ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 674

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

தீபம் ஏற்றுவதும் தூப தீபங்கள் காட்டுவதும் மலர் ஆரங்கள் சாற்றுவது மட்டும் பூசை என்று எண்ணிவிடாதே. புற சுத்தியும் இது போன்ற தூப தீபங்களும் முக்கியம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இந்த சூழல் மனித மனதிற்கு அமைதியையும் நெகிழ்ச்சியையும் தரலாம். ஆனால் இவைகள் மட்டுமே பூஜைக்குரிய விஷயம் அல்ல. மனம் பக்குவப்பட்டு (ஒரு கலையை ரசிக்கும் போது எப்படி அங்கே ஐம்புலன்களும் ஒடுங்குகிறதோ) இறைவன் மீது ஒடுங்க மனதிற்கு பயிற்சி தந்து கொண்டே இருக்க வேண்டும். மனம் வாக்கு காயம் சிந்தனை புலன்கள் எல்லாம் வேறு எதனையும் நோக்கியும் சென்றிடாமல் இறை நாமத்தில் இறைவனின் திருவடியில் தனக்கு தெரிந்த இறை உருவத்தை எண்ணி பிறகு அந்த உருவமும் மறைந்து போய் நீக்கமற நிறைந்துள்ள அந்த பரம்பொருளின் திவ்ய தரிசனத்தை ஒளியாக ஒலியாக பின்பு அதுவும் அற்ற நிலையாக அது வேறு தான் வேறு இல்லாத நிலைக்கு ஒன்றி விட வேண்டும். செய்கின்ற வேலையிலே தன்னை மறந்து ஒரு மனிதன் எப்படி விருப்பமுடன் ஈடுபடுகிறானோ அதைப்போன்று செய்கின்ற வழிபாடும் பூசையும்தான் உயர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே இது வராது என்றாலும் மெல்ல மெல்ல முயற்சி செய்து மேலேற வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 673

கேள்வி: பாவங்கள் குறைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

பாவங்கள் குறைந்தாலும் அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும் கூட பெருங்காயப் பேழை போல் அதன் நறுமணம் தாக்கிக் கொண்டே தான் இருக்கும். இருந்தாலும் பாவம் கூடுமானவரை குறைந்திருக்கின்றது மிக மிக சிறிய அளவு தான் இருக்கிறது என்றால் தன்முனைப்பும் அகங்காரமும் இல்லாமல் போய்விடும். நான் யார்? நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன்? என் வலிமை என்ன? என்னுடைய செல்வம் என்ன? என் பதவி என்ன? என் செல்வாக்கு என்ன? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான்? என்பது போன்ற எண்ணங்கள் எல்லாம் மெல்ல மெல்ல விலகி விடும். மனம் அமைதியை விரும்பும். கூடுமானவரை தனிமை விரும்பும். புரிதல் இல்லாத மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். அவன் விதி அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம் என்ற ரீதியில் தான் மனித இனம் இருக்கும். இவன் எதிரி. இவன் நண்பன் என்கிற நிலை எல்லாம் கடந்து போகுமப்பா. எனவே பாவங்கள் குறைய அதை அனுபவத்திலே மனம் உணரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 672

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மனதிலே தீய எண்ணங்களும் சுய நல எண்ணங்களும் குறைந்து கொண்டே வர வேண்டும். எதைப் பார்த்தாலும் பொதுப் பார்வையாக ஒரு மகான் இந்த இடத்திலே இருந்தால் எப்படி செயலாற்றுவார்? ஒரு சித்தன் இந்த இடத்திலே இருந்திருந்தால் என்ன முடிவெடுத்திருப்பார்? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து செயலாற்றிக் கொண்டே வந்தால் கட்டாயம் சரியான ஆன்மீக வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 671

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

முன் வினைப்பயனை அனுபவித்து தீர்க்கலாம். தர்மத்தால் தீர்க்கலாம். இறை வழிபாட்டால் தீர்க்கலாம். முன் வினைப்பயன் குறையக் குறைய துன்பங்கள் குறைந்து கொண்டே வரும்.

சேர்த்த பாவத்தை குறைப்பதற்காகவும் இனி பாவம் செய்யாமல் வாழ்வதற்கு மட்டும்தான் மனித தேகம் மனித பிறவி. சிந்திக்கும் ஆற்றலை இறை மனிதனுக்கு தந்ததின் காரணம் பிறர் துன்பங்களை கண்டு வருந்த இரங்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்படிப்பட்ட எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் உயர்ந்த ஆத்மாக்களை. இதில் விலங்கு விருட்சம் மனிதன் என்ற பேதம் இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 670

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

உள்ளத்தில் உண்மையை மறைத்து வைப்பது என்பது அக்னியை மடியில் வைத்துக் கொள்வது போல கடை (இறுதி) வரையில் அவனை சுட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று ஆதியிலிருந்து ஒரு மனிதன் உண்மையை சொல்ல பழக வேண்டும். இடையில் இருந்து தொடங்கினால் அதற்கு அவன் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். எனவே அறத்தில் மிகப்பெரிய அறம் உண்மை பேசுவதாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 669

