ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 394

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இயம்புகிறோம் பொதுவாய் இதுபோல் சுவடி பூஜை பின் வாக்கை ஓதுகின்ற எண்ணம் எமக்கில்லை என்றாலும் சேய்களின் ஆர்வத்திற்காக இதுபோல் இறைவனின் கட்டளைக்காக யாங்கள் சில வாக்குகளை சில துளிகள் மட்டும் ஓத இருக்கிறோம். இருந்தாலும் கூட எம்மை குறித்து ஏதும் கூறவில்லையே? எமது நாமத்தை அழைத்து ஏதும் கூறவில்லையே? எனது மனக்குறையை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அதனை குறிப்பிட்டு எதனையும் கூறவில்லையே? என்றெல்லாம் எமது சேய்கள் சிந்தனையில் வாட்டத்தை வழியவிடாமல் இதுபோல் யாங்கள் கூறுவதை சரியாக புரிந்து கொண்டால் அது இங்குள்ள அனைவருக்குமே பொருந்தும் என்பதை இத்தருணம் இறைவனருளால் யாங்கள் கூறுகிறோம்.

நல்விதமாய் இதுபோல் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கணமும் இறைவன் அருளால் நலமாய் இருக்க வேண்டும் என எண்ணும் சேய்கள் மனதிலே கள்ளமோ கபடமோ சூதோ சூழ்ச்சியோ இல்லாமல் வாழ முயற்சி எடுத்தல் அவசியமாகும். சூதும் வாதும் வஞ்சனை செய்யும் என்பது போல இதுபோல் எதிர்மறை எண்ணங்களும் தீய எண்ணங்களும் உள்ளத்தில் வைத்துக்கொண்டு எத்தனைதான் இறைவழியிலே வந்தாலும் எத்தனைதான் இறைவனின் திருநாமத்தை ஸ்லோகங்களை கூறினாலும் கட்டாயம் இறைவன் அருள் பரிபூரணமாக கிட்டுவது கடினம் கடினம் கடினம். எனவே இறைவன் அருளை பெற வேண்டும் இறைவனருளால் கூடுமானவரை துன்பமில்லாமல் வாழ வேண்டும் அல்லது துன்பம் வந்தாலும் அதனை தாங்குகின்ற திறன் வேண்டும் என எண்ணுகின்ற சேய்கள் இக்கணம் முதல் நல்விதமாய் சூதையும் சூழ்ச்சியையும் விட்டுவிட நன்மையாம்.

இதுபோல் மறந்தும் பிறரின் மனதை புண்படுத்துகின்ற செயலை விட்டுவிடுதல் மேலும் நலமாம். இதுபோல் யாங்கள் ஏன் இவ்வாறு கூறுகிறோம்? என்றால் இறைவன் வழியில் வந்துகொண்டுதான் இருக்கிறோம். சித்தர்களின் வாக்குகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தும் பெரிதாக வாழ்விலே முன்னேற்றம் இல்லை ஏற்றமில்லை துன்பங்கள் குறையவில்லை என எண்ணியெண்ணி வருந்துகின்ற சேய்களுக்கு தங்கள் குறைகள் பெரிதும் தெரிவதில்லை. நான் சரியாகத்தான் இருக்கிறேன், சிந்திக்கிறேன் பேசுகிறேன். என்னிடம் குறையில்லை என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணுகிறான். ஆனால் அப்படியல்ல. தனக்குள்ளே தானே தீவிரமாய் சிந்தித்துப் பார்த்து தன் குறையை தானாக முன்வந்து பிறர் முன் ஒப்புவித்து அதனை நீக்கிக் கொள்ளுதலே இறையருளை பெறுவதற்கு உண்டான அடிப்படை குணமாகும்.

