ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 664

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நடக்கட்டும் நம்புகிறோம் என்பது மனிதர்களின் வாக்கு. நம்புங்கள் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.

எம் வழியே வருகின்ற மனிதர்கள். திடம் கொண்டு வைராக்கியம் கொண்டு தர்ம வழியிலும் சத்திய வழியிலும் இறை பக்தி வழியிலும் மிக நன்றாக செல்ல செல்ல நாங்களே ஒன்றை கூறி அதனை தேவையான தருணத்தில் நடத்தாமல் மாற்றுவோம். யாம் ஒன்றை கூறாமல் நடவாதப்பா என்று கூறி நடத்தியும் காட்டுவோம். இந்த இரண்டிற்கும் பல்வேறு விதமான கர்ம வினை சூட்சும நுணுக்கங்கள் உண்டு. அதை ஒரு விதமாக நுணுக்கமாக ஆய்ந்து பார்த்தால்தான் புரியும்.

ஆண்டாண்டு காலம் மந்திரங்களை ஜெபித்தாலும் மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டால் ஓட்டை பாத்திரத்தில் நீரை வைத்தது போல் ஆகிவிடும். முதலில் பூஜை தர்மம் தொண்டு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு பிறர் மனதை புண்படுத்தாமல் நாகரீயமாக வார்த்தைகளை பயன்படுத்துவது முக்கியம். அந்த பயிற்சியை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 663

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நீங்கள் அனைவருமே முன் ஜென்மங்களில் சித்தர்களிடம் உரையாடியவர்கள் தான். உறவாடியவர்கள் தான். அப்போது நீங்கள் எல்லாம் யாது கேட்டீர்கள் என்றால்? எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்களை மறக்கக் கூடாது என்று கேட்டீர்கள். எனவே நீங்கள் மறந்தாலும் நாங்கள் யாரையும் மறக்க மாட்டோம். மறந்தும் கைவிட மாட்டோம் என்பதால் நீங்கள் அனைவரும் சித்த வழி தொண்டு செய்ய வேண்டும். அந்த வழியில் இறைவனை காண வேண்டும். இதுபோல் யாம் கூறுவது என்னவென்றால் சேய்கள் எம்மை நாடும் தருணம் எது நடப்பினும் மனம் தளராமல் வந்தால் இறுதியில் இறைவன் அருளால் பரிபூரண வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 662

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மனித வாழ்க்கையில் கடமையை செய்தோம். பிரார்த்தனை செய்தோம். பிறருக்கு நன்மையை செய்தோம் என்று போக வேண்டும். பெரிய அளவிலே ஒன்றின் மீது பற்றும் அதி தீவிர பாசமும் வைத்தால் பிறகு அது நம்மை பாடாய்படுத்தும். இன்பம் என்ற ஒன்றை எவன் ஒருவன் உணருகிறானோ அவனால் தான் துன்பத்தை உணர முடியும். எவன் எதிலேயும் இன்பத்தையும் பார்க்கவில்லையோ அவனுக்கு எதனாலும் எவற்றாலும் துன்பமில்லை. அது இறை ஒருவருக்குத் தான் சாத்தியம். அதனால்தான் இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே என்று கூறப்படுகிறது. அண்ட சராசரங்களை படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஏதுமில்லை. தன் உள்ளத்தை தவிர.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 661

கேள்வி: சித்தர்கள் ஏன் மீண்டும் பிறப்பெடுக்கிறார்கள்?

மனிதர்கள்தான் தங்கள் கர்மா கழிவதற்கு பிறப்பெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் சித்தர்கள் இறையிடம் வேண்டி மனித குலத்திற்கு சேவை செய்ய பிறப்பெடுப்பார்கள். ஒரு சிறை சாலையில் கைதிக்கும் காவல் அதிகாரிக்கும் உள்ள தொடர்பு போல் ஒரு மருத்துவனுக்கும் நோயாளிக்கும் உள்ள தொடர்பு போல்தான் இதுவும் மனித குலத்திற்கு சேவை செய்யத்தான் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பிறப்பெடுக்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 660

கேள்வி:: பற்றை அறுக்க என்ன வழி?