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எப்பொழுது மருத்துவ சிகிச்சை என்ற ஒன்று ஏற்படுகிறதோ அப்பொழுதே சேர்த்த புண்ணியம் போதவில்லை. பாவம் இன்னும் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். வீண் விரயங்கள் ஏன் வருகிறது என்றால் ஒருவன் மெய்யான வழியிலே புண்ணியத்தை சேர்க்கவில்லை என்பதே பொருள். ஒருவன் கணக்கிலேயே இத்தனை தனத்தை பிடுங்க வேண்டும் என்று விதி இருந்தால் அத்தனை தனம் விரயமாகும். சிலர் தனத்தை இறுக பிடித்து வைத்திருக்கிறார்களே. விதி அவர்களிடம் இருந்து தனத்தை எடுக்கிற விதமே வேறு. கள்வர்களாலும் கொள்ளையர்களாலும் வேறு சில பகற்கொள்ளையர்களாலும் தனம் பிடுங்கப்படும். ஒரு சோம்பேறி கூட்டத்தை நாம் ஏன் உருவாக்க வேண்டும் என்று எண்ணி ஒரு திருட்டு கூட்டத்தை உருவாக்கி விடுவார்கள் இவர்கள்.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒருவன் ஆலயங்கள் சென்றாலும் செல்லா விட்டாலும் யாகங்கள் செய்தாலும் செய்யா விட்டாலும் எவன் ஒருவன் சத்தியத்தையும் தர்மத்தையும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறானோ அவனைத் தேடி இறை வரும் என்பது மெய். ஒருவனிடம் தர்ம சிந்தனை இருக்கும் பொழுது அந்த தர்மமே எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும். ஏனென்றால் ஒரு மனிதன் என்ன பிராத்தனை செய்தாலும் கூட அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால் இறை அருளைப் பெற முடியாது. ஒரு மனிதன் இறையருளை பெற வேண்டும் என்றால் ஏன்? இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை தர்ம குணமும் பிறர்க்கு உதவும் குணமும் இருந்துவிட்டால் போதும் இவன் இறையை தேட வேண்டியது இல்லை. இறை இவனைத் தேடி வந்துவிடும். அவனிடம் இறையே வந்து கை ஏந்தும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 668

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

தர்மத்தை கொடுத்துக் கொண்டே போ. நல்லவை தீயவை நன்மை தீயவைகளை ஆராய வேண்டாம். இந்த தர்ம உபதேசத்தை எவன் கடைபிடிக்கிறானோ அவன் தினந்தோறும் இறையின் அருளுக்கு பாத்திரமாவான். அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பது தான் மனிதனின் எண்ணம். ஆனால் யாங்களோ அடுத்த பிறவிக்கு சேர்க்க செல்கிறோம்.

கடமையை ஆற்றுவதோடு உடலுக்காக உழைப்பதோடு உள்ளுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்த ஆத்மாவிற்காகவும் உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும். மனிதப் பிறவியின் உண்மையான நோக்கம் அதுதான். இக்கருத்தை ஆழ்மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். கொடுத்து கொடுத்து வறுமையை அடையும் விதி இருந்தாலும் பாதகம் இல்லை. கொடுத்ததினால் ஒரு நிலை வந்தால் அதுதான் இந்த உலகத்தில் உச்சகட்ட வளமை. அவன் தான் இறைவனுக்குப் பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 667

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள். பசுவிடம் கன்று திகட்ட திகட்ட உண்ட பிறகு மிச்சத்தை தான் மனிதன் எடுக்க வேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம் கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பரிகாரமும் கிடையாது. ஒரு பசு மாட்டை உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால் அவன் 12 சிவாலயங்களை எழுப்பி கலசவிழா செய்த பலனை அடைவான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 666

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒவ்வொரு மனிதனின் விதியானது மிகமிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையில் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் மிகக் கடினம். மனிதன் எண்ணிவிடலாம் உடலில் வலுவிருந்து கையில் தனமிருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று. அதுபோல் தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவ கிரகத்தினாலும் ஒன்பதாம் இடத்து அதிபதியினாலும் கர்ம பாவத்தினாலும் அதையும் தாண்டி இறைவனின் கருணையினாலும் கடாட்சத்தினாலும்தான் நடக்கும். ஆலய தரிசனமோ தல யாத்திரையோ சரியானபடி திட்டமிடாலே என்று மனிதன் எண்ணிவிடக் கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 665

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நாங்கள் அடிக்கடி கூறுவது என்னவென்றால் இறைவனே தவறு செய்யத் தூண்டினாலும் விதியே தவறான வழிக்கு அழைத்துச் சென்றாலும் போராடிப் போராடி ஒரு மனிதன் இறைவழியில் வந்து தன்னுடைய மனதை வலுவாக்கி உள்ளத்தை உறுதியாக்கி தவறான பழக்கங்களுக்கு எதிராகவே தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.

ஒவ்வொரு மனிதன் பின்னால் எத்தனையோ பாவ வினைகள் மறைந்து நின்று செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப் போட வேண்டுமென்றால் பகவானின் திருவடியை சதா சர்வ காலம் எண்ணுவதோடு எந்தவித குழப்பம் இல்லாமலும் சந்தேகம் இல்லாமலும் அள்ளி அள்ளி தந்து கொண்டே போகிற தர்மம் ஒன்றுதான் எளிய வழி. இந்நிலை உயர உயர ஒரு மனிதனின் உச்ச நிலையிலே இனி என்னுடையது என்று எதுவும் இல்லை எல்லாம் இறைவன் தந்து என் கண்ணில் படுகின்ற மனிதர்களுக்கு என்ன தேவையோ பிற உயிர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உதட்டால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உள்ளத்தால் முடிந்த ஒரு பிரார்த்தனையை செய்கிறேன். நான் பெற்ற பொருளால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறருக்காக அர்ப்பணம் செய்கின்ற குணம் வந்துவிட்டால் இறைவன் அருள் அவனிடம் பரிபூரணமாக பரிமளிக்க தொடங்கும். இது போல் நிலையிலே பிறருடைய பிரச்சினைகளை நீக்க ஒரு மனிதன் முயற்சி செய்தாலே அவனுடைய பிரச்சனைகளை தீர்க்க இறைவன் முன் வந்து விடுவான்.