ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 624

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இதுபோல் ஒரு மனிதன் தர்மம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். தர்மம் செய்யாதே என்று ஒரு மகான் வாயிலிருந்து வாக்கு வராது. ஆனால் அதே தருணம் ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டுமே தகுதியை மீறி அதுபோல் சில ஜாதகத்தின் சூட்சும பலன் காரணமாக ருணம் (கடன்) பெற்று தர்மம் செய் என்று கூறுகிறோம். பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப தர்ம காரியங்களை செய்தால் போதும். அதுபோல் மனிதர்கள் முதலில் தான் தன் மனைவி தன் குழந்தைகள் தன் குடும்பம் என்று கவனித்து விட்டு அதன் பிறகு தர்ம காரியத்தில் கவனம் செலுத்தினால் போதும். இன்னொன்று தனத்தை வைத்து செய்வதுதான் தர்மம் என்று எப்பொழுதும் எண்ணிவிடக் கூடாது. அது ஒரு சில ஜாதகர்களுக்கு பொருந்தலாம். மற்றபடி தன வசதி இல்லாத மனிதர்கள் உடல் உழைப்பால் தொண்டுகள் செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளலாம். இதமான வார்த்தைகளை பயன்படுத்தி பிறர் மனம் புண்படாமல் எப்பொழுதுமே பணிவாக பேசுவதும் ஒரு உயர்ந்த தர்மமே புண்ணியமே. எனவே ஒரு மனிதன் சினத்தை அடக்குவது என்பது கூட தவறுதான். சினமே இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் சினத்தை விலக்க தவறினால் எத்தனை ஆலயங்கள் சென்றாலும் எத்தனை தர்ம காரியங்கள் செய்தாலும் முழுமையான இறைவன் அருளை பெற இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 623

கேள்வி: எல்லாவற்றையும் வெளிப்படையாக தாங்கள் ஏன் கூறுவதில்லை?

எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறினால் என்ன நடக்கும்? எதிர் மறையான எண்ணங்களையும் கருத்துக்களையும் நாங்கள் கூறுவதால் என்ன பலன்? அப்படி கூறிக் கூறி அந்த விதியை ஏன் எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்று தான் பரிகாரங்களை கூறிக் கொண்டிருக்கிறோம். நாடி வருகின்ற மனிதர்களுக்கு அத்தனை சாதகமான விதி அம்சம் இல்லை என்பதை புரிந்து கொண்டு இறைவன் அருளால் நாங்கள் கூறுகின்ற பரிகாரங்களை விடாப்படியாக பிடித்துக் கொண்டு சென்றால் எதிர்காலம் அனைவருக்கும் சுபிட்சமாக இருக்கும்.

எம்மை நாடி வருகின்ற மனிதனின் விதியை அனுசரித்து இறைவனின் கட்டளையையும் அனுசரித்துத்தான் நாங்கள் வாக்கை கூறுகிறோம். இதழில் ஓதுகின்ற விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை. நம்பக் கூடியதாக இல்லை என்று கூறுவது கூட ஒரு மனிதனின் தனி சுதந்திரம். இதுபோல் நிலையிலேயே மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் அறம் சத்தியம் பரிபூரண சரணாகதிதத்துவம் இவற்றை கடைபிடித்தால் கடுமையான விதியும் மெல்ல மெல்ல மாறத் துவங்கும். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை எதிர்பார்த்தால் மாற்றம் வராது. ஏமாற்றம் தான் வரும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் இறைவழியில் அறவழியில் சத்திய வழியில் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி நல்லாசி கூறுகிறோம் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 622

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எல்லா கலசங்களில் உள்ளே இருப்பதும் ஒரே கங்கை நீர்தான். அப்படித்தான் மனிதர்கள் தேகம் என்னும் கலசத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பாகுபாடுகளை பார்த்து உன்னை எனக்கு பிடிக்கும். உன்னை எனக்கு பிடிக்காது. நீ நல்லவன். நீ நல்லவன் அல்ல. நீ எனக்கு நல்லதை செய்கிறாய். அதனால் நீ எனக்கு பிரியமானவன். நீ எப்போதும் என்னை தூற்றிக் கொண்டிருக்கிறாய். அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் நமக்குள் அபிப்பிராய பேதங்களை வளர்த்துக் கொண்டு அதை பகையாகவே மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால் மகான்கள் எப்படி பார்ப்பார்கள்? உள்ளே இருக்கும் நீரான ஆத்மாவைதான் பார்ப்பார்கள். எல்லாம் ஒரே நதியில் இருந்து எடுக்கப்பட்ட நீர் என்பது போல எல்லாம் ஒரே பரம்பொருளின் அந்த அம்சத்தில் இருந்து தான் பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்து மாயையில் ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து பிறவி தோறும் அறியாமையில் வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து பாவ சேற்றிலே சிக்கி தன்னை அறியாமல் உழன்று கொண்டே இருக்கும் தேகம் எனும் கலசத்திற்குள் அடைபட்ட ஆத்மா எனும் கங்கை நீர். இவற்றையெல்லாம் விடுவித்து புனிதமான கங்கையோடு சேர்ந்து விட்டால் மீண்டும் பார்வைக்கு எல்லாம் ஒன்று போல் தெரியும். இப்படி சேர்ப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதற்கு எத்தனையோ பிறவிகள் காலங்கள் ஆகும். எனவே இதனை உணர்ந்து எம்மை நாடி வருகின்ற சேய்கள் தமக்குள் பகைமையை வளர்த்துக் கொள்ளாமல் தமக்குள் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் பாவங்களை குறைத்துக் கொள்ள வழிமுறைகளை மட்டும் பின்பற்றி பிறருடன் இதமாக வாக்கை உரைத்து எப்பொழுதும் புண்ணிய காரியங்களை செய்து கொண்டே இருந்தால் இறைவனருள் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் கட்டாயம் கிட்டுமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 621

