக தோஷம் என்று எதற்காக அதனை ஒரு குறியீடாக ஜாதகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் உச்ச கட்ட பாவத்தின் அடையாளம் நாக தோஷம்.

அதே போல பிரம்மஹத்தி எனப்படுவது மேலோட்டமாக பார்த்தால் பிரம்மாவை யாராவது ஹத்தி செய்ய இயலுமா? ஒருவேளை அப்படி ஹத்தி செய்தால் அது எந்தளவுக்கு பாவமாக இருக்குமோ அந்த அளவுக்கு பாவம் என்பதன் அடையாளம் தான் இந்த வார்த்தை. எனவே இது போன்ற சொல்லாடல்களை எல்லாம் நேருக்கு நேர் பொருள் கொள்ளாமல் நிறைய பாவங்கள் அந்த ஜாதகத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு நிறைய தர்ம காரியங்கள் முதலில் செய்ய பழக வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல தல யாத்திரைகள் செல்ல பழக வேண்டும். ஏனென்றால் இந்த பாவங்கள் ஒரு பிறவியில் ஏற்பட்டிருக்காது. பல்வேறு பிறவிகளில் ஏற்பட்டு ஏக்தாவது ஒரு பிறவியில்தான் அதை நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்பை கிரகங்கள் மூலம் இறைவன் அனுமதி தருவார். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ஆத்மா எந்தெந்த ஊரில் பிறந்திருக்கும்? எந்தெந்த வகையான பிறப்பை எடுத்திருக்கும் என்பதெல்லாம் தெய்வீக சூட்சுமம். எனவே பல்வேறு நாடு நகரங்களுக்கு சென்று அங்கு உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்து அந்த ஆலயத்தை சுற்றி உள்ள ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து ஆலயத்திலேயே தொண்டு செய்யும் அந்த ஊழியர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து அந்த ஆலய திருப்பணிக்கு உதவிகளை செய்து இப்படியெல்லாம் சிறிது சிறிதாக பாவத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு வகையில் பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வதும் பசுக்களை தானமாக தருவதும் பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும் இன்னொரு புறம் எல்லா வகையான தர்ம காரியங்களையும் அவனவன் சக்திக்கேற்ப செய்வதுமாக இருக்க வேண்டும். எனவே இப்படியே நாக தோஷத்தின் குறியீடாக நாகத்தை வைத்த நிலையிலேயே ஒரு சில தருணங்களிலே மெய்யான நாகத்தை வைத்து பூஜை செய்கின்ற காலமெல்லாம் இருந்தது. ஆனால் பொதுவாக மக்கள் அஞ்சுவார்கள் என்பதால் தான் அந்த குறியீட்டை பஞ்சலோகத்திலோ கனகத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து அதற்கு அபிஷேக ஆராதனை செய்து அதனை இவ்வாறு செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய வேண்டும் என்றெல்லாம் முறையை பின்பற்றப்பட்டன. ஆனால் எம்மை பொறுத்தவரை அப்படி செய்வத விட நாக தோஷத்திற்கு நாங்கள் முன்பு கூறிய தர்ம காரியங்களையும் தல யாத்திரைகளையும் செய்து கொண்டே நாக தோஷ நிவர்த்தி தலங்கள் சென்று முடிந்த பூஜைகள் செய்து கொண்டு ராகுவிற்கும் கேதுவிற்கும் ராகுவின் அதிதெய்வமான துர்க்கைக்கும் கேதுவின் அதிபதியான விநாயகருக்கும் என்னென்ன வகையான வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் செய்ய முடியுமோ அன்றாடமோ சப்த தினத்தில் ஏக தினமோ பட்சமோ திங்கள் ஒரு முறையோ செய்து கொண்டே இருப்பதும் இவை எதுவுமே செய்ய முடியாத மனிதர்கள் இல்லத்தில் அமைதியாக அமர்ந்து வாய்ப்பு உள்ள பொழுது நவகிரக காயத்ரியை 27 எண்ணிக்கை குறையாமலும் அதி தெய்வ காயத்ரியை 27 எண்ணிக்கை குறையாமலும் இதையெல்லாம் தாண்டி குறிப்பாக நாக தோஷம் கேது தோஷம் என்பதால் ராகு கேது காயத்ரி மூல மந்திரங்களையும் துர்க்கை விநாயகர் காயத்திரி மூல மந்திரங்களை அதிக பட்சம் தினத்திற்கு எத்தனை உருவேற்ற இயலுமோ அப்படி உருவேற்றுவதும் அந்த தோஷத்தை குறைக்கின்ற பக்தி பூர்வமான வழிகளாகும்.