ஒரு வீட்டை வாங்கும் போது இருக்கின்ற மகிழ்ச்சி அதை விற்கும் பொழுதும் இருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது இருக்கும் மனநிலை அது இறக்கும் பொழுது இருக்க வேண்டும். தனம் வரும் பொழுது இருக்கும் மனநிலை அது கையை விட்டுப் போகும் பொழுது இருக்க வேண்டும். இப்படி மனம் பக்குவடைய வேண்டும். இது கடினம் தான் என்று எமக்குத் தெரியும். என்றாலும் முயற்சியும் பயிற்சியும் செய்தால் அது சாத்தியப்படும். இந்த பக்குவத்தை பெற நிறைய சோதனைகளையும் வேதனைகளையும் தாங்க வேண்டும் இதுவே பற்றை அறுக்கும் வழி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 659

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

அகத்தியன் வாக்கை இந்த பூமியில் ஜீவ அருள் ஓலையில் பெறுவதற்கே எத்தனையோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு ஓலையில் வாக்கை பெறுவது ஒரு வகை புண்ணியம் என்றாலும் அந்த வாக்கை பெற்று அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் அதனால் கேட்கின்ற மனிதனுக்கு எந்த விதமான நற்பலனும் இல்லை என்பதை எமை நாடுகின்ற மனிதர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதை பார்ப்பதற்கும் பெறுவதற்கும் புண்ணிய பலன் வேண்டுமென்றாலும் கூட அதனையும் தாண்டி ஒரு சில ஆத்மாக்களுக்கு நேரடியாக அவ்வப்போது காட்சி தந்து வழிகாட்டுவது என்பது வேறு நிலை. இதுபோல ஓலை வழியாக வழி காட்டுவது என்பது வேறு நிலை.

தினசரி செய்ய வேண்டிய கடமைகள்: குறைந்தபட்சம் ஒரு ஆலயம் சென்று மனம் ஒன்றி வழிபட வேண்டும். அப்படி அல்லாதவர்கள் காலையிலும் மாலையிலும் இரண்டு நாழிகை இல்லத்தில் நெய் விளக்கு ஏற்றி உயர்வான முறையில் வாசனாதி திரவியங்களை இட்டு அமைதியாக ஏதாவது ஒரு இறை நாமாவளியை சொல்லி வர வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 658

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

கடமை ஆற்றுவது என்பது வேறு. கவலை கொள்ளுவது என்பது வேறு. இல்லிற்கும் (இல்லம்) ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டும். கடமைகளை தட்டிக் கழிக்க யாங்கள் சொல்லவில்லை. கடமைகளை சுமைகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று தான் கூறுகிறோம். வாழ்வை எளிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அகண்ட லட்சியத்திற்காக ஏங்குவதைவிட அகண்ட லட்சியத்திற்காக ஏங்கி உழைக்க வேண்டும். இன்பம் துன்பம் நிலைதாண்டி வாழ முயல்வதே மெய் ஞானமாகும்.

அனைத்தைப் பற்றி யும் அதைப் பற்றி யும் எதைப் பற்றி யும் கவலை கொள்ளாது உறவு பற்றி யும் கவலை கொள்ளாது கவலை பற்றி யும் கவலை கொள்ளாது பிரிவு பற்றி யும் கவலை கொள்ளாது பிறர் பரிவு பற்றி யும் கவலை கொள்ளாது தெளிவு பற்றி யும் கவலை கொள்ளாது குழப்பம் பற்றி யும் கவலை கொள்ளாது தனம் பற்றி யும் கவலை கொள்ளாதே ருணம் பற்றி யும் கவலை கொள்ளாது பிறர் சினம் பற்றி யும் கவலை கொள்ளாது தினந்தினம் எதைப் பற்றி யும் கவலை கொள்ளாது பற்றி பற்றி வாழாது பற்றா பற்றி வாழ இறை அருளும் அப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 657

கேள்வி: தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றுவதற்கு நேரம் உண்டா?