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறையே பெரியது அன்புக்கு கட்டுப்படும் பொழுது இறையே சிறியது. ஒருவன் தனக்குத்தானே வீசிக் கொள்ளும் வலைதான் கவலை. சினம் எப்படி ஒருவனை அழித்து விடுமோ அதுபோல் கவலையும் ஒருவனை அழித்து விடும்.

பக்குவமற்ற மனிதர்கள் பண்பாடு இல்லாமல் பேசுவதும் தாறுமாறான விமர்சனங்களை செய்வதும் சினம் வருவது போல நடந்து கொள்வதும் இயல்பு. அவன் அப்படி நடந்து கொள்வதே சினத்தை வரவழைக்கத்தான். ஆனால் அவன் தோற்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதன் என்ன செய்ய வேண்டும் சினம் இல்லாமல் நாகரீகமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவன் வெற்றி பெற தானே ஒரு காரணமாகி விடக்கூடிய ஒரு சூழல் வந்துவிடும். எனவே பண்பாடு இல்லாத மனிதர்களோடு நெருங்கி பழகாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் இருக்க நேரிட்டால் அமைதியான முறையிலே கூடுமானவரை மௌனத்தை கடைப்பிடிப்பதும் அதுபோல் வாத பிரதிவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதுமே எம் வழிவரும் சேய்களுக்கு ஏற்றதாகும். இதை மனதில் தெள்ளத் தெளிவாக பதிய வைத்து தொடர்ந்து சினமில்லாமல் பதட்டம் இல்லாமல் கவலை இல்லாமல் வேதனை இல்லாமல் வெட்கமில்லாமல் நாங்கள் கூறுகின்ற அனைத்து நல்ல காரியங்களும் செய்ய எண்ணி செய்து கொண்டு வர வேண்டும். இதுபோல் நலமாய் ஒவ்வொரு ஆத்மாவும் தன்னைத்தானே உணர்ந்து ஆணவத்தை விட்டொழித்து தன்முனைப்பை அணுவளவும் வளர்த்துக் கொள்ளாமல் பவ்யமாக அவையடக்கமாக தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி இறைபக்தியில் ஆழ்ந்து பரிபூரண சரணாகதியிலே என்றென்றும் இருந்து இயன்ற அளவு தர்மத்தை தொடர்ந்து வாழ்ந்து வந்தாலே அவனவன் தலைவிதி கடுமையாக இருந்தாலும் அதை இனிமையாக இறைவன் மாற்றுவார். இதைத்தான் நாங்கள் பல விதமான வார்த்தைகளில் இயம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 620

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒரே பிறவியில் ஞானம் அடைந்தவர்கள் என்று யாருமே கிடையாது. இறை மனது வைத்தால் வேண்டுமானால் அப்படி அமையலாம். பல பிறவிகள் எடுத்து அனுபவங்களை நுகர்ந்து பல்வேறு கர்மாக்களை கழித்த பிறகுதான் ஞானம் என்பது சித்திக்கும். உண்மையான ஞானத்தை அடைந்து விட்டால் ஒரு மனிதன் யாருடனும் பேச மாட்டான். அவன் பேசுவதற்கும் கேட்பதற்கும் எதுவும் இல்லை. பார்ப்பதற்கு உணர்வதற்கும் எதுவும் இல்லை. அவனுக்கு தேவையுமில்லை. அவன் தேவையும் யாருக்கும் இல்லை. இதுதான் ஞானத்தின் உச்ச நிலையாகும். அதை அடைவதற்குத்தான் அனைத்து வழிபாடுகளும் சடங்குகளும் புறச் செயல்களும் கூறப்பட்டுள்ளன. விட்டு விடுதல் சகித்துக் கொள்ளுதல் எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுதல் எத்தனை துன்பத்திலும் இறைவனை இகழாமல் இருத்தல் ஞானத்தை இப்படித்தான் விளக்கம் தரலாமே ஒழிய இதுதான் என்று தனியாக உனக்கு காட்ட முடியாது. ஏனென்றால் நீ ஞானமாகி விட்டால் அப்போது நீயே இருக்க மாட்டாய்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 619

கேள்வி: கிரகங்கள் நன்மை செய்ய என்ன செய்ய வேண்டும்?

