அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:
துதியாமை செய்வாய் ஆயினும் மதியாமை செய்யாய் இறையை உள்ளத்தில் வாழ்ந்தாய் நல் கதியாமை தொடராது. உணர்வாய். சதியாமை செய்யும் மாந்தன் பிறன் நலன் கருதாமை செய்து வாழுங்கால் கர்மாவை சேர்த்து சேர்த்து தர்மத்தை மறக்கிறான். அறத்தை சத்தியத்தை புரியாமை வாழ்ந்து இவற்றை எல்லாம் விளங்காமை கொண்டு கல்லாமையில் நல்லவற்றை கருதாமையால் பொல்லாமை கொண்டு புகழாமை தேடி பிறரை புகழாமை வாழும் மாந்தன் நற்பண்பு அவனிடம் புகலாமையால் மெய் புகழாமை அவனுக்கு வராது. எத்தனை அறியாமை தலை கனத்தால் பிறரை மதியாமை பொல்லாமை பொறாமை என்று உணராமை காரணம். சித்தன் வாக்கு நடவாமை ஆனால் மட்டும் எம்மீது சின ஆமை கொண்டு வெறுப்பாமை தொடர கர்மாவை மறக்கிறான் மாந்தன். உண்மையை சொல்லாமை அறத்தை செய்யாமை சினத்தை விடாமை கடமையை தொடராமை காலத்தை பயன்படுத்தாமை என்று பல ஆமை மனிதன் கொள்ள இவற்றால் உயராமை கொள்கிறான். பொறாமை விட்டு போதாமையிலும் பொல்லாமை கொள்ளாது உள்ள ஆமையை நில் ஆமை என்று கட்டளையிட்டு இவ்வுலகில் எல்லாம் நிலைமை என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலனாமை இல்லை. பதவி நிலையாமை தனம் நிலையாமை அழகு நிலையாமை அறமே நிலைத்த ஆமை என்று உணர்ந்து துயிலாமை கொண்டு துடிக்கின்ற காலத்தை பயிலாமை உள் அடங்கி மனதை சாந்தி ஆக்கி தள்ளாமையிலும் தாளாமை கொள்ளாது தேகத்தை (உடலை) வலுவாமை ஆக்க தேவையற்றதை ஏற்காமை உண்மையாக நல்லனவற்றை ஏற்காமை இருக்காமை என்றும் எதிலும் எவர் மீதும் சினவாமை தேவை. தேவையில்லா பொறாமை ஆற்றாமை அடிக்கடி உள்ளத்தை மாற்றாமை நல்ல செயலை தொடர்ந்து செய்யாமை இருக்காமையாக இருக்க இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை மெய்ம்மை மனத்தோடு உணர்ந்து தேகம் நிலையாமை என்பதை உணர்ந்து ஆத்மா உணராமை வாழாமை தொட்டதற்கு எல்லாம் வருத்தாமை வாழும் வழி தொடர புரியாமை நடக்கின்ற செயல் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாமை பரியாமை. தொடர்ந்து நரியாமை நகர்ந்து தெரியாமை தொலைந்து உன் உள்ளத்தில் எரியாமை அணைந்து பரியாமை வளர்ந்து தெரியாமை எது குறித்தும் வாழாமை வாழும் மெய் கொண்டு வாழ அனைத்தும் நலமாம் ஆசிகள்.
