ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 654

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு தாய் தந்தை இருக்கிறார்கள் சில பிள்ளைகளை பெறுகிறார்கள் அதில். இரண்டு பிள்ளை உயர்ந்த பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறார்கள், இரண்டு பிள்ளை ஏதோ ஒரு காரணத்தால் சரியான நிலையில் இல்லாமல் சிரமப்படுகிறார்கள் என்றால் அந்த தாய் தந்தை என்ன எண்ணுகிறார்கள் என்றால் நான்கும் நமது பிள்ளைகள் தான் இரண்டு நன்றாக வாழ்கிறது. இந்த இரண்டு நிலை எண்ணினால் மீதி இருக்கும் இரண்டு பிள்ளைகள் நன்றாக வாழ வைக்கலாமே என்று தானே எண்ணுவார்கள். அப்படி அல்லாமல் என்னையும் தாய் தந்தை படிக்க வைத்தார்கள் உன்னையும் தாய் தந்தை படிக்க வைத்தார்கள். நீ சரியாக படிக்கவில்லை அதனால் அவதிப்படுத்துகிறாய் நான் ஒன்றும் உனக்கு உதவ மாட்டேன் போ போ என்று நன்றாக இருக்கும் பிள்ளைகள் வட்டம் வரும் பிள்ளைகளை விரட்டினால் அது மேலிருந்த வாரியாக பார்த்தால் அறிவுக்கு ஏற்புடைய வாதமாக தெரிந்தாலும் ஈன்றோர்க்கு (பெற்றவர்களுக்கு) ஏற்றுக் கொள்ளப்படுமா. இவன் செய்வதால் ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை என்ற நிலை இருக்கும்போது தாராளமாக செய்யலாம் என்று எண்ணுவது போல இருக்கின்ற பிள்ளை நன்றாக இருக்கிறது என்று பெற்றோர்கள் மகிழ்வார்களா அல்லது அவதிப்படும் பிள்ளைக்கு இவன் உதவுவில்லை என்று வேதனைப்படுவார்களா .

அதைப் போலதான் இறைவன் படைப்பில் அனைத்தும் இறைவனுக்கு பிள்ளைகளே. கருமத்தாலா அல்லது வேறு காரணத்தாலோ ஒருவன் அவதிப்படும்போது நன்றாக இருக்கின்ற மனிதன் அப்படி இல்லாத மனிதனுக்கு தன்னிடம் கிடைத்த உயர்ந்த பாக்கியத்தை வாய்ப்பை அவனுக்கும் தந்து வாய்ப்பிருக்கும்போது அவனுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அது செய்வது. தேவைப்பட்டால் அவனுக்கு சொந்தமாக ஏதாவது செய்து பிறர் கையை ஏந்த வேண்டிய நிலை இல்லாமல் வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை செய்வதுதான் உத்தமமான காரியம். இதை செய்வது ஒரு ஏழை மைந்தன் நல்லதொரு தொழில் வாய்ப்பை தருவது அல்லது அவனுக்கு உள்ள சரியான பிரச்சனைக்கு சரியான தீர்வை செய்வதோ சகஸ்ரம் சகஸ்ரம் சகஸ்ரம் (ஆயிரம் ஆயிரம் ஆயிரம்) யாகம் செய்வதை விட உயர்வு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 653

