ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 574

கேள்வி: பூமாதேவி தான் இந்த பூமியை தாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பது உண்மையா? பூமாதேவி யார்? அவர் எந்த லோகத்தில் இருக்கிறார்?

பூமியை மட்டுமல்ல அண்ட சராசரங்களையும் தாங்கிக் கொண்டிருப்பது இறைவன். இறைவன் தர்மத்தின் வடிவம். எனவே நீ எதை கேட்டாலும் அது இறைவனின் மறுபடிவமாகத்தான் இருக்கும். இதை வேறு வகையாக கூறப்போனால் ஒரு மனிதன் இல்லத்தில் இருக்கும் பொழுது குடும்பத் தலைவன். மகனுக்கு தந்தை. மனைவிக்கு கணவன். அலுவலகம் சென்றால் அவன் அதிகாரி. இப்படி இடத்திற்கு தகுந்தாற் போல் ஒரு மனிதன் தன் நாமத்திலே சில மாற்றங்களை பெறுகிறான் செயலுக்கு ஏற்ப. அப்படி இறைவன் பூமியை தாங்குவதாக நம்பும் பொழுது பூமா தேவியாக போற்றப்படுகிறார் அவ்வளவுதான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 573

கேள்வி: ஒரு ஜீவன் உடலை விட்டு பிரிந்த பிறகு 12 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும் என்று நியதி இருக்கிறது. தட மாந்தர்கள் இதை எப்படி கடைபிடிக்க வேண்டும் ஐயனே?

பொதுவாக இதை பலவிதமாக கூறலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமாக வழக்கம் இருக்கிறது. இந்த வழக்கத்தை என்னால் மீற முடியவில்லை என்பவரை விட்டுவிடலாம். எம்மை பொறுத்தவரை ஒரு குடும்பத்திலே ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் அதனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் மனோரீதியாக கடுமையான உளைச்சல் அடைகிறார்கள் என்றால் அந்த மனம் ஆறுதல் பெரும் அளவிற்கு கால அவகாசத்தை கொடுப்பது தவறல்ல. அங்ஙனம் இல்லாமல் அகவை எனப்படும் வயது அதிகமாகி ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் பெரிய அளவிலே அந்த குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றால் வழக்கம் போல் அவர்கள் இறை சார்ந்த கடமைகளை செய்யலாம். ஆலயம் செல்லக் கூடாது அங்கு செல்லக் கூடாது இங்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் நாங்கள் வகுத்ததல்ல.

இவைகள் எதற்காக கூறப்பட்டது? என்றால் ஒரு குடும்பம் ஒருவனை மிகவும் பால்ய வயதில் இழந்து விட்டால் அந்த குடும்பம் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறும். வேதனைப்படும். அதிலிருந்து அந்த குடும்ப உறுப்பினர்கள் மாறுவதற்கு சில காலங்கள் அவகாசம் வேண்டும். அதுவரை அந்த குடும்ப உறுப்பினர்கள் இயல்பு வாழ்விற்கு வர இயலாது என்பதற்காகத்தான் இதுபோன்ற சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. இது மனித ரீதியானது. ஆத்மா என்பது நீ கூறுவது போல் படிப்படியாக இத்தனை தினங்கள் அதனை தினங்கள் என்பதெல்லாம் முழுக்க முழுக்க எல்லா ஆத்மாக்களுக்கும் பொருந்தாது. இவையும் வினைப்பயனுக்கேற்ப மாறும். அதாவது உடலை விட்டு பிரிந்த அடுத்த கணமே மறு பிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்கள் உண்டு. மனித கணக்கிலேயே பல வருடங்கள் கழித்து பிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்களும் உண்டு. அடுத்த கணமே இறையோடு இரண்டற கலக்கின்ற ஆத்மாக்களும் உண்டு. அடுத்த கணமே தேவர்களாக தேவதைகளாக மாறுகின்ற ஆத்மாக்களும் உண்டு. பாவங்கள் அதிகமாகவும் புண்ணியங்கள் குறைவாகவும் செய்தவர்கள் பெரும்பாலும் அந்த உடலையும் அந்த இல்லத்தையும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் கூறப்போனால் உடலை விட்டு பிரிவதுதான் மரணம் என்கிற நிகழ்வு. இந்த நிகழ்வு தனக்கு நிகழ்ந்ததை அறியாமல் குழப்பத்தோடு அலைவார்கள். இந்த குழப்பத்தை நீக்கி அந்த ஆத்மாவை அல்வழிப்படுத்ததான் இறை வைத்துள்ள சடங்குகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 572

