கேள்வி: எண்களில் 9 இன் சிறப்பை கூறுங்கள் ஐயனே.
9 என்ற இலக்கம் மட்டும்தான் சிறப்பா? எட்டு சிறப்பு இல்லையா? 11 சிறப்பு இல்லையா? எண்கள் என்றால் என்ன இறைவனின் கருணையைக் கொண்டு எண்கள் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தால் மனிதன் குறிப்புக்காக வைத்துக் கொள்வது என்று கொள்ளலாம். இதை மனித ரீதியாகவே பார்ப்போம். ஒன்பதை இப்படித்தான் கீர (எழுத) வேண்டும் என்ற வழக்கு இருக்கிறது. இதே ஒன்பதை ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமாக கீறும் பொழுது அது மற்றவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது. மனிதன் தனக்காக வைத்துக் கொண்ட அடையாளங்களில் எப்பொழுதுமே மாட்டிக் கொள்ளக் கூடாது. இன்னொரு வகையில் நவம் என்பது புதியது என்ற பொருளைக் குறிக்கும். எல்லா வரி வடிவங்களும் அது எண்களாக இருந்தாலும் அட்சரங்களாக இருந்தாலும் சிறந்ததே. இந்த வரிவடிவங்களை ஒரு மனிதன் ஒலிப்புக் குறிப்புகளாக வாய் வழியே கூறும் பொழுது பிறருக்கு உணர்த்த கீரல் (எழுத்து) வடிவங்களை கையாண்டான். அவைகள் தான் அட்சரங்கள் ஆகின்றன. இந்த அட்சரங்களுக்கு நாளாவட்டத்தில் ஒழுங்கு வந்தது. பிறகு இலக்கணம் வகுக்கப்பட்டது. பிறகு அது இலக்கியமாக வளர்ந்தது. இவைகளை எல்லாம் தாண்டி நிலை ஒன்று இருக்கிறது அது எந்த விதமான வடிவங்களும் இல்லாத வரிகளும் இல்லாத எண்களும் இல்லாத எந்த விதமான வாத பிரதிவாதங்களும் இல்லாத ஒரு நிலை. அங்கு சுத்த பரவளி ஓங்கார நாதம் ஒன்றுதான். அந்த நாதமும் ஒரு நிலையில் மறைந்து போய்விடும். இவை தத்துவார்த்தமாக புரியவில்லை என்றாலும் கூட உன்னுடைய வினாவை வைத்து பார்க்கும் பொழுது ஒன்பதும் சிறப்பு என்று வைத்துக்கொள்.