குறிப்பாக எல்லா வகை தர்மங்களிலே பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வதும் இந்த தோஷத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.

வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தில் செய்து வைத்து ஏதோ மாண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி அதன் தலையில் சில மலர்களை இட்டு சில துளி பாலையும் இட்டு அதை ஆழியிலோ நதியிலோ கரைத்து விட்டால் நாக தோஷம் போய் விடும் என்றால் மிக எளிதாக எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு குறியீடு அடையாளம் இருந்தாலும் நாங்கள் கூறியவற்றோடு இப்பொழுது இவ்வாறு இந்த நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால் எக்தாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டு விடலாம். அது ஆலய தொண்டிருக்கு பயன்படட்டும். இல்லை அந்த வெள்ளியை உபயோகமாக தானமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாத தோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 577

கேள்வி: ஐயனே பரமாத்மாவுடன் இந்த ஜீவாத்மா இரண்டற கலக்க எந்தெந்த நிலைகளை கடக்க வேண்டும்? ஒவ்வொரு படியிலும் எத்தனை அபாயங்கள் இருக்கின்றன? அவற்றை கடந்து வரும் உபாயங்களையும் கூறுங்கள்:

இறைவன் அருளால் இதுவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுமப்பா. ஒருவனுக்கு கூறுகின்ற முறை இன்னொருவனுக்கு பெரும்பாலும் பொருந்துவதில்லை. இதில் ஆசாரம் வாமாசாரம் என்று இரண்டு முறைகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் நாங்கள் யாருக்கும் வாமாசாரத்தை கூறுவதில்லை. ஏனென்றால் வாமாசாரத்தில் நன்மையை விட தீமைகள் எதிர் விளைவுகள் அதிகமாக இருப்பதால் அதை கூறுவதில்லை. ஆனால் வாமாசார முறையை ஒருவன் சரியாகப் புரிந்து கொண்டு விட்டால் நீ கூறுவது போல பல படிகளை இன்னும் கூறப்போனால் குறுக்கு வழியிலே இறைவனை உணரக்கூடிய ஒரு நிலை வாமாசாரம். இருந்தாலும் இவற்றை சொல்லளவில் தெரிந்துகொள். செயலளவில் தெரிந்து கொள்ள வேண்டாம்.

இன்னொன்று ஆசார பூஜைகள் பல செய்து கொண்டே தர்மங்கள் செய்து கொண்டே தல யாத்திரைகள் செய்து கொண்டே ஒருவன் இல்லற கடமைகளையும் நேர்மையாக நடத்திக் கொண்டே மனைவி அல்லது மனைவியாக இருக்கப்பட்டவள் கணவனுக்கு வேண்டிய கடமைகளை செய்து கொண்டே கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை நல்ல முறையில் செய்து கொண்டே தாராளமாக இறைவனை அடையலாம். ஆனாலும் கூட இதில் உள்ள படிகளில் எல்லாம் மனிதன் ஏறி போக வேண்டுமே தவிர அமர்ந்து விடக்கூடாது. இதில் சிக்கல் என்னவென்றால் மனிதன் அமர்ந்து விடுகிறான். ஆங்காங்கே அமர்ந்து கொண்டே இருப்பதால்தான் அந்த நிலையிலையே அவனுக்கு பிறவி பூர்த்தி அடைந்து விடுகிறது.