இவற்றை எமது சேய்கள் தொடர்ந்து கடைபிடித்தால் எமது வாக்கின் தன்மையும் வாக்கின் கூர்மையும் மெல்ல மெல்ல புரியும். இல்லையென்றால் வெறும் போலித்தனமான ஆன்மீக பயணமாகத்தான் வாழ்வு அமையுமே தவிர மெய்யான மெய்யான மெய்யிலும் மெய்யான ஆன்மீகம் புரிபடாமல் சென்றுவிடும். எனவே தெள்ளத் தெளிவான திடமான உறுதியான சிந்தனை உள்ளார்ந்த நேர்மையான சிந்தனை சத்திய நெறி தொண்டு பரிபூரண சரணாகதி பக்தி எத்தனைமுறை எம்முன் அமர்ந்தாலும் அமர்கின்ற சேய்களுக்கு இவையெல்லாம் வரும் வரையில் பரிபூரண இறைவனருள் கிட்டுவது கடினம் என்பதை மீண்டும் யாங்கள் இறைவன் அருளைக் கொண்டு இயம்பிக்கொண்டே இருக்கிறோம். இதுபோல் நல்விதமாய் மனக்கலக்கம் தேகநலம் சார்ந்து தேக நலத்திலே மிகவும் வேதனையோடு இருக்கின்ற சேய்களுக்கு கூறுவது அருகே உள்ள அரங்கத் தடத்திலே தன்வந்திரியின் அருளை பெற தன்வந்திரியின் பரிபூரண ஆசியை பெற அதோடு சிகிச்சையும் சேர இதுபோல் மனதை வாட்டும் நோயும் இங்குள்ள சேய்களுக்கு மெல்ல மெல்ல மாறும். எனவே அச்சமின்றி நல்விதமாய் எக்காலமும் சென்று தன்வந்திரியை வணங்க நன்று. அதிலும் அந்தந்த சேய்களின் ஜென்ம நட்சத்திரம் அறிந்து அன்று சென்று வணங்க பரிபூரணம் பரிபூரணம் தேக நலம் ஆகுமப்பா.

இதோடு யாங்கள் கூறவருவது பொதுவாய் தேக நலம் நன்றாய் இருக்க செய்கின்ற முயற்சிகள் ஏற்கின்ற உணவுகள் செய்கின்ற உடற்பயிற்சிகளோடு நல்விதமாய் மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை அன்றாடம் உருவேற்றுதலும் இதுபோல் திருநீற்றுப் பதிகத்தை உருவேற்றுதலும் திருநீலகண்ட பதிகத்தை உருவேற்றுதலும் நல்விதமாய் பழனியெம்பெருமான் திருவடியை வணங்கி போகனையும் வணங்கி திருநீற்று பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதும் நன்றாம். இதுபோல் தேக நலம் தாண்டி அடுத்ததாக உள்ள பிரச்சினை எதுவாக இருப்பினும் பொருளாதாரம் சார்ந்தோ சேய்களின் வாழ்வு நிலை குறித்தோ மண வாழ்க்கை குறித்தோ ஏதாக இருந்தாலும் நல்விதமாய் அரங்கனையே கூறுகிறோம். நல்விதமாய் சுக்கிர வாரம் சென்று அரங்கனை சேவிக்க நல்விதமாய் இதுபோல் கூறிய உபய பிரச்சினையும் நல்விதமாய் நல்விதமாய் இதுபோல் தருணத்திலே வாக்கினை கேட்கின்ற சேய்களுக்கு பலிதமாகும் என்பதனால் எதிர்வரும் சுக்கிரவாரம் தொட்டு தொடர்ந்து சென்று நல்விதமாய் அரங்கனை சேவிக்க தடைபட்ட திருமண முயற்சி நல்விதமாய் ஆவதோடு நல்விதமாய் அரங்கனை சுக்கிர வாரம் சென்று வணங்க இயலவில்லையே? என்று அன்றுதான் செல்லவேண்டும்ஙஎன்று வைராக்யம் கொண்டு செல்வது நன்றுதான் என்றாலும் அன்று செல்லவில்லை என்றால் வேறொரு தினத்தில் தாராளமாய் சென்று சேவிக்கலாம். குற்றமேதுமில்லை என்று சேய்கள் உணர நன்றாகும்.

