அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
அப்பனே வாழ்த்துக்கள் ஆசிகள். ஆயினும் மனிதர்களைப் பற்றி யாங்கள் (சித்தர்கள்) அறிவோம். ஒன்று கூடி அறம் (நீதி வழுவாத நல்ல ஒழுக்கப் பழக்க செயல்கள்) செய்யலாம் என்று ஆரம்பிக்கப்பட்ட எத்தனையோ அமைப்புகள் சீர் கெட்டுத்தான் உள்ளன என்பதால் இது நல்ல நோக்கம் உந்தனுக்கு என்றாலும் நலமில்லாதுதான் போகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு மனிதனும் மெய்யாக ஆன்ம சேவை அற சேவை செய்ய விரும்புங்கால் பாதகம் இல்லை. நவில்வோம் அதிலும் சுய விளம்பரத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என விரும்புவான். நன்றில்லா பல குழப்பங்களை ஏற்படுத்துவான் என்பதால் தனி மனித ஈடுபாடு என்பது வேறு. பல மனிதர்களை ஒன்று திரட்டி ஒரு கருத்தை இயக்கச் செய்வது என்பது வேறு. இறையாலும் அது இயலாதப்பா. பல ஏளனங்கள் ஏச்சுக்கள் நீ ஏற்க வேண்டி வரும். தனத்தில் பல தடைகள் சிக்கல்கள் வரும் என்பதால் செய்வது எமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் சில கழித்து நன்றாக நடக்கும் என்றாலும் ஆரம்ப நிலையில் நீ பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். எம் அருளாசி என்பது வேறு. காலம் அது உன் ஆத்மாவை கடைத்தேற்றும். உலகியலில் ஏற்படும் சில பல சிக்கல்களுக்கு எமது அருளாசி என்றால் அது நடைமுறை சாத்தியம் ஆகாது. நல்ல எண்ணம் நல்ல செயல் செய்வது எமக்கு திருப்தியே என்றாலும் மேல் கூறியதை கவனத்தில் வைத்து செயல்படு.
கேள்வி: திருப்பதி சென்று வர எனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்:
ஒன்றை புரிந்து கொள். சகலவித ஆதரவோடு மெய்யான மெய்ஞானத்தை நோக்கி வர முடியாதப்பா. எல்லோருக்கும் உலகியல் வாழ்க்கை வேண்டும். சித்தனை பார்த்தாயே நாடி பார்த்தாயே என்ன கிடைத்தது? இந்த ஆலயத்திற்கு சென்றால் பட்டம் பதவி உடல் ஆரோக்கியம் கிட்டுமா? என்றுதான் பார்க்கிறார்கள். எனவே சகல உறவுகளின் ஆதரவோடு எமது வழியில் யாரும் வர முடியாது. எதிர்ப்புகளில் தான் வாழ வேண்டும். எதை செய்தாலும் சுவையாக சுகமாக எமது வழியில் (சித்த மார்க்க வழியில்) செய்யலாம் என்று மட்டும் எண்ண வேண்டாம். பல போராட்டங்களும் உண்டு. அருமையான அற்புதமான சாலை அல்ல எமது சாலை. கற்களும் முற்களும் ஆணித் துண்டங்களும் நிறைந்தது எமது சாலை. பாதத்தில் ரணம் ஏற்படும். குருதி வழியும். வலிக்கும். அதோடுதான் வர வேண்டும். ஏனென்றால் எளிய மார்க்கம் (எளிய வழி) என்றால் அனைத்து மூர்க்கர்களும் இது வழியாக வருவார்கள்.