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையாலே யாம் கூறுகிறோம் அப்பா அதிக அளவு தனம் இருப்பவன் தனவான் என்று மனிதர்கள் எண்ணுகிறார்கள் அப்படி அல்ல அதிகளவு தனம் இல்லை என்றாலும் கூட இருக்கின்றன பணத்தை பிறருக்கு பிறரின் குறிப்பு அறிந்து எவன் தருகிறானோ அவன்தான் மெய்யான தனவானாம் ஆவான். தனத்தை தானே வைத்துக் கொண்டிருக்கக் கூடியவன் உண்மையில் ஏழை தான் இதுபோல் மட்டும் அல்ல நாங்கள் அடிக்கடி கூறுவது போல இருப்பதை கொடுப்பது சிறப்பு இருப்பதை எல்லாம் கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு ஆகும். எனவே கொடுக்கின்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அத்தனை பேரும் தனவான் மட்டுமல்ல. இந்த உலகில் அவன் தான் குபேரன் குபேரனுக்கு எல்லாம் குபேரன். ஆனால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் கொடுப்பதற்கு பொருள் இல்லை என்று ஏங்குகிறானே அப்பொழுது அந்த உண்மையான ஏக்கமே அவன் ககரம் ககரம் கொடுத்ததற்கு சமமாகி இறைவன் அவனுக்கு அதற்குரிய புண்ணிய பலனை தந்து விடுகிறார். ஆனால் இறைவன் அருளால் ஒரு பிறவியில் செய்த புண்ணியத்தால் அதிகம் அதிகம் அழியக் கூடிய செல்வத்தை பெற்ற தனவான் இவையெல்லாம் பிறருக்கு தந்து விட்டால் எனக்கும் என் குடும்பத்திற்கும் பிறரிடம் நிற்க வேண்டிய நிலை வரும் எனவே யாருக்கும் தரமாட்டேன் என்று வைத்திருக்கிறான். அவன் தான் உண்மையில் உலகில் பரம ஏழையாவான். அவன்தான் இருந்தும் வறுமையில் வாடுகின்ற மனிதன் ஆவான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 652

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு மனிதனானவன் தனக்கும் தன குடும்பத்திற்க்கும் செலவு செய்வது இயல்பு. தர்ம சிந்தனை என்பது பூர்விக புண்யம் இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு வரும். அந்த தர்ம சிந்தனை இருக்கும் பொழுது அந்த தர்மமே அவன் எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும். ஏன் என்றால் ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும் எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும் எத்தனை அபிஷேகம் யாகங்கள் செய்தாலும் கூட அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால் இறை அருளை பெற முடியாது. ஒரு மனிதன் இறை அருளை பெற வேண்டுமென்றால் பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஏன்? இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. தர்ம குணமும் பிறருக்கு உதவும் குணமும் இருந்து விட்டால் போதும். இவன் இறையை தேட வேண்டியதில்லை. இறை இவனை தேடி வந்து விடும். எனவே எவனுக்கு இறை அருள் இருககிறதோ அவனுக்குத்தான் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். பிறர் படுகின்ற கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற எண்ணம் வ௫ம். அது மட்டும் அல்லாது எவன் ஒருவன் அதிக அளவு தர்மம் செய்கிறானோ அவனிடம் இறையே கை ஏந்தும் என்பதற்கு கர்ணனே ஒ௫ சாட்சி. எனவே பிள்ளைகளுக்கு ஈன்றோர சொல்லி கொடுக்க வேண்டியது. இன்னும் சொல்ல போனால், சொல்லி கொடுக்க வேண்டியதே இல்லை. ஈன்றோர் பிள்ளைகளின் முன்னால் தானத்தை அள்ளி கொடுத்துக் கொண்டே போனால் அதை பார்க்கின்ற பிள்ளைகள் தானாகவே பிறருக்கு கொடுக்கின்ற மன நிலைக்கு வந்து விடும். ஒரு பிள்ளைக்கு நீ டாக்டர் ஆகு விஞ்ஞானி ஆகு என்று தான் சொல்லி கொடுக்கிறார்களே ஒழிய நீ பிறருக்கு உதவு என்று யாரும் சொல்லி கொடுப்பதில்லை. ஏன் என்றால் ஒருவன் உலகியல் ரீதியாக வெற்றி பெறுவதும் வெற்றி பெறாமல் போவதும் அவன் விதியாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு தொழிலை செய்து அவன் தன ஜீவனை நடத்தி கொள்ளலாம். ஆனால் தர்ம குணம் மட்டும் ஒருவனுக்கு எத்தனை புத்தகம் படித்தாலும் வந்து விடாது .பிறர் என்ன உபதேசம் செய்தாலும் வந்து விடாது. அது அவன் பிறப்பிலேயே வர வேண்டும். அதற்கு தாய் தந்தை புண்யம் செய்திருக்க வேண்டும். தாய் தந்தையின் முன்னோர்கள் புண்யம் செய்திருக்க வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 651

