கேள்வி: யாகத்தை பற்றிய பொதுவாக்கு:
நல்விதமாய் பூஜைகள் நடத்திடத்தான் கால காலம் மூத்தோனை (விநாயகரை) வணங்கி செயல்பட நன்மை உண்டு. அனைத்திலும் உயர்தரம் பரிசுத்தம் உடலும் சுத்தம் உள்ளமும் சுத்தம் ஆடையும் சுத்தம் இடமும் சுத்தம் பொருளும் சுத்தம் உணவும் சுத்தம் என்று அனைத்திலும் சுத்தமாக இருப்பது இறை அருளை எளிதாக கூட்டுவிக்கும். தன் குறைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுவிட்டு எவனொருவன் இதிலே கலந்து கொள்கிறானோ அவனுக்கு இறைவனின் பரிபூரண அருள் உண்டு. இதிலே கலந்து கொண்டபிறகு கர்மாக்கள் குறைவதால் எதிர்காலத்திலே இறையின் தரிசனம் கிடைப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஆத்மார்த்தமாக கலந்து கொள்வது நல்ல பலனைத் தரும். இந்த பூஜையை முடித்த அடுத்த பட்சத்திற்குள் (ஒரு பட்சம் என்பது பதினைந்து நாட்கள் ஏழைகளுக்கு அன்ன சேவையும் மருத்துவ உதவிகளையும் செய்வது இறைவனின் அருளை மேலும் கூட்டி வைக்கும். எந்த அளவிற்கு யாகத்திற்கு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு இத்தகைய அறப்பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது இறை அருளை விரைவாக கூட்டி வைக்கும்.
கேள்வி: யாகத்தில் எப்படி பங்கு கொள்ள வேண்டும்?
உடல் சுத்தம் உள்ள சுத்தம் வேண்டும். விரல் நகங்களை அகற்றிட வேண்டும் (முடியாத பட்சத்தில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்). வெள்ளிக்கிழமைகளில் நகம் அகற்றாமல் இருப்பது நல்லது. அந்தி நேரம் (மாலை நேரம்) இரவு நேரங்களிலும் மற்றும் வீட்டின் நடுக்கூடத்திலும் நகம் வெட்டக்கூடாது). ஒவ்வொரு முறையும் வாய்ப்பு இருந்தால் எண்ணெய் ஸ்நானமே செய்ய வேண்டும். வாய்ப்பு இருப்போர் புதிய ஆடையையும் வாய்ப்பு இல்லாதோர் துவைத்த ஆடையையும் அணிவது நல்ல பலனைத் தரும். ஆண்கள் மேலாடை இல்லாமலோ அல்லது மேலே ஒரு வஸ்திரத்தை போர்த்திக் கொள்வது நல்ல பலனைத் தரும். பெண்கள் தூய்மையாக குளிப்பதோடு முன் தினமே மருதாணியை கை கால்களில் இட்டு கொள்வது நல்ல பலனை தரும்.