ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 153
கேள்வி: திருவண்ணாமலையில் அருணகிரிக்கு முருகன் காட்சி தந்தது பற்றி:
அந்த வாதம் எந்த நோக்கிலே துவங்கப்பட்டதோ அப்போது அருணகிரிநாதர் எதை ஆரம்பித்தாரோ அந்த பாடல் ஒரு நிலை பூர்த்தி அடைந்தவுடன் முருகன் காட்சி அளித்தார். அவற்றில் சில பாடல்கள் மனிதர்களின் கண்களுக்கு இன்னும் சிக்கவில்லை. அப்போது வல்லாள மகாராஜாவின் கண் பார்வை பறிபோனது உண்மை. பொதுவாக அதிரூப இறை காட்சிகளை மகான்களின் காட்சிகளை முழுமையாக அல்ல ஓரளவு பார்த்தாலே விழியிலே பார்வை குறையத்தான் செய்யும். அந்த அளவிலே அந்த நிகழ்வு உண்மைதான். ஆனால் அடுத்த ஒரு வினா எழும். அதி உன்னதமான இறைவனை பார்த்தால் கண்கள் பறி போய்விடும் என்றால் எப்படி இறைவனை பார்ப்பது? என்று. அதற்கு ஏற்ப மனித உடல் தேகம் பக்குவமடைய வேண்டும். இருந்தாலும் வல்லாள மகாராஜாவிற்கு மீண்டும் பார்வை வந்ததும் உண்மை.
கேள்வி: சப்த மாதர்கள் பற்றி:
பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களை பெண்களாக பிறந்து விட்டோமே? என்று கவலைப்படும் பெண்கள் சப்த மாதர்களை வழிபட்டால் குறைபாடு நீங்கும். பெண்களுக்கே உண்டான உடல் பிரச்சனைகள் தீர்வதற்கு இவர்கள் வழிபாடு உதவும். ஆண்கள் மனோ தைரியம் இல்லாமலிருப்பது ஒன்றை நினைத்து சதா சர்வ காலமும் கவலைப்படுவது தைரியம் இல்லாமலிருப்பது போன்ற துன்பங்களுக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்திலே உயர்வான அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் நலம்.