எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும் தனத்தையே குறியாகக் கொண்டு வாழ்பவரை யாங்கள் கரை சேர்ப்பதில்லை. சிறப்பான சிந்தை உயர்ந்த குணம் எவருக்கும் உதவுதல் எதிரிக்கும் உதவுதல் என்ற மனம். மனத்தால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது. வாரி வாரி வழங்குவது போன்ற குணங்கள் எம்மை அருகில் சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க வாக்கு ஒன்று சொல்ல செயல் ஒன்று செய்ய வரும் மாந்தர்களை நாங்கள் நன்றாக அறிவோம். சரணாகதி அடைந்தால் தான் தேற முடியும். எம்மை பணிந்தாலும் பணியா விட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும் ஏற்கா விட்டாலும் இறையை ஏற்க வேண்டும். வெறும் வழிபாட்டை மட்டுமல்ல சத்தியத்தை ஏற்க வேண்டும். ஏற்பதென்றால் மந்திர உருப்போடுவது மட்டுமல்ல. மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்க வேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால் இறையிடம் கணிதம் பார்த்தால் யாங்களும் கணிதம் பார்க்க வேண்டி வரும்.
ஒரு மனிதன் கோயிலிலோ சமாதியிலோ தியானத்திலோ இறைவனை பெரியவர்களை நினைத்து ஆழ்நிலையில் சென்று ஆனந்தப்பட்டு அதிலும் ஒரு உயர் நிலையில் செல்லும் போது உடல் உருகி உள் உருகி பேரானந்தத்தில் பௌதீக உடலின் உணர்வு அழிந்து எங்கு இருக்கிறோம் என்று பிரித்தரியாத நிலையில் அவன் சூட்சும சரீரம் அந்த நேரத்தில் அவன் தியானிக்கும் அந்த இறை மகான் போன்றவர்களின் ஆத்ம நிலையுடன் ஒன்றி பிணைந்து நிற்கும். அந்த நிமிடம் அது உணருகிற நிலை தான் இறைவன். ஏனென்றால் இறை சக்தியுடன் பிணைந்து நிற்கும் நிலையில் அவன் ஆத்மா இறையாக மாறிவிடுகிறது. இது ஒரு வினாடியில் நடந்து விடுகிற நிகழ்ச்சி ஆயினும் என்ன நடந்தது என்பதை அந்த ஒருவனால் பௌதீக உடலால் அறிவால் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. சித்தர்களாகிய எங்களுக்கே ஒருவன் எத்தனை முறை இறை அனுபதியில் ஒன்றி இருந்திருக்கிறான். எத்தனை முறை அந்த ஆத்மா சுத்தமடைந்திருக்கிறது என்பதை பகுத்தறிய முடியும். ஒவ்வொரு முறையும் தியானத்தில் ஆத்மாவும் உடலும் சுத்தம் அடைகிற பொழுது பெரியவர்கள் தொடர்பு மிக எளிதாகும். இதனால் தான் தியான வழியில் செல்வதை நீண்ட தியானத்தை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
நாக தோஷம் என்பது எல்லா விதமான பாவங்களின் மொத்த குவியல். நாக தோஷம் என்பது ஒரு குறியீடு. இதிலிருந்து விடுபட இரு வழிகள் ஒன்று ஆன்மீக வழியில் துர்க்கை கணபதி ராகு கேது தெய்வங்களின் காயத்ரி மந்திரத்தை தினமும் 27 எண்ணிக்கை உருவிடுவதுடன் இரண்டாவதாக பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வது பசுக்களை தானமாக தருவது பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும். ஏழை பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றை செய்யலாம்.
வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தை வைத்து செய்து வைத்து ஏதோ மண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி அதன் தலையில் சில மலர்களை இட்டு ஒரு துளி பாலையும் இட்டு அதை ஆழியிலோ நதியிலோ கரைத்து விட்டால் நாக தோஷம் போய்விடும் என்றால் எளிதாக எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு குறியீடு அடையாளம். இருந்தாலும் மேல் கூறியவற்றோடு இப்பொழுது இவ்வாறு நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால் ஏதாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டு விடலாம். அது ஆலய தொண்டிற்கு பயன்படட்டும். இல்லை அந்த வெள்ளியை உபயோகமாக தனமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாக தோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகள் ஆகும்.
