கேள்வி: ஆப்பூர் மலையில் சுதர்சன ஹோமம் நடத்த ஆசி வேண்டும். அந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் பற்றி:
இறைவனின் கருணையைக் கொண்டு முன்னரே முன்னரே இச்சுவடி வந்த பொழுதிலேயே யாம் அருளாணையிட சில சேய்கள் மூன்று தினங்கள் அங்கு அமர்ந்து சகல விதமான யாகங்களையும் செய்து பூர்த்தி கண்டார்கள். பிறகு மீண்டும் ஒருவன் வந்தும் யாகம் செய்திருக்கிறான். எனவே தக்க காலத்தில் மீண்டும் அங்கு இறைவனருளால் யாகம் நடைபெறும். இறைவன் கருணையாலே அந்த பரம்பொருள் மஹாவிஷ்ணுவாக வெங்கடேசப் பெருமாளாக அருளுகிற அம்மலையிலே இன்னும் 60 க்கும் குறையாத சித்த பெருமக்கள் அரூபமாக தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுமதி நிறைமதி காலங்களிலே வழிபாடு செய்ய இதனை தக்க அன்பர்கள் உணரலாம் ஆசிகள்.
கேள்வி: நாராயணா என்று கூற வேண்டுமா? அல்லது ஓம் நமோ நாராயணா என்று கூற வேண்டுமா?
ஓம் நமோ நாராயணாய நாராயணாய அல்லது மகாவிஷ்ணுவே சரணம் என்று எப்படி கூறுவது? என்பதை விட எந்த மனோபாவத்தில் ஒரு மனிதன் கூறுகிறான் என்பதைதான் இறைவன் பார்க்கிறார். எனவே வார்த்தைகளில் பிழையில்லாமல் இருக்க வேண்டும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல மனதிலும் வேறு சிந்தனைகள் இல்லாமல் உச்சரித்தால் அதுதான் மந்திரம். அப்படி உச்சரிக்கின்ற ஒரு நிலை வரும் வரை ஒரு மனிதன் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். எனவே இதில் எத்தனை அட்சரம்? என்பதை விட அவன் திறம் எத்தனை? என்பதையே இறை பார்க்கும்.