கேள்வி: ஸ்ரீபெரும்புதூர் அருகே 2000 ஆண்டு பழமை வாய்ந்த சிவாலயம் சிதிலமடைந்துள்ளது. அது எப்பொழுது கும்பாபிஷேகம் காணும்? யாரால்?

இறைவன் அருளால் பழமையான ஆலயம் என்று நாங்களும் கூறுகிறோம். மனிதர்களுக்கும் அது போன்ற ஆலயங்களுக்கு செல்வதற்கு உற்சாகமாக இருக்கிறது. ஒத்துக் கொள்கிறோம். தவறொன்றும் இல்லை. பழமை வாய்ந்த சிவாலயம் என்றாலே மனிதனுக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும். ஆலயம் முதலில் கட்டப்பட்டதா? அல்லது பூமி முதலில் படைக்கப்பட்டதா? இது போல் நிலையிலேயே பூமி முதலில் படைக்கப்பட்டு பிறகு உயிரினங்கள் தோற்றுவிக்கப்பட்டு பிறகு மனிதன் கூறியபடியே பரிணாம வளர்ச்சியில் மெல்ல மெல்ல மனிதன் வளர்ந்து இறைவனை உணர்ந்து ஆலயம் கட்டியதாக் கொண்டால் ஆலயம் பழமையானது என்றால் அதைவிட பழமையானது புவி. அந்தப் புவியே ஒரு ஆலயமாகவும் அதில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பிள்ளையாகவும் எண்ணி இந்த ஒட்டுமொத்த புவியையும் ஆலயமாக எண்ணி அந்த புவியை போற்றி பாதுகாத்தாலே அது மிகச்சிறந்த உழவாரப் பணியாகும். இருந்தாலும் இன்னவன் கூறிய ஆலயமும் விரைவில் சில ஆத்மாக்களால் நல்ல விதமாக சீரமைக்கப்பட்டு கலச விழா காணப்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 650

கேள்வி: மனதை மகிழ்ச்சியோடும் நன்மையை மட்டும் சிந்திக்கும்படி வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகள் என்ன?

இறைவன் அருளாலே மனதிற்கு பயிற்சி என்றாலே முதலில் எண்ணங்களை கவனிப்பதும் எண்ணங்களை ஒழுங்கு செய்வதும் ஆகும். இதோடு மட்டும் அல்லாமல் யாங்கள் அடிக்கடி கூறுவது போல மனிதன் பார்வையிலே மனித சிந்தனையிலே யாருக்கு எவையெல்லாம் துன்பமாக தோன்றுகிறதோ துயரமாக தோன்றுகிறதோ அதுபோல் துன்பங்களும் துயரங்களும் வரும் பொழுதெல்லாம் மனம் விரக்தி அடையாமலும் மனம் தளர்ந்து போகாமலும் இறை நம்பிக்கையை விட்டுவிட்டு போகலாம் என்கிற எண்ணம் வராமலும் இருக்கும் வண்ணம் மனதை நன்றாக வைரம் போல் வைடூரியம் போல் வைராக்கியம் கொண்டு வைத்திருக்க மனிதன் முயற்சியும் பயிற்சியும் எடுத்தல் அவசியம். இது கிட்ட இறைவன் அருள் வேண்டும் என்று வேண்டிக் கொள்வது அவசியம். துன்பத்திலும் துயரத்திலும் தளர்ந்து போகாமல் விரக்தி அடையாமலும் துன்பம் அதிகமாக வந்து விட்டால் உலகியல் கடமைகளை செய்ய மாட்டேன் நன்மை தரும் செயலை செய்ய மாட்டேன் என்று எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமலும் இருக்க வேண்டும் இறைவா அதற்குரிய தன்மையை கொடு இறைவா என்று வேண்டிக் கொள்ளுதலே மனதிற்கு உண்டான தலை சிறந்த பயிற்சியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 649

கேள்வி: நாங்கள் அனைவரும் உங்களை குருநாதா என்று அழைக்கிறோம். தாங்கள் யாரை சீடர் என்று அழைப்பீர்கள்?

எம்மைப் பொருத்தவரை எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ யாருக்கெல்லாம் எத்தனை கஷ்டத்திலும் சத்தியத்தை விடக்கூடாது என்று நம்பிக்கை இருக்கிறதோ அவனெல்லாம் எமது சிஷ்யர்களே அவளெல்லாம் எமது சிஷ்யய்களே என்னும் அதனையும் தாண்டி எமது சேய்களே.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 648

கேள்வி: குருநாதா வடக்கு உயர்ந்ததினால் உலகை சமப்படுத்த தாங்கள் தென்னகம் வந்தீர்கள் என்று வரலாறு உள்ளது. இதன் கருத்தை சொல்லுங்கள்:

பள்ளம் மேடு என்று பூமியை குறிக்கவில்லை. மனிதனின் மனங்களில் உள்ள மேடு பள்ளங்களை அதை நேர்படுத்தவே எமக்கு இறைவன் கட்டளையிட்டான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 647

கேள்வி: அனைத்து பிரச்சினைகளுக்கும் கர்மா தான் காரணமாகிறது. இது மாயையால் மனிதனைப் பற்றுகிறது. அவதாரங்களாகவே இருந்தாலும் அவர்களையும் மாயை பற்றுகிறது என்று முன்னர் கூறியிருந்தீர்கள். மாயை தான் உயிர்களை பற்றுகிறது. அப்படி செய்வது யார்? இறைவன் தானே? அதற்கு பொறுப்பு இறைவன் தானே? பிறகு ஏன் மக்களைத் தாக்க வேண்டும்?

இறைவன் அருளாலே நல்லதொரு வினாவை இன்னவன் எழுப்பியிருக்கிறான். எனவே இனிமேல் அனைத்து பாவங்களும் இறைவனுக்கு சேர்ந்துவிடும் என்பதால் சேய்கள் அனைவரும் இனி பாவங்களை துணிந்து செய்யலாம். இருந்தாலும் சிந்திக்க வேண்டிய வினாவைத்தான் இவன் எழுப்பி இருக்கிறான். நன்றாக கவனிக்க வேண்டும். மாயை மனிதர்களை பற்றுகிறது. ஏன்? ஒரு மனிதரிடம் நிலம் இருக்கிறது அதிலே முறையாக விவசாயம் செய்கிறான். பயிர் விளைகிறது சிலருக்கு பயிரை விட களை அதிகம் விளைகிறது. அந்த நிலம் இருப்பதால்தானே நான் விவசாயம் செய்தேன். விவசாயம் செய்தால் தானே களை வந்தது என்று அவன் அலுத்துக் கொள்ளலாமா?