கேள்வி: ஐயனே மனிதர்களாகிய நாங்கள் எந்த விதத்தில் சிறந்தவர்களாக இருக்கிறோம்? தங்களுடைய எல்லையற்ற கருணையை கொண்டு மெய்சிலிர்த்து வியந்து நமஸ்கரிக்கிறோம். இறையும் தாங்களும் எங்களின் மேல் இத்தனை பரிவும் அன்பும் வைத்ததன் காரணம் என்ன?

இறைவன் அருளாலே இதற்கு வேறு விதமாக கூறினால் உனக்கு புரியும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்ற நீயோ அல்லது உன்னொத்து இருக்கக் கூடியவர்களோ அதைப் போல் அந்த நிறுவனம் தயாரிக்கின்ற தயாரிப்புகளையும் பிற போட்டி நிறுவனம் தயாரிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அவ்வப்போது தன் நிறுவன தயாரிப்புதான் தலை சிறந்ததாக இருக்க வேண்டும் என்றெல்லாம் குழுக்களாகக் கூடி விவாதித்து முடிவெடுப்பதும் தாம் தம் தயாரிப்பு எப்பொழுதுமே தலைசிறந்ததாக இருக்க வேண்டும் என்பதை ஒரு நேர்மையான நிறுவனம் எப்பொழுதுமே விட்டுக் கொடுக்காமல் இருக்கும். தரத்திற்கு ஒரு முன்னுரிமை தரும். பொதுவாக விதிவிலக்குகளாக சிலர் இருக்கலாம். சிலர் குறுக்கு வழியில் அதனை மேம்படுத்தவோ அல்லது தகுதியே இல்லாத ஒரு பொருளை தயாரித்து விட்டு வெறும் விளம்பரங்கள் மூலமாக அதற்கு ஏகப்பட்ட தகுதி இருப்பதாக கூறி கூவி விற்பனை செய்கிற செய்கின்ற தந்திரங்களும் உண்டு. அவற்றை விட்டு விட்டு ஒரு நேர்மையான மனிதன் நடத்தும் ஒரு நேர்மையான நிறுவனம் பெரும்பாலான நேர்மையான மனிதர்களை கொண்ட நிறுவனம் பெரும்பாலும் நேர்மையான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் நேர்மையாகவே பொருளை தயாரித்து சட்ட திட்டங்களை மதித்து தரமாக இருக்க வேண்டும் என்று விரும்பும். ஆனால் அதனையும் மீறி தயாரிப்பிலேயே குறை வரும் பொழுது அதனை நிவர்த்தி செய்ய நிறுவனம் போராடும். மீண்டும் அது போன்ற தவறுகள் வரக்கூடாது என்று.

இறைவனும் அப்படித்தானப்பா. தான் ஒவ்வொரு படைப்பும் தவறில்லாமல் குற்றமில்லாமல் பிழையில்லாமல் மிக சரியாக திருத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் படைக்கிறார். அப்படித்தான் பெரும்பாலும் அவரின் ஆதி படைப்பு இருக்கிறது. ஆனாலும் கர்ம வினையும் மாயையும் ஒருவனை நல்லவனாக வாழ விடுவதில்லை. எனவே தான் பொருள்கள் அஃறினை. அதனை திருத்தமாக ஒரு மனிதனோ இயந்திரமோ செய்து விடும். ஆனால் உணர்வு பெற்ற உயிர்களும் குறிப்பாக மனிதர்களும் அப்படியல்ல. அவனை அவ்வப்போது நெறிப்படுத்த வேண்டி இருக்கிறது. நல்வழிப்படுத்த வேண்டி இருக்கிறது. அதற்குதான் இறைவன் மகான்கள் மூலமாக ஞானிகள் மூலமாக தத்துவங்களையும் ஞானக் கருத்துக்களையும் கூறி இது பாவம் இது புண்ணியம் இந்த வழி செல்லலாம் இந்த வழி செல்லக்கூடாது என்றெல்லாம் எப்பொழுதுமே அறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறார். இப்பணியை இறைவன் எம்போன்ற மகான்கள் மூலமாக எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார். இது ஒரு விளக்கம்.