இறைவனை வணங்கினாலே ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். தன்னை விட ஒரு பெரிய உயரிய சக்தியின் அருள் நமக்கு கிடைக்கிறது என்ற தைரியம் பிறக்கும். இறைக்கு பிடிக்காததை செய்யக் கூடாது என்ற எண்ணம் வரும். அவன் நல்லவனாக மாறும்பொழுது எல்லா கிரகங்களும் நன்மையைத்தான் செய்யும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 618

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பல்வேறு தருணங்களில் யாங்கள் மெளனமாக இருக்கிறோம் என்றால் அது போன்ற மௌனம் பல்வேறு தெய்வீக சூட்சுமத்தை உடையது. மனிதர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கக் கூடியது. நாங்கள் மௌனமாக இருக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். வாக்கை உறைக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். பல்வேறு தருணங்களில் உரைத்தாலும் எதிரே அமர்ந்திருக்கும் அதுபோல் மனிதன் பல்வேறு பிறவிகள் கடந்துதான் இறைவனை நோக்கி வரப்போகிறான் என்று தெரிந்த பிறகு இறைவன் கட்டளை இல்லாமல் நாங்கள் வாக்கை கூறுவதில்லை. அதனால்தான் இன்னும் பல்வேறு மனிதர்களுக்கு நாடியின் சூட்சுமம் புரிவதில்லை. இதை புரிந்து கொள்வதற்கும் புரிந்து அதன் வழியில் வருவதற்கும் கூட சில புண்ணியங்கள் தேவைப்படுகிறது.

முடிவு நிச்சயமாக உறுதியாக வெற்றி என்றால்தான் இறங்குவேன் என்பது மனிதனின் இயல்பு. முடிவு எதுவாக இருந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எண்ணி செயல்படுவது என் போன்ற மகள்கள் மகான்களின் இயல்பு.

Life’s highest grace is to see, to know, to hear and to commune with a living satguru. A devotee falls humbly at his guru’s feet, prayerful that training, protection and perhaps initiation may come. The satguru’s mind is on Śiva within, who blesses with a garland of coral jasmine flowers.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 617

கேள்வி: வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு என்ன?

இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் காலகாலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு. துன்பங்கள் எல்லாம் ஒரு கணப் பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழ வேண்டும். சதாசர்வ காலமும் இன்பமும் சாந்தியும் வாழ்வில் நிலவ வேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூற மாட்டோம். ஆனால் இந்த இன்பமும் நிம்மதியும் இந்தந்த விகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே. அந்த எதிர்பார்ப்பு தான் குறையாக மாறிவிடுகிறது. எனவே மனிதன் எதிர்பார்க்கின்ற நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாரவிந்தங்களை சரணடைந்து இறையோடு சாயூச்சியமோ சாரூபமோ சாலோகமோ சாமீபமோ ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 616

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

உலகியல் வாழ்விற்காக கடுமையாக ஒருவன் போராடக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக்கூடாது என்பதுதான் என்பது கோட்பாடு. கூடுமானவரை யாரையும் பாதிக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் தத்தம் கடமைகளை நேர்மையான ஆற்றி அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மன நிலையில் நிறுத்தி சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும் சந்தோசமும் அவனைப் பின் தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா. இதை சரியான விகிதாசாரத்தில் புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்பு உணர்ச்சிக்கும் இடம் தராமல் எம் வழியில் வர முயற்சி செய்தால் இறைவன் அருளை கொண்டு யாமே அதுபோல் மனிதனை கரை சேர்ப்போமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 615

கேள்வி: திருப்பதி பெருபாள் கோயிலில் உள்ள மூலவர் சிலை முருகன் சிலை என்பது பற்றி:

திருப்பதியில் உள்ளது பெருமாள் அல்ல முருகப்பெருமான் என்ற கருத்துக்கு ஞானிகள் பார்வை வேறு. மனிதர்களின் பார்வை வேறு. அங்கு பெருமாளே அவதாரம் எடுத்தது உண்மை. காலப்போக்கில் பிற தெய்வங்களும் அங்கு இடம் பெற்றதும் உண்மை. எனவே திருப்பதியில் பெருமாளின் முன்பு நின்று முருகனாக எண்ணி வணங்கினால் பெருமாள் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. பெருமாளாக நினைத்து வணங்கினால் முருகனும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை.