கேள்வி: கிருஷ்ணகிரி மத்தூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம் தடைகள் நீங்கி நிறைவேற தங்கள் அருளாசி:
இக்கோவில் பெயர் அருள்மிகு சோமேஸ்வரர் ஆலயம். மத்தூர் ஊராட்சி கிருஷ்ணகிரியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.
கட்டாயம் விநாயகப் பெருமான் வழிபாட்டை உள்ளன்போடு செய்து உள்ளன்போடு அது தொடர்புடைய மாந்தர்கள் (மனிதர்கள்) அந்த ஸ்தல யாத்திரையை மேற்கொண்டால் நலம் நடக்கும்.
கேள்வியின் தொடர்ச்சி கேள்வி: இத்தலத்தில் (மத்தூர் சிவன் கோவில்) அன்னையின் ஆலயம் எழுப்ப வேண்டுகிறோம். இது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. இத்தலத்தின் சிறப்பு பற்றி கூற வேண்டுகிறேன். இத்தலத்தில் ஒரு சித்தரின் ஜீவ சமாதி உள்ளது என்பது உண்மையா?
இறைவனின் கருணையாலே இந்த ஸ்தலத்திற்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது. ஸ்தல புராணம் குறித்து நாங்களே ஒரு முறை என்ன நிகழ்ந்திருக்கிறது? அல்லது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? மனிதர்கள் இது வரை செவியாறலாகக் கேட்டவை எவை? கேட்கத் தவறியவை எவை? என்றெல்லாம் பின்னர் கூறுவதாகக் கூறியிருக்கிறோம். அந்த நிலையிலே ஜீவ சமாதி என்பதை விட பல சித்தர்கள் வந்து வழிபட்டார்கள். இன்றும் வழிபடுகிறார்கள் என்று கூறுவது பொருத்தமாகும். அதே தருணம் இந்த நிலையிலே நல்விதமாய் அன்னைக்கு ஆலயமும் திருப்பணியும் ஆவதற்கு நாங்கள் அருளாசி கூறுகின்ற அதே தருணம் மனிதர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அன்னையாக தெய்வத்தை வணங்கத் தெரிகிறது. அன்னையாக நதியைப் போற்றத் தெரிகிறது. ஆனால் நிஜமான வடிவிலே வாழ்கின்ற பெண்களையெல்லாம் இடர்படுத்தினால் கொடுமைப் படுத்தினால் எப்படியப்பா இறைவன் அருள்வார்? அன்னையை வணங்க வேண்டும் அன்னைக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே அதே பெண்களை நீ இப்படி இருப்பதால் இப்பொழுது இங்கு வரக்கூடாது. நீ பெண் என்பதால் இந்த பூஜையை செய்யக்கூடாது என்றெல்லாம் யார் வகுத்துத் தந்தார்கள்? என்று தெரியவில்லை. எனவே முதலில் அவரவர்கள் இல்லத்தில் உள்ள பெண்களை ஒவ்வொரு ஆணும் மதிக்க வேண்டும். அதைப் போல ஆண்களையும் பெண்கள் மதிக்க வேண்டும். இதை செய்யாமல் ஆலயத்திற்கு சென்று அங்கு மட்டும்தான் அன்னை இருப்பதாக எண்ணினால் கட்டாயம் அந்த அன்னையின் அருள் யாருக்குமே கிட்டாது. பொதுவாக ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம். அல்லது அதற்கு மாறான குணங்கள் கொண்டவனாக இருக்கலாம். பெண்களிலும் விரும்பத்தகாத குணங்கள் கொண்டவர்களும் இருக்கலாம். அது பற்றி நாங்கள் கூறவில்லை. ஆனாலும் கூட மனித வடிவம் எடுத்துவிட யாரையும் பழிக்காமல் இடர்படுத்தாமல் ஒருவன் வாழ்ந்தாலே அதுவே இறைவனை பூஜை செய்வதற்கு சமமாகும்.