இன்னொன்று எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ ஒரு மனிதன் தனக்குத்தானே போராடி ஒரு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு நூறு சத்தியம் பேசுகின்ற தன்மையாலும் நூற்றுக்கு நூறு தர்மத்தை கடைபிடிக்கின்ற தன்மையாலும் தன்னை போராடி மாற்றிக் கொள்ள வேண்டும். பிறரோடு தொடர்பு கொள்கின்ற மனிதன் கூடுமானவரை யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வார்த்தையை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில் கூட உறவாக இருக்கலாம் நட்பாக இருக்கலாம் பெற்ற பிள்ளையாக இருக்கலாம் உரிமை இருக்கிறது என்பதற்காக அடுத்தவரின் மனம் புண் படும்படியாக (அது நல்லதற்காக கூட இருக்கலாம்) அப்படி ஒருவன் நடந்து கொண்டு விட்டால் அது உடனடியாக யாருக்கும் எந்த ஒரு பலனும் தராவிட்டாலும் பின்னர் அதுவும் ஒரு பாவப் பதிவாக மாறி அவனுக்கு வேறு விதமான துன்பங்களையும் சேர்த்து அழைத்து வருகிறது. எனவே கோடான கோடி உயிர்களிலே பிறந்து இறந்து தன்னைத்தான் உணர முடியாமல் வெறும் ஜடம் போல் வாழ்ந்து மறையும் உயிர் கூட்டங்களிலே சற்றே மனிதனுக்கு ஒரு விதமான வரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. என்னதான் மனிதன் விதியின் கைப்பாவையாக இருந்தாலும் சற்றே சிந்திக்கும் ஆற்றலும் தரப்பட்டிருப்பதால் இது தக்கது இது தகாதது இவ்வழியில் செல்லலாம் இவ்வழியில் செல்லக்கூடாது என்று ஒரு மனிதனுக்கு புரியும் படியான ஓரளவு சிந்தனையாற்றால் தந்துதான் இறைவன் படைத்திருக்கிறார். ஆனாலும் மனிதன் என்ன எண்ணுகிறான்? உடனடியாக லாபம் தராத எதையும் செய்ய மனிதன் விரும்பவில்லை. நேர்மையாக நடப்பதும் உண்மையை பேசுவதும் எப்பொழுதுமே அறத்தை செய்வதுமாக இருந்தால் உடனடியாக எந்த பலனும் இல்லையே? எப்பொழுதுமே குறுக்கு வழியில் சென்றால் தான் வெற்றி உடனடியாக வருகிறது என்று எண்ணி மேலும் அவன் தவறையே செய்கிறான். தவறு தொடர்ந்து செய்ய செய்ய பாவமாக மாறுகிறது. பாவம் சேர சேர எல்லாவிதத்திலும் அது துன்பமாக மாறி தன்னுடைய பங்கை அளித்துக் கொண்டே இருக்கிறது. சுருக்கமாக கூறப்போனால் இறை ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது மகான்கள் ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது என்ன? தவறு செய்வது இயல்பு. ஏனென்றால் பலகீனம் கொண்ட மனிதன் தவறு செய்யாமல் இருக்க இயலாது. அதனால்தான் மனதை முன்னரே கூறியது போல் வைரம் போல் வைராக்கியம் பெற்ற மனமாக மாற்றிக் கொண்டால் ஒரு மனிதன் தவறு செய்யாமல் இயல்பாக நல்லவனாக வாழக்கூடிய ஒரு நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ள முடியும். அப்படி செய்ய வேண்டும் என்பதையே ஒவ்வொரு மனிதனிடமும் இறையும் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 571

