கேள்வி: அஷ்டாவக்ரரைப் பற்றி:
இறைவனின் கருணையால் உடல் அதாவது தேகம் (உடல்) எட்டு விதமாகத் திரிந்து பார்ப்பதற்கு அவலட்சண தோற்றத்தோடு தன்னை இருக்குமாறு இறையிடம் வரம் கேட்டு வந்த மிகப்பெரிய ரிஷி அந்த அஷ்டாவக்ர ரிஷியாகும். பலரும் அவரைப் பார்த்து பரிகாசம்(நிந்தனை) செய்த பொழுது மெளனமாக அதனை அவர் எதிர்கொண்டார். அந்த மகான் மட்டுமல்ல ஒவ்வொரு ஞானியும் தான் உணர்ந்ததை தான் அடைந்ததை தான் எந்த நிலையை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறோமோ அந்த நிலைக்கு ஒவ்வொரு ஆத்மாவும் வர வேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு உபதேசம் செய்கிறார்கள். ஆனால் சிக்கல் எங்கே இருக்கிறது? மாயையும் அறியாமையும் விடாத வரை ஒரே கணத்தில் உயர்ந்த நிலை எந்தவொரு ஆத்மாவிற்கும் சித்திக்காது. இன்னவன் கூறியது போல் எதும் தேவையில்லை. அந்த அஷ்டாவக்ரரின் முறைகளைக் கடைபிடித்தால் மேலேறி விடலாம் என்பது மெய்யிலும் மெய்யே. ஆனால் அதைக் கண்டு உணர்ந்து கேட்டு புரிந்து கொள்வதற்காக ஒரு ஆத்மாவிற்கு கோடிக்கணக்கான பிறவிகள் தாண்டிவிடுமே? எனவே அப்படியொரு நுழைவாயில் இருப்பவனுக்குதான் இந்த உபதேசம் உண்மையாக மெய்யாக புரியுமப்பா. இல்லையென்றால் வெறும் செவியாடல்களாக எத்தனையோ ஞான நூல்களை மனிதன் வாசிக்கிறானல்லவா? என்ன வாசித்தாலும் அவையெல்லாம் வெறும் ஏட்டோடு செவியோடு என்று வைத்து விட்டு நடைமுறை என்று வரும் பொழுது மிக மிக மிக மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே? அதை விடாத வரை எந்தவொரு ஆத்மாவும் மேலேறுவது கடினம். எனவே உன்னதமான உயர்ந்த அஷ்டாவக்ர மகரிஷியை அன்றாடம் நினைத்து குறிப்பாக குருவாரம் விரதமிருந்து அன்னவரை நினைத்து மானசீகமாக வழிபாடு செய்தால் கனவிலோ நேரில் வேறு வடிவிலோ வந்து மேலும் பல உபதேசங்களை அவர் செய்ய இறைவனருளால் காத்திருக்கிறார்.
கேள்வி: கனவிலே லிங்கம் தோன்றினால் என்ன பலன்?
நல்ல சகுனம் தானப்பா. தொடர்ந்து இறை காட்சிகளைக் கனவில் பார்ப்பதும் எதிர்பாராத இடத்திலே இறைவன் ஊர்வலத்தைப் பார்ப்பதும் சுப சகுனம். தோஷங்கள் குறைவதற்கு நல்லதொரு வாய்ப்பை இறைவனே தந்திருக்கிறார் என்று பொருள்.