கேள்வி: எண்ணியது எண்ணியாங்கு பெறின் – இந்தக் குறளில் திண்ணியம் என்பதின் பொருள் என்ன?
மனிதன் எதில் திண்ணியமாக (மன உறுதி- வலிமை) இருக்கக் கூடாதோ அதில் திண்ணியமாக இருக்கிறானப்பா. அளவற்ற உறுதி. எத்தனை இடர் வந்தாலும் எத்தனை சோதனை வந்தாலும் எத்தனை கலக்கம் வந்தாலும் அந்த நோக்கத்திலிருந்து வழுவாமல் ஒரு மனிதன் இருக்கிறானே? அந்த உறுதி. அதைதான் இதன் பொருளாகக் கொள்ள வேண்டும். இது எதில் இருக்க வேண்டும்? நல்ல எண்ணங்களுக்கும் நல்ல செயல்களுக்கும் நேர்மைக்கும் தர்மத்திற்கும் இவ்வாறு உறுதியோடு போராடக் கூடிய மன நிலை வேண்டும். ஆனால் இவற்றுக்கெல்லாம் உறுதி கொள்ளாத மனிதன் வேறு வேறு தேவையற்ற விஷயங்களில் உறுதி கொள்கிறான். பகையிலே திண்ணியம் கொள்கிறான். பொறாமையிலே திண்ணியம் கொள்கிறான். பிறரை வெறுப்பதில் திண்ணியம் கொள்கிறான். தேவையற்ற விவாதத்தில் திண்ணியம் கொள்கிறான். இப்படி மன உளைச்சலில் கவலையில் திண்ணியம் கொள்வதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல எண்ணங்களிலே அந்த உறுதியை வளர்த்துக் கொண்டால் என்றென்றும் மனித வாழ்வு சுகமாகும். எனவே அந்த எண்ணிய எண்ணம் அது நல் எண்ணமாக உயர்ந்த நோக்கமாக இருந்து அந்த எண்ணம் உறுதி உறுதி உறுதி உறுதியோ உறுதி என்று இருந்தால் கர்மா இடம் தரவில்லை என்றாலும் கட்டாயம் நடக்கும் என்பதே இதன் அடிப்படை பொருளாகும்.