கேள்வி: துர்மரண வீடு பற்றி?
உரைத்தால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களப்பா. ஏனென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு குடும்பத்தில் நடக்கிறது என்றால் கடுமையான பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது என்று பொருள். முதலிலே அவர்கள் செலவை நோக்கம் பார்க்காது பல்வேறு மந்திரங்களை கற்ற நல்ல மனிதர்களை ஒன்று திரட்டி பிழை இல்லாமல் பரிபூரணமாக ராமேஸ்வரம் எனப்படும் தெய்வ சமுத்திரக் கோட்டத்திலே பூரணமாய் தில யாகம் செய்ய வேண்டும். கடுமையான பிரம்மஹத்தி தோஷத்திற்கு திருவிடைமருதூரில் முடிந்தால் ஒரு மண்டலம் தங்கி இறை தொண்டு செய்வதும் தீபங்கள் ஏற்றுவதும் அபிஷேகம் செய்வதும் சிறப்பு.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் ஆனால் தர்ம வழி நடப்பவர்கள் என்ன செய்யலாம் என்றால் தக்க ஏழைகளுக்கு பசு மாடுகளை தானம் செய்வதும் பசு காப்பகங்களுக்கு அதிகம் அதிகம் உதவி செய்வதும் தினசரி ஒரு முறையாவது பசு மாட்டை தரிசனம் செய்வதும் முடிந்தால் தொண்டு செய்வதும் பசுவை நல்ல முறையிலே குளிப்பாட்டி மஞ்சள் மங்கல பொடிகளை தேய்த்து தூய தூப தீபங்களை காட்டி நிறைய உணவுகளை தருவதும். ஆலயக் குளத்திலோ அல்லது ஏனைய மற்ற குளங்களிலே உள்ள மீன்களுக்கு உணவு தருவதும் கூடுமானவரை ஏழை எளியவர்களுக்கு அன்னம் மட்டுமல்லாது தேவைப்படும் மற்ற உதவிகளை செய்வதும்தான் இது போன்ற தோஷங்களை எல்லாம் குறைப்பதற்கு ஒரே வழியாகும். கூறப்போனால் இது போன்ற குடும்பத்தார்கள் வாழ்க்கையில் பரிகாரம் செய்வது என்பதை விட பரிகாரம் செய்வதையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டால்தான் தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் இருக்கும்.
ஜீவநாடி கேட்கலாமா
இந்த வலைதள பக்கத்தில் பதிவிடப்படும் ஜீவநாடி அகத்தியர் வாக்கு அனைத்தும் தஞ்சாவூர் கணேசன் என்பவர் சில வருட்டங்களுக்கு முன்பு படித்தது ஆகும்.