ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 146
கேள்வி: ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் பற்றி:
அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. தன்னாலும் முடியும் என்றால் தன்னம்பிக்கை. தன்னால் மட்டும்தான் முடியும் என்றால் அது ஆணவம். ஒரு தொழில் ரீதியாக புகழ் ரீதியாக ஒரு பதவி ரீதியாக மட்டும் ஆணவம் வருகிறது என்பதல்ல. நான் எப்படி செய்வேன்? என்னைப் போய் இப்படி கூறிவிட்டானே? நான் எப்பேற்பட்ட மனிதன்? என்னை ஒருவன் இப்படி பேசிவிட்டானே? நான் எப்படியெல்லாம் வாழ்ந்தேன்? என்னை எப்படியெல்லாம் வளர்த்தார்கள்? இப்படி பேசிவிட்டானே? என்று ஒருவன் எண்ணினால் அதுவும் ஆணவத்தின் ஒரு பகுதிதான். நாம் இந்த அண்ட சராசர பிரபஞ்சத்திலே வெறும் தூசியிலே தூசி. இந்தக் காற்றிலே கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ பூச்சிகள் உயிரினங்கள் அலைந்து கொண்டு இருக்கின்றன. அது போல இந்த அண்ட சராசரங்களை எல்லாம் பார்க்கும் போது எத்தனையோ கிரகங்கள் உயிரினங்கள். அனைத்திற்கும் அதனதன் வழியில் அதனதன் போக்கில் துன்பங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே துன்பம் ஒருவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனதை தெளிவாக வைத்துக் கொண்டால் எல்லாம் மாயை என்பது புரியவரும்.
கேள்வி: நவகிரகங்கள் பற்றி?
கையூட்டு வாங்காத நேர்மையான காவல் அதிகாரிகள்.
கேள்வி: என்றாவது நவகிரங்கள் தங்களால் இவ்வளவு ஆத்மாக்கள் துன்பப்படுகிறார்களே என்று எண்ணி வருத்தப்பட்டதுண்டா?
எதற்காக வருந்த வேண்டும்? ஒரு குழந்தை பிற்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தடுப்பு ஊசி போட வேண்டும் ஊசி போடுவது என்பது குழந்தைக்கு வலியை உண்டாக்கும் என்பதால் அந்த குழந்தைக்கு அந்த தடுப்பு பூசி போட வேண்டுமா வேண்டாமா?