கேள்வி: ஒரு ஆராய்ச்சியாளர் சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக பிரச்சனை போன்றவற்றை நாமே எளிய வழியில் குணப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை தேவையே இல்லை என்று கூறுகிறார். இது குறித்து விளக்கம் தர வேண்டும்.
இறைவன் அருளால் முன்பே நாங்கள் கூறியிருக்கிறோம். மனிதன் தன் தேகத்தை பார்க்கின்ற விதம் வேறு. நாங்கள் பார்க்கின்ற விதம் வேறு. ஒரு கருவி போல் தன் தேகத்தைப் பார்த்து அதில் பழுது ஏற்பட்டுவிட்டால் இதற்கு இதுதான் காரணம் என்று கண்டுபிடிப்பது மனித விஞ்ஞானம். அதை அடுத்தடுத்து வருகின்ற மனிதன் மாற்றிக் கொள்ளக்கூடும். ஆனால் அவன் கூறுகின்ற காரணம் எதனால் வருகிறது? என்று பார்த்தால் மீண்டும் அங்கே கர்மவினையைதான் குறிக்கிறது. இன்னும் புரியாத வியாதிகள் எதிர்காலத்தில் வரப்போகிறது. இவையனைத்தும் மனித உடலை பங்கப்படுத்தி அவனை துன்பத்தில் ஆழ்த்துவதற்காக மட்டும் என்று எண்ணிவிடக்கூடாது. எதற்காக இந்த துன்பம் நமக்கு வந்திருக்கிறது? என்று அவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது ஏன் நம் உடலை வாட்டுகிறது? இதிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய உபாயம் என்ன? இதற்கு என்ன வகையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? என்று பார்ப்பது ஒரு வகை இன்னொன்று நாம் எப்படி வாழ்கிறோம்? என்னென்ன தவறுகள் செய்கிறோம்? எந்தத் தவறும் செய்யாமல் வாழ முயற்சி செய்தால் இந்தப் பிணி நம்மை விட்டு போகுமா? என்று பார்க்க வேண்டும். எனவே ஒரு மனிதனுக்கு துன்ப அனுபவம் எந்த வகையில் வந்தாலும் சிந்தித்துப் பார்க்க இறைவன் அவனுக்கு கட்டளையிடுகிறார் என்பதுதான் பொருள். இதுபோன்ற வியாதிகள் இருப்பது உண்மை. வியாதிகளே இல்லை என்ற கூற்றை நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு முறையான சிகிச்சையும் இறை வழிபாடும் ஏழை நோயாளிக்கு தக்க மருத்துவ உதவியும் பிற உதவியும் செய்வதால் இது போன்ற வியாதிகள் தரும் கர்ம பாவங்களிலிருந்து தப்பிக்கலாம்.