கேள்வி: அனைத்து பிரச்சினைகளுக்கும் கர்மா தான் காரணமாகிறது. இது மாயையால் மனிதனைப் பற்றுகிறது. அவதாரங்களாகவே இருந்தாலும் அவர்களையும் மாயை பற்றுகிறது என்று முன்னர் கூறியிருந்தீர்கள். மாயை தான் உயிர்களை பற்றுகிறது. அப்படி செய்வது யார்? இறைவன் தானே? அதற்கு பொறுப்பு இறைவன் தானே? பிறகு ஏன் மக்களைத் தாக்க வேண்டும்?
இறைவன் அருளாலே நல்லதொரு வினாவை இன்னவன் எழுப்பியிருக்கிறான். எனவே இனிமேல் அனைத்து பாவங்களும் இறைவனுக்கு சேர்ந்துவிடும் என்பதால் சேய்கள் அனைவரும் இனி பாவங்களை துணிந்து செய்யலாம். இருந்தாலும் சிந்திக்க வேண்டிய வினாவைத்தான் இவன் எழுப்பி இருக்கிறான். நன்றாக கவனிக்க வேண்டும். மாயை மனிதர்களை பற்றுகிறது. ஏன்? ஒரு மனிதரிடம் நிலம் இருக்கிறது அதிலே முறையாக விவசாயம் செய்கிறான். பயிர் விளைகிறது சிலருக்கு பயிரை விட களை அதிகம் விளைகிறது. அந்த நிலம் இருப்பதால்தானே நான் விவசாயம் செய்தேன். விவசாயம் செய்தால் தானே களை வந்தது என்று அவன் அலுத்துக் கொள்ளலாமா?
நன்றாக கவனிக்க வேண்டும். மாயை சென்று எல்லோரையும் பற்றும் வண்ணம் அந்த உயிர்களின் கர்ம வினை இருக்கிறது. உயிர்களை இறைவன் ஏன் படைத்தான்? படைத்ததால்தானே உயிர்கள் எல்லாம் பாவங்கள் செய்தது? என்ற அடுத்ததொரு வினாவை ஏற்கனவே இவன் கேட்டிருக்கிறான். அதாவது ஏகன் ஏகனாகவே இருந்து விட்டால் பிறகு பிரச்சனையே இல்லையே. ஏகன் எதற்கு அநேகமாக மாறினான்? என்று இவன் கேட்கிறான். ஏகன் அநேகமாக மாறுவதற்கு முன்னால் அந்த ஏகனை பார்த்து யாராவது ஒருவர் நீ இப்படியே இரு பல் கூறுகளாக பிரியாதே என்று கூறியிருக்கலாம். ஆனால் அங்கு தான் அப்படி கூறுவதற்கு யாரும் இல்லையே. அப்படி யாராவது கூற வேண்டும் என்பதற்காகவாவது ஏகன் அநேகன் ஆகி இருக்கலாம் அல்லவா? எனவே என்னை எதற்காக படைத்தாய்? படைத்ததால்தான் பாவங்கள் செய்தேன் என்று கூறுவதை விட நான் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வண்ணம் என் மன நிலையை அமைத்துக் கொடு என்று பிரார்த்தனை செய்வது சிறப்பப்பா.