சித்தர்கள் இருக்கிறார்கள் இல்லை. இறை இருக்கிறது அல்லது இறை இல்லாமல் போகிறது. சட்டம் இல்லாமல் போகிறது. இப்படி எது இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக மிக மிக நல்லவனாக மாற வேண்டியது கட்டாயம். அதனால் தான் சிந்திக்கும் ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது போல் நிலையிலேயே தொடர்ந்து இறைவழியில் வருவதாகவும் சித்தர்கள் வழியில் வருவதாகவும் கூறிக் கொள்கின்ற மனிதன் இந்த வழிமுறையை அறியாத தெரிந்து கொள்ளாத அல்லது அறிந்தும் பின்பற்ற முடியாத எத்தனையோ சராசரி மனிதர்கள் வாழ அவர்கள் செய்ய அஞ்சுகின்ற செயலை எம்மை அறிந்தும் எம் வாக்கை அறிந்தும் இன்னும் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் ஓரளவு தெரிந்தும் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் விதியை நோவதா? அல்லது சரியாக வழி காட்டாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஓலையிலே வந்து கனக வண்ண அச்சரத்திலே காட்டி காட்டி காலம் தோறும் ஓதி ஓதி அவற்றையெல்லாம் செவியில் கேட்டு கேட்டு மனதிலே பாதிக்காமல் விட்ட சேய்களைப் பற்றி விசனப்படுவதா?
எம் வழியில் வருவதாக எவனொருவன் உறுதியாக முடிவெடுத்து வந்தாலும் உடனடியாக சற்றும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் எப்படி வீட்டிற்குள் அரவம் வந்துவிட்டால் அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒரு மனிதன் ஈடுபடுகிறானோ எப்படி ஒரு இல்லம் தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க முயல்கிறானோ அதேபோல உள்ளத்திலே ஒரு தீய எண்ணமும் ஒரு ஒழுக்கக் கேடான எண்ணம் தோன்றினால் அது முளை விடும் பொழுதே அதனை கிள்ளி எறிந்து விட வேண்டும். அது விருட்சமாகி விட்டால் பின்னர் அதை அகற்றுவது கடினம். அது இருந்து விட்டுப் போகட்டும் நன்றாக தானே இருக்கிறது அழகாக தானே இருக்கிறது என்று ஒரு மனிதன் எண்ணினால் பிறகு அந்த தீய விருட்சம் அவன் உள்ளம் என்னும் வீட்டையே இடித்து விடும். எனவே இது போல் கருத்தை மனதில் வைத்துக் கொண்டு காலாகாலம் எமது வழியிலே விடாப்படியாக வருகின்ற சேய்களுக்கு இறைவன் அருளால் யாம் எமது நல்லாசியைக் கூறிக் கொண்டே இருப்போம் ஆசிகள்.
கேள்வி: குறிப்பிட்ட ஒரு நன்மை நடக்க வேண்டும் என்று எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் வேறு நன்மைகளை வேண்டினால் கிடைக்காதா?