ஒரு மனிதன் நீண்ட தூர பயணத்தை துவங்குவதாக கொள்வோம். ஒரு நகரத்திலிருந்து ஆயிரம் கல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம் நோக்கி ஒரு பொது வாகனத்தில் பயணம் செய்வதாக கொள்வோம். இடையிடையே சிறு ஊர்களும் நகரங்களும் வரும். ஆனால் அவன் இறங்க மாட்டான். ஏனெனில் அவன் எந்த நகரம் அல்லது எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறானோ அந்த ஊர் வரும் வரை பயணத்தை நிறுத்த மாட்டான் அல்லவா? அதுபோல ஆத்மா எனப்படும் பயணி தேகம் எனப்படும் வாகனத்தில் ஏறி இறைவன் என்னும் ஊரை அடைவதற்கான பிறவி என்னும் பயணத்தை துவக்கியிருக்கிறது. இடையிலே மண் ஆசை பெண்ணாசை பொன்னாசை பதவி ஆசை இந்த உலக ஆசை இது போன்ற ஊர்கள் குறுக்கிட்டாலும் அங்கெல்லாம் கவனத்தை திசை திருப்பாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் இந்த படிகளை எல்லாம் ஒரு மனிதன் எளிதில் தாண்டி விடலாம்.

அறிவு பூர்வமாக சிந்திக்கும் பொழுது ஒன்று உலகியல் ரீதியாக வேண்டும். தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த தேவை உடலை காப்பதற்கும் அந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மட்டும் இருந்தால் போதும். அதனையும் தாண்டி தேவையில்லை என்கின்ற நிலைக்கு ஒரு மனிதன் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெறும் உடல் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவன் கவனம் திசை திருப்பி பரவாத்மாவை நோக்கி ஜீவாத்மா செல்வது தடைபட்டுக் கொண்டே இருக்கும். அப்படி வரக்கூடிய தடைகளை எல்லாம் ஒரு மனிதன் ஈஸ்வர தியானம் அதாவது இறை தியானம் மூலம் மெல்ல மெல்ல வெல்லலாம். இதற்கு தர்மமும் சத்தியமும் பக்க பலமாக இருக்கும். எனவே மிக எளிய வழி எத்தனையோ தர்மங்கள் செய்தாலும் எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்தாலும் எத்தனையோ தல யாத்திரை செய்தாலும் கூட அவனுடைய ஆழ் மனதிலே அவனுடைய அடி மனதிலே நீங்காத ஒரு இடமாக இறைவனை அடைந்தே தீருவேன் என்று உறுதியான எண்ணத்தோடு இருந்தால் அவன் எதை செய்தாலும் அது குறித்து அவன் பாதிக்கப்படாமல் இருப்பான்.

அதாவது ஒருவன் எங்கிருந்தாலும் எந்த சூழலில் இருந்தாலும் அவனுடைய ஆழ்மனதிலேயே ஈஸ்வர சிந்தனை அசைக்க முடியாமல் இருந்தால் அந்த ஜீவாத்மா மிக எளிதில் பல படிகளை தாண்டி விடும். ஆனால் அடிப்படையிலேயே எந்த எண்ணம் இல்லாமலும் பரிபூரண சரணாகதி பக்தி இல்லாமலும் இருக்கின்ற மனிதனுக்கு தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும். அது போன்ற தருணங்களிலே குழப்பம் கொண்டிடாமல் கீழே விழுந்தாலும் விழுவது இயல்பு என்று மீண்டும் மீண்டும் எழுந்து அமர்ந்து இறைவா என்னை காப்பது உன் பொறுப்பு என்றெண்ணி இறைவனை நோக்கி மனதை விரைவாக பயணம் செய்வதற்கு உண்டான முயற்சியிலே இறங்குவதே மனிதனுக்கு உகந்த கடமையாகும். இதை செய்தால் ஜீவாத்மா எளிதில் பரமாத்மாவை அடையும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 576

அகத்தியரின் பொது வாக்கு:

இறைவனின் அருளைக் கொண்டு இயங்குவது யாதென்றால் இதுபோல் ஒரு மனிதனின் மனோநிலை எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதோ எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதோ எந்த அளவிற்கு உயர்நுண்மா நுழை ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்கு தான் அவனைப் பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்க்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை. மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும். இன்னொரு மனிதனுக்கு தொட்டதெல்லாம் தோல்வி. எல்லாமே எதிராக நடக்கிறது. எண்ணங்கள் ஒரு விதமாகவும் நடைமுறை செயல்கள் வேறு விதமாகவும் இருக்க அவனை பொறுத்தவரை இந்த உலகம் கயப்பாக தோன்றும். எனவே இப்படி இந்த உலகையும் உலகை சுற்றியுள்ள மனிதர்களை உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன் தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல என்றாலும் அப்படித்தான் நடக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு மாறாக நடக்கும் பொழுது ஒருவன் வருத்தப்படுகிறானே அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையும் மன உளைச்சலையும் தருகிறது. எனவே இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதை விட எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தை இறைவா எனக்கு கொடு என்று மனோரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும் திடத்தையும் அடைந்து விட்டால் அவனை பொறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை. எனவே துன்பங்களையும் மாற்று. தொல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று. என்று வேண்டுவதை விட எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் நான் திடகாத்திரமாக நான் தெய்வீக எண்ணத்தோடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா என்று வேண்டிக் கொண்டால் அதுதான் தீர்க்கமான ஒரு முடிவாக நல்ல ஒரு நிச்சயமான நிம்மதியான வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.

இதுபோல் எங்கள் அடிக்கடி கூறுவது போல் உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால் அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்து எடுப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்தோ அல்லது சிறிது மோரை சேர்த்தோ அந்த உப்பை சரி செய்வது போல ஒரு மனிதன் கர்ப்பகோடி காலம் பிறவி எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும் அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக பாவம் செய்யாமலும் புதிதாக உப்பை சேர்க்காமல் சிறிது நீரையோ மோரையோ சேர்ப்பது போல புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டே வந்தால் அதுபோல அந்த உப்பின் தன்மையை சமத்துவம் பெறுவது போல அந்த பாவத்தினால் வரக்கூடிய விளைகள் அவனை தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும். பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதனால் உப்பின் தன்மை தெரியாதது போல சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக பாவத்தின் தாக்கம் அவன் தாங்கும் வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவே. இந்த கருத்தை மனதில் வைத்துக் கொண்டு எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும் அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்பட வேண்டாமா என்று வினவ வேண்டாம். யாராக இருந்தாலும் அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை என்றும் உயர்வாக இனிமையாக திருப்தியாக சந்தோஷமாக சாந்தியாக இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 575

கேள்வி: ஐயனே மகாபாரதத்தை எழுதுவதற்காக விநாயகர் பெருமான் தன் தந்தத்தை முறித்ததாக புராணத்தில் கேட்டிருக்கிறேன் அதன் காரண காரியத்தை விளக்குங்கள்:

வியாச பகவான் ஞான திருஷ்டியிலே அருளிய மகாபாரதத்தை வியாசரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப விரைவாக பதிவு செய்ய வேண்டும் என்றால் அத்தகைய ஆற்றல் இறைவனுக்குத்தான் உண்டு. அந்த இறைவன் அந்த பரம்பொருள் விநாயக வடிவமெடுத்து எழுதியது என்பது உண்மை மட்டுமல்ல. அப்பொழுது எழுதப்பட்ட அந்த சுவடி இன்றும் பூமியிலே இமயமலை சாரலிலே இருக்கிறது என்பது உண்மையோ உண்மை. வால்மீகி எழுதிய அந்த மூல நூலும் இன்னும் இருக்கிறதப்பா. இவைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆற்றல் மிக்க வியாச பகவான் எண்ணினால் அந்த எண்ணங்கள் அப்படியே அந்த ஓலையில் பதியட்டும் என்றால் பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லது வியாசபகவான் என்ன எண்ணுகிறாரோ அவையெல்லாம் அந்த ஓலையிலே பதியட்டும் என்று விநாயகப் பெருமான் எண்ணியிருந்தாலும் அது பதிந்திருக்கும். இருந்தாலும் மனித ரீதியாக ஒரு மனிதன் எப்படி செயல்பட வேண்டும்? ஒரு செயல் என்று வந்துவிட்டால் எல்லாவற்றிலும் இறையாற்றலை பயன்படுத்த தேவையில்லை. தன்னிடம் ஆற்றல் இருக்கிறது என்பதற்காக எல்லா செயலையும் அந்த ஆற்றலை கொண்டு தான் செய்ய வேண்டும் என்பதில்லை என்பதை மனிதனுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய நாடகம்.