ஆமை என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 180
அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:
போற்றி வணங்காமல் இருந்தீர்கள் என்றாலும் பரவாயில்லை மதிக்காது இருக்க வேண்டாம். இறையை உள்ளத்தில் வைத்து வணங்க வில்லை என்றால் முக்திக்கான வழிகள் தொடர்ந்து வராது. இதனை உணர்வாய். ஒருவருக்கொருவர் சதி வேலைகளை செய்யும் மனிதர்கள் பிறன் நலன் கருதாமல் இருப்பதை செய்து வாழ்ந்து வந்தால் கர்மாவை சேர்த்து சேர்த்து தர்மத்தை மறக்கிறான். அறத்தை சத்தியத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து இவற்றை எல்லாம் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் இதனை சரியான முறையில் கற்றுக் கொள்ளாமல் நல்லவற்றை கருத்தில் வைக்காததால் கோபம் வீண் புகழ்ச்சியை தேடி செல்லாத பிறரை நல்ல முறையில் புகழ்ந்து பேசாமல் வாழும் மனிதனின் நற்பண்பு அவனிடம் புகுந்து இருக்காததால் உண்மையானவற்றை புகழ்ந்து பேசுவது அவனுக்கு வராது. எத்தனை அறிந்து கொள்ளாமல் தலை கனத்தால் பிறரை மதித்து நடக்காமல் கோபமும் பொறாமை என்று உணர்வுகளுக்கு அடிமையாவதை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதே காரணம். சித்தன் வாக்கு நடக்காமல் போய் விடும் ஆனால் மட்டும் எம்மீது கோபம் என்கிற உணர்வை கொண்டு வெறுப்பு என்கிற உணர்வை தொடர கர்மாவை மறக்கிறான் மனிதன். உண்மையை சொல்லாமல் இருந்து அறத்தை செய்யாமல் இருந்து சினத்தை விட்டு விடாமல் இருந்து கடமையை தொடர்ந்து செய்யாமல் இருந்து காலத்தை சரியாக பயன் படுத்தாமல் இருந்து என்று பல விதமான உணர்வுகளால் கெட்ட குணங்களை மனிதன் கொள்ள இவற்றால் உயர்வை அடையாமல் இருந்து விடுகின்றான். பொறாமையை விட்டு விட்டு பெருந்தன்மையை வளர்க்காமல் போனாலும் கோபம் கொள்ளாது உள்ளத்தில் அன்பு உணர்வோடு நிற்க வேண்டும்.
மனமே என்று கட்டளையிட்டு இவ்வுலகில் எல்லாம் நிலைத்து நிற்காது என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலன்கள் எதுவும் இல்லை. பதவி நிலைத்து நிற்காத காரணத்தினாலும் செல்வம் நிலைத்து நிற்காத காரணத்தினாலும் அழகு நிலைத்து நிற்காத காரணத்தினாலும் அறமே எப்போதும் நிலைத்து நிற்கின்ற தர்மம் என்று உணர்ந்து வெறும் தூக்கத்தில் / மாயையில் மயங்கிக் கொண்டு துடிக்கின்ற காலத்தை சரியாகப் பயன்படுத்தி வேண்டியவற்றை கற்றுக் கொண்டு உள்ளத்திற்குள் உணர்ச்சிகளை அடக்கி மனதை அமைதியாக ஆக்கி வயது முதிர்ந்து தள்ளாடுகின்ற நிலையிலும் இனி எதுவும் செய்ய முடியாது என்று சோர்ந்து போய் உட்காருவதை செய்யாமல் உடலை மனதாலும் தியானத்தாலும் வலிமை பெற்றதாக ஆக்க தேவையற்றதை ஏற்றுக் கொள்ளாமல் உண்மையாக நல்லனவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை தவிர்த்து என்றும் எதிலும் எவர் மீதும் கோபம் கொள்ளாமல் இருப்பது தேவை. தேவையில்லா பொறாமை அங்கலாய்ப்பும் வெறுப்பும் அடிக்கடி உள்ளத்தை மாற்றி விடாத படிக்கு நல்ல செயலை தொடர்ந்து செய்யாமல் இருக்க வேண்டாம். இவ்வாறு இருக்க இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை உண்மையான மனத்தோடு உணர்ந்து தேகம் நிலைத்து நிற்காது என்பதை உணர்ந்து ஆத்மா உணர்ந்து கொள்ளாமல் வெறும் உலக வாழ்க்கையை வாழ்வதை தவிர்த்து தொட்டதற்கு எல்லாம் வருத்தம் கொள்ளாமல் வாழும் வழி தொடர நமக்கு புரியாமல் நடக்கின்ற இறை செயல்கள் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாத விஷயங்கள் அனைத்தும் இனிமேல் நன்றாகப் புரிந்து நம்மோடு தொடர்ந்து வருவதை காணலாம். தொடர்ந்து கெட்ட குணங்களோடு பிறருக்கு தீமைகளை செய்வதை விட்டுவிட்டு எதையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்தால் உன் உள்ளத்தில் எரியாமல் அணைந்து போய் இருக்கின்ற இறைவனின் ஜோதியை நமக்கு தெரியாது. எது குறித்தும் வாழ்ந்து வீணடிக்காமல் வாழும் உண்மையை தெரிந்து கொண்டு வாழ அனைத்தும் நலமாம் ஆசிகள்.