ஒரு ஆலயத்தின் மண்ணை மிதிக்கும் பொழுதே கிரக நிலை கொண்ட மனிதர்களின் தோஷங்கள் குறையட்டும் என்பதற்காக விதவிதமாக ஆலயங்கள் இங்கே எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஒரே ஆலயம் சராசரி மனிதன் செல்லும் பொழுது உலகியல் தேவையை தரும் தருவாகத் தோன்றுகிறது. அதே ஆலயத்திற்கு ஓரளவு பற்றை விட்ட ஞானி செல்லும் பொழுது முக்தியே நல்கின்ற ஆலயமாக தோன்றுகிறது. எனவே இருப்பது அதுபோல் ஒரே ஆலயம்தான். செல்லுகின்ற பக்தர்களின் என்ன ஓட்டத்திற்கு ஏற்ப மனோ தர்மத்திற்கு ஏற்ப மனப்பக்குவத்திற்கு ஏற்ப அந்த மனிதனுக்கு நல்லருளை வழங்குகிறது. எதுவும் வேண்டாம் இறைவா நீ தான் வேண்டும் என்ற என்று வேண்டுகின்ற உள்ளங்கள் ஆலயம் செல்லும் பொழுது அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டுள்ள ஆலயமாக இருந்தாலும் அதுபோலவே நலம் நடக்கிறது
இறைவன் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் தளராத பக்தி தடைபடாத தர்மம் தவறாத தர்மம் என்றென்றும் இதுபோல் வழியிலே மாந்தர்கள் செல்ல செல்ல இறைவனின் பரிபூரண அருளும் தொடருமப்பா. அப்பனே இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றுமே நலமே நடக்கும் என்று யாம் காலாகாலம் கூறிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் இயம்புங்கால் மனிதனின் மனதிலே உறுதியின்மையும் தெளிவு இல்லாததாலும் லோகாயத்தை அழுத்தம் திருத்தமாக பிடித்துக் கொண்டிருப்பதாலும் உடனடியாக ஆதாயத்தை எப்பொழுதுமே மனித மனம் எதிர்பார்ப்பதாலும்தான் அனைத்து குறுக்கு வழிகளையும் மனிதன் கையாளுகிறான். நீக்கமற நிறைந்துள்ள இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கின்ற என்கிற ஒரு உணர்வு உண்மையாகவே மெய்யாகவே ஒரு மனிதனுக்கு அழுத்தம் திருத்தமாக இருக்குமானால் அவன் யாருமே பார்க்கவில்லை யாருக்கும் தெரியவில்லை நான் இடர்படுகிறேன் எனவே இந்த தவறை செய்யலாம். என்னை விட அதிக தவறு செய்யக் கூடிய மனிதன் நன்றாக தானே இருக்கிறான். எனவே நான் தவறு செய்யலாம். அது தவறு இல்லை என்ற வாத பிரதிவாதங்களை தமக்குள் வைத்துக் கொண்டு தவறான வழியில் சென்று கொண்டே இருக்கிறான்.
ஆயினும் கூட இறைவன் பார்க்கிறார் பார்க்கவில்லை மற்றவர்கள் அறிகிறார்கள் அறியவில்லை என்று சிந்திக்காமல் அவனவன் மனமே சாட்சியாக வைத்து ஒரு மனிதன் நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தாலே அம்மனிதனுக்கு இறை வழிபாடு கூட தேவையில்லை எனலாம். நன்றான இறை வழிபாட்டையும் நன்றாக பாசுரங்களையும் ஓதுவதோடு ஒரு மனிதன் நின்று விடக்கூடாது. அதையும் தாண்டி அப்பழுக்கற்ற மனிதனாக எல்லோருக்கும் நலத்தை செய்யும் புனிதனாக போராடியாவது வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோல் நல்ல வழியை தொடர்ந்து கடைபிடித்தாலே இறைவன் அருள் பரிபூரணமாக தொடரும். இல்லையென்றால் வெறும் சடங்குகளை மட்டும் செய்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு சராசரி மனித நிலைதான் அங்கு நிற்கும்.
எனவே இறைவனை வணங்கவும் தர்மங்களை செய்யவும் சத்தியத்தை பேசவும் மட்டுமல்லாது அடிப்படை மனித நேயத்தை மறந்து விடாமல் வார்த்தைகளில் பணிவு செயல்களில் பணிவு தேகத்தில் பணிவு பார்வையில் பணிவு என்று ஐம்புலனும் ஆதாரமாக இருக்கும் மனம் பணிய மனதோடு இருக்கும் ஆத்மா பணிய இப்படி பணிதலே இறைவனருளை பரிபூரணமாக பெற்றுத் தரக்கூடிய நல்லதொரு உயர் நிலையாகும். எனவே பணிதல் என்பது இறங்குதல் அல்லது தாழ்ந்து போதல் என்ற பொருள் அல்ல. வேடிக்கையாக கூறப்போனால் நிறை காட்டும் நிறை காட்டுமனி (தராசு) தூலக்கோல் அதை கவனித்தால் தெரியும். எங்கே அதிக கனம் பரிமாணம் தெரிகிறதோ அந்த தளம் தாழ்வு இருக்கும். கன பரிமாணம் இல்லாத அடுத்த தளம் உயர்ந்தே இருக்கும். இப்பொழுது அது உயர்ந்து இருப்பதால் மெய்யாக அது உயர்ந்ததா? இன்னொரு தளம் தாழ்ந்திருப்பதால் மெய்யாகவே அது தாழ்ந்ததா? எனவே முற்றிய பயிர் தலை கவிழ்ந்தே இருக்கும். ஆங்கே நிறை குடம் தளும்பாது இருக்கும். இவற்றையெல்லாம் மனிதர்கள் குறிப்பாக எமது வழியில் வரக்கூடியவர்கள் புரிந்து கொண்டு வாழ இறைவன் அருளும் தொடர்ந்து கொண்டே வருமப்பா.