இதுபோல் நல்விதமாய் இறை வழியிலே வருகின்றேன் இறை தொண்டினை செய்கின்றேன் இறைவனை தேடித்தேடி அலைகின்றேன் அப்படியிருந்தும் மண வாழ்க்கை திருப்தியில்லை. மண வாழ்விலே பல்வேறு பிரச்சினைகள் குழப்பங்கள் வழக்கு மன்றம் செல்ல வேண்டியிருக்கிறதே? என்று வருந்தும் எம் வழி வருகின்ற சேய்கள் நல்விதமாய் கூறுகிறோம். இதுபோல் இத்தருணத்தில் குருவின் ஹோரையிலே கேட்கின்ற வாக்கு தன்னிலே பிரச்சினைக்கும் அரங்கனை நாடி சென்று வணங்கத்தான் நன்று. இதுபோல் ரோகிணி மீனிலே அரங்கனும் வாக்கை கேட்டு அருள் புரிகிறேன் என்று புன்னகை பூத்துக்கொண்டு இருக்கிறார் என்பதனால் அரங்கனை மீண்டும் மீண்டும் இழுக்கின்றேன் இத்தருணம் இதுபோல் சேய்களின் பிரச்சினைக்கு. நல்விதமாய் சேய்களின் எதிர்கால திட்டத்திற்கு வித்தைக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்று அஞ்சுகின்ற நல்விதமான ஈன்றோருக்கும் சேய்களுக்கும் கூட கூறுகிறோம் நல்விதமாய் புந்தி வாரம் சென்று அரங்கனை சேவிக்க நன்றுதான்.

இன்று பிரச்சினைகள் பல பலவிதமான சேய்களின் மனக்குறைகள் பல தீர்வு ஒன்று என்று கூறியிருக்கிறோம். ஆகையால் ஏனைய ஆலயங்கள் செல்ல வேண்டாம் ஆனைக்கா தடம் இங்கிருக்க அரங்கனை கூறுகிறாரே சித்தர்? என்று எண்ணிடவும் வேண்டாம். இதுபோல் ஒரு குறிப்புக்காக கூறுகிறோம். சேய்களின் கல்வியும் வெற்றி முயற்சிக்கும் கூட நல்விதமாய் அரங்கனின் திருவடியை சென்று சேவிக்க நன்றாம். இதுபோல் நல்விதமாய் இருக்கின்ற இல்லம் திருப்தியில்லை இல்லம் தாண்டி செல்ல வேண்டும் அதற்கு யாது செய்வது? என்றால் அதற்கும் அரங்கன் திருவடியை சேவிக்க நன்றுதான். நல்விதமாய் இறைவன் அருளால் திருமணம் நெருங்கி வருகிறது. நல்விதமாய் முடிய வேண்டும் என்று எண்ணுகின்ற சேய்களுக்கும் கூறுகிறோம். நல்விதமாய் அரங்கனின் திருவடியை சேவிக்க நன்றுதானே. இதுபோல் நல்விதமாய் திருமணம் ஆகிவிட்டது. பந்தமும் நன்றாக தொடர்கிறது. வாரிசுதான் வரவில்லை? என்று ஏங்குகின்ற தம்பதியருக்கும் கூறுகிறோம். நல்விதமாய் அனலோன் வாரம் சென்று நல்விதமாய் அரங்கனை சேவிக்க நன்றுதானே.

