கேள்வி: ஆப்பூர் மலையின் (காஞ்சிபுரம் மாவட்டம்) சிறப்பு பற்றி
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் அந்த ஆப்பூர் கிரி (மலை) என்று யாம் பலரையும் அங்கு செல்ல அருளாணை கூறியிருக்கிறோம். அங்கே எம்பெருமான் பெருமாள் வடிவிலே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். முன்பு ஒருவன் ஓங்கி உரத்த குரலில் புலம்பினானே (பெண்களுக்கு) திருமணம் ஆகவில்லை என்று அந்த ஆப்பூர் கிரிக்கு (மலைக்கு) சென்று நல்ல முறையிலே குறிப்பாக சுக்ர வாரம் எத்தனை முறை இயலுமோ அத்தனை முறை அங்கு சென்று மானசீகமாக பிராத்தனை செய்து அங்குள்ள வானரங்களுக்கு (குரங்குகளுக்கு) நிறைய உணவுகளைத் தந்து வேண்டிக்கொண்டு வந்தாலே திருமண தோஷம் நீங்கும். அடுத்தபடியாக நாங்கள் சுக்ர வாரம் சென்றோம். ஆலயம் திருக்காப்பிட்டு இருக்கிறது. என்ன செய்வது? என்று எம்மை நோக்கி வினவினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய இயலும்? பலரும் வந்து தட்சிணை நிறைய தந்தால்தான் ஆலயத்தைத் திறக்க இயலும் என்பது மனிதர்களின் நிலை. ஆனால் ஆலயம் திறந்திருந்தாலும் சாத்தியிருந்தாலும் பக்தன் ஒருவன் பரிபூரண சரணாகதியோடு சென்றால் இறைவன் அருள் உண்டு என்பது எமது வாக்கு. எனவே வெள்ளிக்கிழமை செல்ல இயலவில்லை ஐயா எனக்கு அனலிவாரம் (விடுமுறைநாள்) தான் விடுப்பு இருக்கிறது என்றால் தாராளமாக அன்றும் செல்லலாம். உலகியல் ரீதியான எத்தனையோ சிறப்புகளில் திருமண தோஷம் நீங்குவதற்கும் திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும் குழந்தை பாக்கியம் தருவதற்கும் லோகாயத்தில் (உலக வாழ்வில்) சுக்ரனின் அனுக்ரஹம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. அதையும் தாண்டி இன்றும் 64 சித்தர்கள் அரூபமாக அங்கு தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுமதி தினமான பெளர்ணமி அன்று அங்கு சென்று மானசீகமாக வேண்டினால் வாய்ப்புள்ள பக்தர்களுக்கு ஆத்மாக்களுக்கு ஔி வடிவில் சித்தர்கள் தரிசனம் தருவார்கள். எனவே அது ஒரு சித்த பூமி ஜீவ பூமி அது ஒரு மூலிகை வனம். அங்குள்ள மூலிகைகளில் பட்டு வருகின்ற சுவாசக்காற்று மனிதர்களின் பிணிகளை போக்க வல்லது.
ஆப்பூர் மலை பற்றிய மேலும் அறிந்து கொள்ள கீழ்உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்