உலகியல் செயல்கள் அனைத்தும் கர்ம வினைகளால் (மனிதர்கள்) ஏற்படுத்திக் கொள்பவை. ஏற்பட்டுக் கொண்டிருப்பவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தில் பணி புரிகின்ற மனிதன் அந்த நிறுவனத்தை தன் இல்லமாக ஒரு பொழுதும் கருகுவதில்லை. வந்து போகின்ற இடமாகத்தான் கருதுகிறான். ஆனால் தன் இல்லம் தன் வாகனம் தன் குடும்பம் என்றால் சற்றே ஒட்டுதல் வந்து விடுகிறது. எனவே இந்த உலகத்தையும் ஒரு நிறுவனமாக பார்த்து இங்கே சில காலம் பணிபுரிய அந்த ஆத்மா இந்த உடம்பு என்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. வந்த பணி முடிந்தவுடன் இல்லம் திரும்புவது போல அது செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும் என்ற நினைவோடு வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டு விட்டால் மனம் ஒடுங்க தொடங்கிவிடும்.
வாழ்க்கையில் எதிர்படும் எல்லா வகையான ஏழைகளுக்கும் உழைக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் உழைத்தும் போதிய வருமானம் இல்லாதவர்களுக்கும் இயன்ற உதவிகளை செய்வதும் இதுதான் அதுதான் என்று இல்லாமல் ஆய்ந்து பார்க்காமலும் சமயத்தில் தேவை என்று வரும்பொழுது அள்ளி அள்ளி தரக்கூடிய சிந்தனையிலே ஒரு பெருந்தன்மையான போக்கிலே தர்மத்தை செய்து கொண்டே இருந்தால் அது இறையருளை பெற்று தர உதவுமப்பா.
கேள்வி: பல குடும்பங்களில் கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
கணவன் மனைவியை மதிக்காமல் இருப்பதற்கும் மனைவி கணவனை மதிக்காமல் இருப்பதற்கும் வினைப்பயன் தான் காரணம். இந்த பிரச்சினை விலக நவகிரக காயத்ரியை அதிதெய்வ காயத்ரியை சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
சராசரி மனிதர்கள் வாழ்வியல் துக்கங்களை துன்பங்களை எதிர் கொள்ள முடியாமல் அரட்டுவார்கள். வேதனைப்படுவார்கள். புலம்புவார்கள். கண்ணீர் சிந்துவார்கள். ஆனால் அதை ஓரளவு ஞான வழியில் செல்கின்ற மனிதர்கள் ஓரளவு கர்மாவை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடிய மனிதர்கள் அனைவருமே தனக்கு நேருகின்ற துன்பங்கள் அனைத்தும் இறைவன் காரண காரியமாக தருகிறார். வினைப் பயனால் வருகிறது. இது சோதனையான காலம் என்று எண்ணி அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். ஒரு வினையை ஒத்திப் போடுவதோ தள்ளிப் போடுவதோ பெரிதல்ல. அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் பல்கிப் பல்கிப் பெருகி மீண்டும் அது மடுவளவு இருந்தது மலையளவு உயர்ந்து ஒரு மனிதனை வாட்டாமல் போகாது. எனவே விதியை எதிர்கொள்கிற பக்கும் ஒரு மனிதனுக்கு வேண்டும். அது அத்தனை எளிதில் வராது என்றாலும் ஒரு மனிதன் மெல்ல மெல்ல மந்திர உருவேற்றத்தாலும் தியானத்தாலும் ஏற்படும் அனுபவ நிகழ்வை