கேள்வி: இறை மறுப்பாளர்களும் நீண்ட ஆயுளும் புகழும் பெறுவது எப்படி?
இறை உண்டு என்று கூறிக் கொண்டு தவறான செயலை செய்வதை விட இறைவன் இல்லை என்று கூறிவிட்டு நல்ல தொண்டினை செய்வதை இறைவனே விரும்புகிறார். அடுத்ததாக இறை மறுப்பாளர்கள் அல்லது வேறு தவறான காரியங்களை செய்கின்ற மனிதர்கள் ஒருபுறம் இருக்கட்டும். எத்தனையோ அசுரர்கள் தவமாய் தவமிருந்து இறைவனை நேரில் தரிசனம் செய்து பல வரங்களை வாங்குகிறார்கள். அந்த அசுரன் பிறக்கும் பொழுதே தெரியும் அவன் என்ன செய்யப் போகிறான்? என்று. அவன் எதற்காக தவம் செய்கிறான்? என்றும் தெரியும். வரம் கேட்கும் பொழுதும் இறைவனுக்கும் தெரியும் அவன் எதற்காக வரம் கேட்கிறான்? என்ன செய்வான்? என்று. இதெல்லாம் தெரிந்தும் இறைவன் எதற்காக அவனை அனுமதிக்கிறார்? ஒன்று இந்த உலகத்தில் பல்வேறு விதமான அனுபவங்கள் பல்வேறு ஆத்மாக்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம் கர்மங்கள் குறைய வேண்டும். விதவிதமான மனிதர்கள் விதவிதமான குணங்கள் கொண்ட உயிரினங்கள் இவைகளை எல்லாம் படைப்பது ஒருவகையில் கர்மக் காரணங்கள் இன்னொரு வகையில் இறைவனின் திருவிளையாடல்.
இன்னொன்று எல்லாம் இந்த உலகத்தில் ஒரே வகையாக இருந்தால் எதையும் பயன்படுத்த முடியாது. பரிபூரண ஞானநிலை பெற்று இறையோடு ஒன்றிவிட்டால் ஒன்றும் தேவையில்லை. இந்த உலகிலே விதவிதமான விஷயங்கள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் செய்கின்ற ஒருவன் ஒரு பொருளை எடுத்து விடுகிறான். பொருளை இழக்க வேண்டும் அதனால் துன்பப்பட வேண்டும் என்பது பொருளை இழந்தவன் கர்மா. சிறையில் அடைபட்டு துன்பம் அடைய வேண்டும் என்பது இவன் கர்மா. இந்த குற்றவாளியை துரத்தி சென்று பிடிக்க வேண்டும் என்பது தீது அடக்கும் துறை சார்ந்தவனின் கர்மா. இவர்களை பிடித்து நீதிமன்றத்திலே நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். நீதிமன்றம் இயங்க வேண்டும் என்பது அவர்களின் கர்மா. எனவே மின்சாரத்தை கடத்தக் கூடிய பொருள் எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதே மின்சாரத்தைக் கடத்தாத பொருளும் தேவை. மின்சாரத்தை கடத்தாத பொருள் இருந்தால்தான் மின்சாரத்தை கடத்துகின்ற பொருளை நாம் பயன்படுத்த முடியும். எனவே இறைவன் இருக்கிறார் என்று கூறுகின்ற மனிதர்கள் இருக்கின்ற அதே உலகில் இறைவன் இல்லை எனும் மனிதன் இருந்தால்தான் இறைவனின் பெருமையை உணர முடியும். இவையனைத்தும் இறைவனின் லீலையே.