கேள்வி: சில சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பானது என்று சொல்லப்படுவது பற்றி:

இறைவனை உள்ளன்போடு ஒரு மனிதன் இப்பொழுதெல்லாம் வணங்குகிறானோ எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வணங்குகிறானோ அப்படி வணங்குகின்ற அந்த குணம் கொண்ட மனிதன் மனித நேயத்தையும் மறக்காமல் இருக்கிறானோ மனித நேயத்தோடு தான் கடமைகளையும் சரிவர ஆற்றுகின்றானோ அப்படி வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா காலமும் பிரதோஷம்தான். எல்லா காலமும் சதுர்த்திதான். எல்லா காலமும் அவனைப் பொறுத்தவரை மார்கழி மாதம்தான். எல்லா காலமும் சிவராத்திரிதான். எல்லா காலமும் நவராத்திரிதான். எனவே இது போன்ற திதியின்படி நட்சத்திரத்தின்படி சில விசேஷங்கள் வகுக்கப்பட்டது. அன்றாவது ஒரு மனிதன் தன் புறக் கடமைகளை விட்டுவிட்டு முழுக்க முழுக்க இறை வழியில் செல்லட்டுமே என்பதற்காகத்தான். எனவே எல்லா தினங்களும் சிறப்பான தினங்களே. ஒரு மனிதனை நடந்து கொள்வதை பொறுத்து.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 570

கேள்வி: விநாயக சதுர்த்தி தீபாவளி பற்றி சொல்லுங்கள் ஐயனே?

எல்லா பூஜைகளுமே மனித நேயத்தையும் மனிதர்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற உத்வேகத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது கால ஓட்டத்தில் வெறும் ஆடம்பரமாகவும் அனாவசிய செலவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலையாகவும் மாறிவிட்டது வருத்தத்திற்குரியது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 569

கேள்வி: கர்மா வாசனை இல்லாது போக வேண்டும்.

ஆகுமப்பா உந்தனுக்கு. கர்மா வாசனை இல்லாது போக வேண்டும். அதுபோலத்தான் வாழ்வை நீ எதிர்கொள்ள வேண்டும். அறிந்திடுவாய் எமது வழியில் தொடர்வது என்பது நன்மையே என்றாலும் அதுபோல் உணர வேண்டும். பல்வேறு பேச்சுக்கள் ஏச்சுக்கள் அவமானங்களை தாண்டித்தான் எமது வழி தொடர வேண்டுமப்பா. விசனங்கள் (துன்பம் பேராசை) இல்லாது வாழ வேண்டும். விளக்கங்கள் புரிந்தாலும் புரியாவிட்டாலும் நன்மைகளை தொடர வேண்டும்.

வாழ்த்துவோம் தர்ம வழி சத்திய வழி வழுவாது (தவறாமல்) நடக்க வேண்டும். அறிவாயே அங்ஙனம் நடக்கும் பொழுது பல்வேறு இடர்கள் எதிர்பட்டாலும் தர்ம வழி மாறாது நடக்க வேண்டும். வேண்டுமே. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா. மனிதர்கள் வாக்குகளை குறித்து எண்ண வேண்டாம். மனிதன் பலகீனமானவன். கர்மத்திற்கு உட்பட்டவன். பக்குவம் அடையாதவன். பக்குவம் அடையாத மனிதர்கள் எது உரைத்தாலும் அதை நீ செவியில் ஏற்க வேண்டாம். உன் பொருட்டு அனைவருக்கும் யாம் இயம்புவது என்னவென்றால் எமது வாக்கை கேட்பதாலேயே ஒரு மனிதன் மேன்மை அடைய இயலாது. இது போல் இவனுக்கெல்லாம் சித்தர்கள் என்றென்றும் வாக்கு உரைக்கின்றார்களே? ஆயினும் இவனுக்கெல்லாம் வாக்கு உரைத்தாலும் இவன் பிறர் மனம் புண்படவும் சித்தர்களுக்கு விரோதமாகவும் நடக்கிறானே. இதுபோல் இன்னவனுக்கு எதற்கு சித்தர்கள் வாக்கு உரைக்க வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. யாராக இருந்தாலும் இறைவன் கட்டளைப்படி வாக்கு உரைத்து அவனின் மன நிலையை மாற்றி நல்வழியில் திருப்ப வேண்டும் என்பதற்காக நல்லோர் நல்லோர் அல்லாதோர் அனைவருக்கும் பல்வேறு சூழலில் வாக்கு உரைக்க வேண்டியுள்ளது. உள்ளதே உள்ளபடி கூறி வாழுங்கால் (வாழ்ந்தால்) என்றென்றும் வெற்றியும் தன்னம்பிக்கையும் உண்டாகும். உள்ளதை கூறாது அல்லதை கூறுங்கால் தொடர்ந்து பாவச் சேற்றிலே ஆழ்ந்து ஆழ்ந்து துன்பப்பட நேரிடும். உரைத்திடுவோம் எவன் எப்படி வாழ்ந்தாலும் அது குறித்து கவனம் செலுத்தாது உண்மையை நன்றாக ஆய்ந்து உணர்ந்து சிந்தித்துப் பேசி உள்ளதைக் கூறி நல்லதை செய்து வாழுங்கால் நலம் தொடரும்.