இதுபோல் நல்விதமாய் விதவிதமான பிரச்சினைகள் நெருக்கடியை தந்துகொண்டே இருக்கிறது. ஒரே குடும்பத்தில் விதவிதமான மனிதர்கள். யாரோடும் யாரும் ஒத்துப்போவதில்லை. மனக்குழப்பம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. யாது செய்வது? என்று தெரியவில்லை. ஒத்தும் போக முடியவில்லை விலகியும் செல்ல முடியவில்லை என்று ஏங்குகின்ற சேய்களுக்கும் கூறுகிறோம். நன்றாக முடவன் வாரம் அதுபோல் அரங்கனை சென்று சேவிக்க நன்றுதானே. எனவே தான் படைத்து காக்கின்ற உயிர்களுக்கு கர்மவினையால் பிரச்சினைகள் வந்தாலும் தானே அதற்கு தீர்வாக நின்று அரங்கன் நல்லாசி தர காத்திருக்க ஆனைக்கா அன்னையையும் ஐயனையும் வணங்கி இதுபோல் கர்மமும் பாவமும் அதிகமாக இதுபோல் சமுதாயத்தில் சேர்ந்ததின் எதிரொலிதான் அதுபோல் ஜம்புகேசுவரரின் அருகே நீரின்றி போனதப்பா. எனவேதான் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள யாம் அடிக்கடி இயம்பிக் கொண்டே இருக்கிறோம். எனவே குறைந்தபட்சம் நல்விதமாய் பலரும் இந்த உலகிலே வாழ பலர் வாழ்வதற்காவது சிலராவது தொண்டு செய்வது அவசியம். எனவேதான் யாரெல்லாம் எம்மை நம்புகிறார்களோ யாரெல்லாம் இவ்வோலையில் பேசுவது சித்தர்தான் என்று மனதார எண்ணி இதுபோல் இவ்வோலையை பின்பற்றி வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் கூறுவது சராசரி உலக வாழ்வை பார்த்து மயங்க வேண்டாம். ஏமாற வேண்டாம். மாயை பற்றிக்கொண்டுதான் இருக்கும். அதனை விட்டுவிட்டு யாங்கள் என்ன கூறுகிறோமோ அதனை தொடர்ந்து மனதில் பிடித்துக்கொண்டு அதை எதிர்த்து எந்த மூடன் விமர்சனம் செய்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அந்த மூடன் மீதும் சினம் கொண்டிடாமல் அமைதியாக எமது வழியை பின்பற்ற நன்றாம்.

ஏனென்றால் ஒருசிலராவது புண்ணியத்தை சேர்த்தால்தான் இந்த பரந்த உலகம் மகான்களின் பிரார்த்தனையால் மட்டுமல்ல மகான்கள் வழியில் வருகின்ற சேய்களின் புண்ணியத்தாலும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தொடர்ந்து பரந்துபட்ட பாரத மண்ணிலே அடுத்தடுத்து நவகிரகங்களின் இயக்கத்தினால் தொடர்ந்து மனதிற்கு விரும்பத்தகாத சம்பவங்கள்தான் நடக்க இருக்கின்றன என்பதால் தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை தொடர்ந்து சுயநலமற்ற தொண்டு சரணாகதி பக்தியையும் தர்மத்தையும் சத்தியத்தையும் அதிகரித்து அதிகரித்து எமது சேய்கள் பரந்த இந்த உலகம் இந்த பிரபஞ்சம் நன்றாய் வாழவேண்டும் என பிரார்த்தனை செய்ய தொண்டு செய்ய தர்மம் செய்ய சத்திய வழியில் நிற்க இறைவன் அருளால் நல்லாசிகளை கூறுகிறோம். இதுபோல் நல்விதமாய் தொடர்ந்து மனக்கவலை இருந்தாலும் மன சோர்வு இருந்தாலும் எத்தனைதான் துன்பங்கள் வந்தாலும் யாங்கள் கூறுகின்ற நல்வழிமுறையை விட்டுவிடாது வருகின்ற சேய்களுக்குதான் இறைவன் அருள் தொடரும் என்பதை கூறுகிறோம். நல்விதமாய் இதுபோல் ஓலை இருக்கின்ற இல்லத்தின் தலைவனுக்கும் அதுபோல் தாரத்திற்கும் சேயவளுக்கும் சேயவனுக்கும் நல்விதமான நல்லாசியை கூறி தொடர்ந்து இறைவன் அருளை பெறுகின்ற அவர்களது முயற்சி வெற்றி பெற அத்தனை சேய்களின் வாழ்வும் நன்றாக முன்னேற இறைவன் அருளாலே நல்விதமாய் மீண்டும் நல்லாசிகளை கூறுகிறோம் ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.