கொண்டும் பிற அனுபவத்திலிருந்தும் மெல்ல மெல்ல கற்றுக் கொண்டு மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுபோல் பக்குவம் இல்லாத நிலையில் ஒரு மனிதன் அவன் எத்தனை தலங்கள் சென்றாலும் என்னென்ன வகையான வழிபாடுகளை செய்தாலும் அவனது மனமானது துன்பத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று எண்ணித்தான் செய்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த வழிபாடுகளும் இந்த தர்மங்களும் அவனது கர்ம வினைகளை குறைத்து துன்பத்திலிருந்து வெளிவரக் கூடிய வாய்ப்பை தருகிறதோ இல்லையோ துன்பத்தை தாங்குகின்ற வல்லமையை தந்து விடுகிறது. எனவே தான் துன்பமற்ற உளைச்சலற்ற தொல்லைகளற்ற வாழ்க்கை வேண்டும் என்று இறையை கேட்பதை விட எது நடந்தாலும் அதனை ஏற்று அமைதியாக வாழக் கூடிய பக்குவத்தை தா இறைவா என்று கேட்கக்கூடிய மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனை வெறும் வாத பிரதிவாதங்களோ உபதேசங்களோ அல்லது நூல் ஓதுதல் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது.
இடைவிடாத பிரார்த்தனையும் இடைவிடாத பயிற்சி இடைவிடாத முயற்சி அதிகாலை துயில் கலைதல். உலகியலில் இருந்து உலக ஆரவாரத்தில் இருந்து எப்போதும் ஒதுங்கி ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை போல் தன்னையும் சேர்த்து பார்த்தல். இது போன்ற முறைகளாலும் உள்ளே நிறுத்தாமல் (மூச்சுக்காற்றை) பின்னால் பக்குவப்பட்ட பிறகு கும்பகத்தை செய்யலாம். உள்ளே நிறுத்தாமல் சுவாசத்தை ஆழ்ந்து இழுத்து பிறகு வெளியே விடுகின்ற முறையை செய்வதாலும் மனதிற்கு ஒரு உறுதி ஏற்படும். இல்லையென்றால் மனம் அதன் இயல்பானது எதையாவது எண்ணி கவலைப்படுவதும் யார் மீதாவது சினப்படுவதும் எதை எண்ணியாவது வேதனைப்படுவதும் அல்லது எவர் மீதாவது பொறாமைப் படுவதுமாகத்தான் இருக்கும். அதுதான் அதன் அடிப்படை இயல்பு. அதனை மெல்ல மெல்ல அதன் மிருக குணத்தில் இருந்து அதனை மேலேற்றி மனிதனாக்கி பிறகு மாமனிதனாக்கி பிறகு புனிதனாக்கி பிறகு மகானாக்கி பிறகு சித்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். இவையெல்லாம் ஒரு பிறவியில் சாத்தியப்படலாம். பல பிறவியிலும் சாத்தியப்படலாம். எனவே இதற்காக மனம் தளராமல் இறைவனை நோக்கி முதலில் கையெடுத்து மனம் ஒன்றி வழிபாடு செய்வது அடிப்படை என்பதால் தான் எடுத்த எடுப்பிலேயே எமை நாடும் மாந்தர்களுக்கு நாங்கள் தியானத்தையோ தவத்தையோ சுவாச பயிற்சியை உபதேசம் செய்யாமல் தீபம் ஏற்று யாகத்தை செய் தலங்கள் செல் தானம் செய் தர்மம் செய் என்று அவன் பாவ கர்மாவை மெல்ல மெல்ல குறைத்து மனதை பக்குவப்படுத்தி பிறகு தான் அவனுக்கு உண்டான அந்த கிரக சூழல் தக்கவாறு ஏற்படும் பொழுது தான் அவனுக்கு ஏற்ற வழிகளை சுட்டிக் காட்டுகிறோம்.