அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
சராசரி மனிதர்கள் வாழ்வியல் துக்கங்களை துன்பங்களை எதிர் கொள்ள முடியாமல் அரட்டுவார்கள். வேதனைப்படுவார்கள். புலம்புவார்கள். கண்ணீர் சிந்துவார்கள். ஆனால் அதை ஓரளவு ஞான வழியில் செல்கின்ற மனிதர்கள் ஓரளவு கர்மாவை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடிய மனிதர்கள் அனைவருமே தனக்கு நேருகின்ற துன்பங்கள் அனைத்தும் இறைவன் காரண காரியமாக தருகிறார். வினைப் பயனால் வருகிறது. இது சோதனையான காலம் என்று எண்ணி அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். ஒரு வினையை ஒத்திப் போடுவதோ தள்ளிப் போடுவதோ பெரிதல்ல. அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் பல்கிப் பல்கிப் பெருகி மீண்டும் அது மடுவளவு இருந்தது மலையளவு உயர்ந்து ஒரு மனிதனை வாட்டாமல் போகாது. எனவே விதியை எதிர்கொள்கிற பக்கும் ஒரு மனிதனுக்கு வேண்டும். அது அத்தனை எளிதில் வராது என்றாலும் ஒரு மனிதன் மெல்ல மெல்ல மந்திர உருவேற்றத்தாலும் தியானத்தாலும் ஏற்படும் அனுபவ நிகழ்வை கொண்டும் பிற அனுபவத்திலிருந்தும் மெல்ல மெல்ல கற்றுக் கொண்டு மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுபோல் பக்குவம் இல்லாத நிலையில் ஒரு மனிதன் அவன் எத்தனை தலங்கள் சென்றாலும் என்னென்ன வகையான வழிபாடுகளை செய்தாலும் அவனது மனமானது துன்பத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று எண்ணித்தான் செய்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த வழிபாடுகளும் இந்த தர்மங்களும் அவனது கர்ம வினைகளை குறைத்து துன்பத்திலிருந்து வெளிவரக் கூடிய வாய்ப்பை தருகிறதோ இல்லையோ துன்பத்தை தாங்குகின்ற வல்லமையை தந்து விடுகிறது. எனவே தான் துன்பமற்ற உளைச்சலற்ற தொல்லைகளற்ற வாழ்க்கை வேண்டும் என்று இறையை கேட்பதை விட எது நடந்தாலும் அதனை ஏற்று அமைதியாக வாழக் கூடிய பக்குவத்தை தா இறைவா என்று கேட்கக்கூடிய மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனை வெறும் வாத பிரதிவாதங்களோ உபதேசங்களோ அல்லது நூல் ஓதுதல் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது.
இடைவிடாத பிரார்த்தனையும் இடைவிடாத பயிற்சி இடைவிடாத முயற்சி அதிகாலை துயில் கலைதல். உலகியலில் இருந்து உலக ஆரவாரத்தில் இருந்து எப்போதும் ஒதுங்கி ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை போல் தன்னையும் சேர்த்து பார்த்தல். இது போன்ற முறைகளாலும் உள்ளே நிறுத்தாமல் (மூச்சுக்காற்றை) பின்னால் பக்குவப்பட்ட பிறகு கும்பகத்தை செய்யலாம். உள்ளே நிறுத்தாமல் சுவாசத்தை ஆழ்ந்து இழுத்து பிறகு வெளியே விடுகின்ற முறையை செய்வதாலும் மனதிற்கு ஒரு உறுதி ஏற்படும். இல்லையென்றால் மனம் அதன் இயல்பானது எதையாவது எண்ணி கவலைப்படுவதும் யார் மீதாவது சினப்படுவதும் எதை எண்ணியாவது வேதனைப்படுவதும் அல்லது எவர் மீதாவது பொறாமைப் படுவதுமாகத்தான் இருக்கும். அதுதான் அதன் அடிப்படை இயல்பு. அதனை மெல்ல மெல்ல அதன் மிருக குணத்தில் இருந்து அதனை மேலேற்றி மனிதனாக்கி பிறகு மாமனிதனாக்கி பிறகு புனிதனாக்கி பிறகு மகானாக்கி பிறகு சித்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். இவையெல்லாம் ஒரு பிறவியில் சாத்தியப்படலாம். பல பிறவியிலும் சாத்தியப்படலாம். எனவே இதற்காக மனம் தளராமல் இறைவனை நோக்கி முதலில் கையெடுத்து மனம் ஒன்றி வழிபாடு செய்வது அடிப்படை என்பதால் தான் எடுத்த எடுப்பிலேயே எமை நாடும் மாந்தர்களுக்கு நாங்கள் தியானத்தையோ தவத்தையோ சுவாச பயிற்சியை உபதேசம் செய்யாமல் தீபம் ஏற்று யாகத்தை செய் தலங்கள் செல் தானம் செய் தர்மம் செய் என்று அவன் பாவ கர்மாவை மெல்ல மெல்ல குறைத்து மனதை பக்குவப்படுத்தி பிறகு தான் அவனுக்கு உண்டான அந்த கிரக சூழல் தக்கவாறு ஏற்படும் பொழுது தான் அவனுக்கு ஏற்ற வழிகளை சுட்டிக் காட்டுகிறோம்.