நன்றாக கவனிக்க வேண்டும். மாயை சென்று எல்லோரையும் பற்றும் வண்ணம் அந்த உயிர்களின் கர்ம வினை இருக்கிறது. உயிர்களை இறைவன் ஏன் படைத்தான்? படைத்ததால்தானே உயிர்கள் எல்லாம் பாவங்கள் செய்தது? என்ற அடுத்ததொரு வினாவை ஏற்கனவே இவன் கேட்டிருக்கிறான். அதாவது ஏகன் ஏகனாகவே இருந்து விட்டால் பிறகு பிரச்சனையே இல்லையே. ஏகன் எதற்கு அநேகமாக மாறினான்? என்று இவன் கேட்கிறான். ஏகன் அநேகமாக மாறுவதற்கு முன்னால் அந்த ஏகனை பார்த்து யாராவது ஒருவர் நீ இப்படியே இரு பல் கூறுகளாக பிரியாதே என்று கூறியிருக்கலாம். ஆனால் அங்கு தான் அப்படி கூறுவதற்கு யாரும் இல்லையே. அப்படி யாராவது கூற வேண்டும் என்பதற்காகவாவது ஏகன் அநேகன் ஆகி இருக்கலாம் அல்லவா? எனவே என்னை எதற்காக படைத்தாய்? படைத்ததால்தான் பாவங்கள் செய்தேன் என்று கூறுவதை விட நான் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வண்ணம் என் மன நிலையை அமைத்துக் கொடு என்று பிரார்த்தனை செய்வது சிறப்பப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 646

கேள்வி: கருட புராணத்தில் தாய் தந்தைக்கு செய்வது பல ஆயிரம் மடங்காகவும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு செய்வது பல லட்சம் மடங்காகவும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையா? கருட புராணத்தை இறப்பு ஏற்பட்ட வீட்டில் தான் படிக்க வேண்டும் என்று சொல்லப்படுவது பற்றியும் அதில் கூறப்படும் சொர்க்கம் நரகம் தண்டனைகள் பற்றியும் விளக்குங்கள்:

இறைவன் அருளால் கருட புராணத்தை அனுதினமும் ஓதலாம். தவறேதும் இல்லை. இது அனுதினமும் ஓதப்பட்ட விஷயம் அல்ல என்பது மனிதனின் அறியாமையால் ஏற்பட்ட ஒன்று. மனிதன் உடலை விட்ட பிறகு அவனுக்கு கருட புராணம் ஓதி என்ன பயன்? உடலோடு இருக்கும் போது கருட புராணம் ஓதினால் தான் இப்படி எல்லாம் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்கும். இப்படி எல்லாம் வாழக்கூடாது என்ற கருத்தை புரிந்து கொள்வான். ஆனால் மனிதனுக்கு கிட்டிய கருட புராணம் குறைந்த அளவை. அதுவும் இடைச் செருகல்களோடு கிடைக்கப் பட்டிருக்கிறது. அதே போல் நரகம் சொர்க்கம் என்பது உண்மை. அது ஒரு புறம் இருக்கட்டும். இப்பூலகமே ஒரு நல்ல எண்ணம் கொண்டவனுக்கு புண்ணிய ஆத்மாவிற்கு சொர்க்கமாகவும் அப்படியில்லாதவனுக்கு நரகமாகவும் தோன்றுவது உண்மையே.

அடுத்ததாக தாய் தந்தையை பேண வேண்டும் என்ற நோக்கிலே தாய் தந்தையை மதிக்க வேண்டும் போற்ற வேண்டும் என்பதற்காக அவ்வாறெல்லாம் எல்லா புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. அதே சமயம் உடன் பிறந்தவர்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக மற்றவர்களுக்கு உதவ கூடாது என்று நாங்கள் கூறவில்லை. என்னதான் ரத்த பந்தம் உடையவர்களுக்கு உதவ வேண்டியது கடமை என்றாலும் ரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவும் பொழுது தான் விரைவில் பாவங்கள் குறைகின்றன. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டியது மனிதனின் அத்தியாவசியமான கடமை. அந்த கடமையிலிருந்து அவன் தவறினால் கடமை தவறிய குற்றம் பாவம் வந்து சேரும். ரத்த தொடர்பில்லாதவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் புதிதாக பாவம் வராது. ஆனால் சேர்த்த பாவம் தீராது. புண்ணியமும் சேராது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 645