உரைத்திடுவோம் எவ்வாறெல்லாம் வாழாத மனிதனுக்கு நல்விதமான வாழ்வு இருப்பது போல் தோன்றும். அப்படி தோன்றினாலும் அது நீடிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெள்ளிய நெஞ்சத்திலே நல்ல விதைகளை ஊன்றி ஊன்றி தெளித்துவிட்டால் காலப்போக்கிலே அந்த நல்வித்துக்கள் எல்லாம் முளைத்து நல் விருட்சங்களாகி நல் கனிகளை தரும். அந்த கனிகள் மூலம் மேலும் மேலும் பல வித்துக்கள் உருவாகும். எனவே இது குறித்தும் கலங்காது உன்னால் இயன்ற தர்மங்களை பிரார்த்தனைகளை செய்து வாழ்ந்து வா. என்றென்றும் நலம் தொடரும் உன்னை ஆசிகள் சுபம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 568

கேள்வி: சத்சங்கத்திற்கு ரிஷிகளின் சித்தர்களின் ஆசீர்வாதம் கிடைத்ததா?

இறைவன் கருணையால் சப்தரிஷிகளும் அங்கு தான் இருந்தார்கள். ஆனால் சத்சங்கத்திற்கு வந்திருந்தவர்களில் எத்தனை பேர் இதை உணரக் கூடிய நிலையில் இருந்தார்கள்? இதோ கலைக் காட்சிக்கு வருவது போலத்தான் வந்தார்கள். இதை நாங்கள் குற்றம் என்று கூறவில்லை. அவர்களையும் பண்படுத்தி மேலே ஏற்ற வேண்டும் என்பதே பொருள். வேறு எதுவும் வேண்டாமப்பா. இறையிடமும் என்னிடமும் வரும்பொழுது மட்டும் மனிதன் தன் சிந்தனா சக்தியை ஒதுக்கிவிட்டு வந்தால் நாங்கள் அவர்களை மேலே ஏற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் ஏமாறும் இடத்திலே அறிவை பயன்படுத்தாத மனிதன் எம்மிடம் வரும்போது மட்டும்தான் ஏன்? எதற்கு? எப்படி? இதை எப்படி ஏற்பது? இதற்கும் நடைமுறைக்கு முரணாக இருக்கிறதே? இப்படி எல்லாம் நடந்தால் உடனடியாக நட்டம் வருகிறதே? என்றெல்லாம் மிகப்பெரிய வேதாந்தி போல் சிந்திக்கிறான். இல்லை இல்லை அவன் விதி அப்படி அவனை சிந்திக்க வைத்து படுபாதாளத்தில் தள்ளுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 567

கேள்வி: திருமூலர் 3000 ஆண்டுகள் தியானம் இருந்து திருமந்திரம் பாடல் இயற்றினார் என்பது பற்றி:

இறைவனின் கருணையால் மனித ஆண்டு கணக்கு வேறு. தேவ ஆண்டு கணக்கு என்பது வேறு என்பது பலர் அறிந்ததுதான். இதுபோல் நிலையிலே முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஆண்டு என்பதும் வேறு வேறு நிலைதான். மூவாயிரம் ஆண்டுகள் என்பது மனித ரீதியாக பார்க்கக் கூடாது. அது தேவ ஆண்டுகளை விட மிக அதிக கணக்கு. எனவே சூட்சமமான நிலையில் அன்னவன் (திருமூலர்) இயற்றிய தவமாகும். மனித சக்தியால் அதை புரிந்து கொள்வது என்பது மிக கடினம். அது மட்டுமல்ல இது போன்ற ஞானநிலையை அடைந்த சித்த நிலையை அடைந்தவர்கள் கூறுகின்ற வாக்கியங்களையும் நேருக்கு நேர் பொருள் கொள்வது என்பது கடினம். பாவங்கள் குறைந்த ஆத்மா வாசித்தால் ஓதினால் அப்பொழுது வருகின்ற பொருளை மெய்ப்பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 566

அகத்தியரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இத்தருணம் முடவன் வாரம் தன்னிலே இவ்விடத்திலே சேர்ந்து வந்து இதுபோல் கலந்தாய்விலே கலந்து கொண்டு இதுபோல் மனம் உவந்து இவையெல்லாம் செய்யலாம் என்று எண்ணம் கொண்ட செயலும் கொண்ட அனைவருக்கும் என் பரிபூரண நல்லாசிகள்.

இது போல் பல்வேறு விதமான வாக்குகளை பல்வேறு தருணங்களில் எம்மை நாடும் மாந்தர்களுக்கு பலமுறை கூறியிருந்தாலும் கூட பலமுறை கூற வேண்டிய தருணம் யாதென்றால் கூறுகின்ற வாக்கியம் தன்மையை கேட்கின்ற மனோபாவத்தை பொருத்து ஒவ்வொரு மனிதனும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் மனம் மகிழ்வாக ஏதாவது மகிழ்வு என்ற சொல்லாடல் அந்தந்த மனிதனின் மனநிலையை பொறுத்து இங்கே நாங்கள் கையாளுகின்றோம். அப்படியொரு மகிழ்வில் வந்து அமரும் போது நாங்கள் கூறுகின்ற தத்துவார்த்த விளக்கங்கள் எல்லாம் திருப்தியாக ஏற்புடையதாக இருக்கிறது. இறையை நம்புகிறான். எம்மை நம்புகிறான். ஆனால் அவன் எண்ணுகிற நிலையில் வாழ்வு நிலை இல்லை என்ற ஏக்கத்தோடு விரக்தியோடு அதிருப்தியாக எம்முன்னே அமரும் பொழுது நாங்கள் எதைக் கூறினாலும் அதனை அவனால் திருப்தியாக இருக்க இயலாது. இதுபோல் நிலையில் யாம் பல்வேறு தருணங்களில் முன்னுரை என்ற ரீதியிலேயே கூறும்பொழுது வருகின்றவனுக்கு அத்தனையையும் வெட்டவெளிச்சமாக கூறாவிட்டாலும் இலைமறை காயாக கூறுகிறோம். ஆனால் அவன் அதை அவன் புரிந்து கொள்வதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 565

கேள்வி: காசி கயா செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவைகள் என்ன? அந்த தலங்களின் சிறப்பு என்ன?

காசி கயா என்பது மட்டுமல்ல அந்த தலன்களுக்கு சென்றாலும் ஒழுக்கமும் நேர்மையும் பக்தியும் தர்மமும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்களால் உடன் வந்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்ய முடியாத நிலையில் தாராளமாக பெற்றோர்கள் சார்பாக அவர்கள் வாரிசுகள் செய்யலாம். வீட்டில் ஆண் வாரிசுகள் இல்லாத நிலையில் பெண் பிள்ளைகளும் அதுபோல் செயல்களை செய்யலாம். அஷ்டமி நவமியில் லோகாய தொடர்பான காரியங்களை விலக்கி பொதுவாக சேவைகளையும் இறை தொடர்பான காரியங்களையும் செய்யலாம்.