தீபத்தை ஏற்றுவதன் பொருள் இருள் மாயா சக்தி. இருள் அசுர சக்தி. ஒளியே தெய்வ சக்தி. எனவே ஒளியைத்தான் ஆதிகாலத்தில் தெய்வத்தின் வடிவமாக பார்த்து அதுபோலவே வழிபாடு செய்து வாந்தான். ஒளி அக்னியாக மின்னலைக் கண்டு அதிலும் தெய்வ அம்சமாக இப்படி தீபத்திலும் இறை சக்தியை கண்டு வணங்கி வந்தான். எனவே இன்றும் எத்தனையோ தற்காலத்தில் இதுபோல் எண்ணை இல்லா (மின்சார விளக்கு) விளக்குகள் மனிதன் பயன்படுத்தக் கூடிய நிலை இருந்தாலும் முந்தைய கால தீபம் ஏற்றுகின்ற முறையும் இருந்து வருகிறது. இவற்றில் கலப்பில்லா நெய் எல்லா வகையிலும் சிறந்தது. தீபத்தை ஏற்றுவதின் மூலம் ஒரு மனிதன் அந்த சுற்று வெளியை தூய்மை படுத்துகிறான். எனவே அந்த தீபத்தில் அவன் இடுகின்ற பொருளுக்கும் இதுபோல் அந்த சுற்று வெளிக்கும் பர வெளிக்கும் தொடர்பு இருக்கிறது. தூய்மையான நெய் தீபம் பொதுவாக அனைவருக்கும் ஏற்றது. எந்த நிலையிலும் அது ஏற்புடையது. அது இல்லாத நிலையிலே இலுப்பை எண்ணை கொண்டு ஏற்றலாம். எள் எண்ணையும் ஏற்றலாம். இதுபோல் தேங்காய் எண்ணையும் தாராளமாக ஏற்றலாம். இவற்றுக்கெல்லாம் காலமோ அல்லது இந்தந்த நட்சத்திரங்களில் தான் இந்தத்த தீபம் ஏற்ற வேண்டும் என்பதல்ல. ஆனால் தீபத்தை ஏற்றுகிறேன் என்று ஆலயத்தை அசுத்தப்படுத்தினால் அது கடுமையான தோசத்தை ஏற்றுகின்றவனுக்கு ஏற்படுத்தும். ஆலயத்தை தூய்மையாக பராமரிப்பதும் பக்தியின் ஓர் அங்கம்தான்.

கேள்வி: எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றலாமா?

பொதுவாக இது தேவையில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 656

கேள்வி: எதை என்றும் புரியாத அளவிற்கு கூட கிரகங்கள் பிடியிலிருந்து தப்பித்துக் காெள்ள ஒரே வழி?

அண்ணாமலையே அண்ணாமலையை (திருவண்ணாமலையை) நாடி நாடி வந்தாலே பாேதுமானது. கிரகங்கள் ஒன்றும் செய்யாது என்பேன். திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்து வர வேண்டும். இதனால் பல கர்மாக்கள் நீங்கும். அண்ணாமலை உண்ணாமலை கார்த்திகை திங்களில் (கார்த்திகை மாதத்தில்) அழகாகவே இங்கே நடனம் ஆடுவார்கள் என்பேன். அவர்களுக்கு இல்லம் கார்த்திகை மாதத்தில் வந்து செல்வார்கள் என்பேன். அழகாக பின் மகிழ்வான் என்பேன் ஈசன் தீபத்தன்று கூட.

இத்தீபத்தின் மகிமை தீபத்தை கூட எதற்காக ஏற்றுகின்றீர்கள்? எதை என்று கூட யாருக்கும் தெரிவதில்லை. ஏதோ தீபம் ஏற்றி விட்டார்கள் என்பதை கூட ஆனால் இம்மலையானது (திருவண்ணாமலை) முன்னொரு காலத்தில் தங்கம் வைரம் இதையன்றி கூட பன்மடங்காக இதனடியில் பல சித்தர்களும் கூட.

அவ் ஒளியை (மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது) எழுப்பும் பொழுது அப்பனே எதை எவற்றினின்றும் கூட அனைத்து சித்தர்களின் ஒளி தான் அது. அதை கண்களால் காண்கின்ற பொழுது நம் மனதில் கூட அப்படி சில தீய வினைகள் அகலும். அதனைப் பார்த்திட்டு (திருவண்ணாமலை தீபத்தை பார்த்திட்டு) அதனை நம் நெஞ்சில் நிறுத்திட்டு மனதில் ஓர் மாதம் அல்லது இரு மாதம் அல்லது ஐந்து மாதங்கள் கூட அந்த தீபத்தை பார்த்திட்டு தீபத்தை எதை என்று உணர நம் மனதிலே நிறுத்தி அண்ணாமலையில் தீபம் ஏற்றினார்களே அதை நினைத்து அதையே மனதில் நிறுத்தி அதையே வைத்துக் கொண்டு அத் தீபத்தை நினைத்துக் கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தால் பல கர்மாக்கள் கரையும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 655

கேள்வி: வான மண்டலத்தில் பல மாற்றங்கள் உதாரணமாக உத்தராயணம் தட்சிணாயனம் வளர்பிறை தேய்பிறை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் விடியற்காலையிலே தோன்றும் விடிவெள்ளி மாறாமல் இருக்கிறதே அது எப்படி?

விடிவெள்ளியும் மாறிக் கொண்டுதான் இருக்கிறதப்பா. அதை கவனித்துப் பார்த்தால் புரியும்.