கேள்வி: பித்ரு தோஷம் என்றால் என்ன? ஒருவனுக்கு ஜாதக ரீதியாக இல்லாமல் பித்ரு தோஷத்தால் என்னென்ன தடைகள் ஏற்படும்? அந்த தடைகளை நீக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவனின் கருணையை கொண்டு நாங்கள் கூறுவது யாதென்றால் பித்ரு என்ற சொல்லுக்கு முன்னோர்கள் என்ற பொருள் உண்டு. ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவம், அவர்கள் பெற்ற சாபம், அந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீர் கடனை செய்யாது விட்டதால் அவர்களால் வரக்கூடிய தோஷம் என்று பல்வேறு விதமான தோஷங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த பித்ரு தோஷத்தின் அடுத்த உயர்வான நிலைதான் பிரம்மஹத்தி தோஷம். அதன் கிளை தான் நாகதோஷம். எனவே இவையெல்லாம் உச்சகட்ட பாவத்தையும் குறியீடுகள்தான். நாகதோஷம் என்றால் ஏதோ நாகப்பாம்பை கொன்றால் வரும் தோஷம் என்று என்பது ஒரு தவறான நிலையாகும். எல்லா வகையான உச்சகட்ட பாவத்தின் ஒரு அடையாளம் தான் இது போன்ற தோஷத்தின் நாம கரணங்கள் (பெயர்கள்). நாம கரணங்களை விட்டுவிட்டு உச்சகட்ட பாவங்கள் வாழ்க்கையில் பின்னிக் கலந்திருக்கிறது. அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டாலே முதலில் காலபைரவர் வழிபாட்டை துவங்க வேண்டும். அடுத்ததாக பசுக்களை நல்ல முறையில் பராமரிக்கின்ற ஒரு நிலைக்கு தன் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பால்பட்ட ஆலயங்களுக்கு சென்று முடிந்த தொண்டுகளை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தினத்திற்கு உச்சிப் பொழுதிற்குள் ஒரு ஏழைக்காவது அன்னமிட வேண்டும். நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் அன்னமிடுதலை நாங்கள் வரவேற்றாலும் முறையாக அன்னமிடுதல் ஒரு வழக்கம் இருக்கிறது.

அதாவது அதிதியாக வரக்கூடிய மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் தேகமெங்கும் அழுகியிருந்தாலும் அருவருக்கத்தக்க தோற்றம் இருந்தாலும் அவனை அழைத்து அவன் பாதத்தை நன்றாக நீரால் நனைத்து பாத பூஜை செய்து அவனை இல்லத்திலே அமர வைத்து உயர்ந்த மகானோ ஞானியாகவோ வந்தால் என்ன மரியாதையை மனிதன் செய்வானோ அப்படி செய்து இன்முகத்தோடு உணவிடுவதே பரிபூரண அன்ன சேவையாகும். எதோ ஒரு அன்னத்தை வாங்கினோம் இந்தா பிடித்துக் கொள் என்று கொடுப்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் எப்படியாவது செய்கிறார்களே சேய்கள் என்று நாங்கள் சற்றே மனம் மகிழ்ந்து இருக்கிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வந்தாலும் அந்த பித்ரு தோஷங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இது ஒரு மனித வாழ்க்கையில் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. செய்தொழில் விருத்தி இல்லாமலும் குடும்பத்தில் குழப்பமும் அதிக மருத்துவ செலவினங்களை ஏற்படுத்திக் கொண்டு நோய் ஒன்று போய் ஒன்று வந்து கொண்டே இருப்பது போல எல்லாவற்றையும் தாண்டி மனக்கிலேசமும் சித்த பிரமையும் குடும்பத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் எனவே இது போல் எளிய வழிபாடுகளையும் தர்ம காரியங்களையும் செய்து ஒரு மனிதன் இந்த தோஷத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வர வேண்டும்.