அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
எமது (அகத்திய மாமுனிவர்) வாக்கிலே ஒருவனை உயர்த்திக் கூறுவதால் மட்டும் ஒருவன் உயர் ஆத்மா ஆகி விட முடியாது. மனிதனிடம் பல நல்ல உயர்வான குணங்களும் உயர்வில்லாத குணங்களும் இருக்கிறது. எம் முன்னே அமரும் மனிதனுக்கு உயர்வில்லாத குணங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் அவனுக்கு மனச்சோர்வு வந்து விடும். அவனை உற்சாகப்படுத்தி வேகத்தோடு பல நல்ல செயல்களை செய்யவே நாங்கள் அவ்வாறு கூறுகிறோம். மற்ற படி எல்லா மனிதர்களும் சராசரி குணங்கள் கொண்ட மனிதர்கள்தாம் இதில் உயர்வு தாழ்வு இல்லை. நாங்கள் கூறுகின்ற வழி முறைகளை எல்லாம் ஒரு மனிதன் எப்போது நூற்றுக்கு நூறு கடை பிடிக்கிறானோ அப்போதுதான் அவன் எம் சிஷ்யன் என்ற அன்புக்கு பாத்திரம் ஆவான். அதுவரை அவன் மனம் தளராத படிக்கு நாங்கள் சில வார்த்தைகளை கூறுகிறோமே தவிர எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும் நல்லன அல்லாத குணமும் இருக்கிறது.
பூர்வீக தோஷத்தை குறைக்கவும் தன் முனைப்பில்லாமல் இறைவனை நோக்கி செல்லவும் எமை நாடும் மனிதர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். யாங்கள் என்ன தான் உரைத்தாலும் அதை இந்த செவியிலே (காதிலே) வாங்கி அந்த செவியிலே விடுவதும் தேவையானால் எமது வாக்கை எடுத்துக் கொள்வதும் இல்லை என்றால் அதை தள்ளி விடுவதுமாகத்தான் எப்போதுமே மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே ஒரு மனிதனின் சேவையை மற்ற மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில சமயம் நாங்கள் கோடிட்டுக் காட்டுகிறோமே தவிர அதற்காக அவன் மிகப் பெரிய மகான் என்றோ ஞானி என்றோ நாங்கள் யாரையும் கூறவில்லை. ஏன்? எமது வாக்கை ஓதுவதால் மட்டும் இந்த சுவடியை ஓதும் மூடனுக்கு மிகப் பெரிய தகுதியோ பராக்ரமோ ஞான நிலையோ வந்து விடவில்லை என்பதை தெரிந்து கொள். வெறும் வார்த்தைகளால் மட்டும் ஒருவனை உயர்த்துவது மட்டுமல்ல எமது நோக்கம். அப்படியாவது அவன் உற்சாகம் கொண்டு செயல் படட்டுமே நற்காரியம் செய்யட்டுமே என்பதுதான் எமது நோக்கம் ஆகும்.