அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:
யாவும் கனவு யாவும் கனவு இறையே நினைவு இறையே நினைவு யாக்கை வாழ்வு குறைகளுக்கு நாளும் வருந்தி வாழ்வு வாழும் முறையும் வேண்டாமப்பா. உயர்ந்த வாழ்வு வாழ வேண்டி முனிவர் போல் மோட்ச லோகம் அடைய வேண்டி வருத்தம் கொள். இறை நினைத்து நாளும் அழு. வழங்கு வழங்கு வழங்கு உள்ளதெல்லாம் வழங்கு. (தானம் செய்) வறியவர் எளியவர் இயன்றோர் இயலாதோர் என வாதிடாமல் எவர் என்ன கூறிட்டாலும் சிந்தை கலங்காமல் வழங்கு வழங்கு வழங்கு. உள்ளதை வழங்கு வழங்க வழங்க இறை உனக்கு வழங்கும். வார்க்க வார்க்க இறை உனக்கு வார்க்கும் வழங்குவதால் வருங்காலம் குறை காணுமோ என அஞ்சிடாதே. வழங்குவதால் வருங்காலம் வெறுமை கண்டிடுமோ என அஞ்சிடாதே வழங்குவதால் நீ ஏதும் இழப்பதில்லை. பெறுகிறாய் பெறுகிறாய் என்ற நோக்கமும் மாறி எக்குறிக்கோளும் இ்ன்றி பக்குவமடைந்து யாவும் இறை சித்தம் என்றுணர்ந்து பரிபக்குவ மனோ நிலையில் இறையே யாவுமாய் அதில் நீயுமாய் சூட்சுமம் உணர்ந்து வழங்கு. பாழ் மாந்தர் (கெட்ட மனிதர்கள்) மாய மாந்தர் (மாயையில் இருக்கும் மனிதர்கள்) உரை (சொல்லும் ஆலோசனைகளை) விட்டுத்தள்ளு. பக்குவமாய் தினம் நாளும் ராமநாமம் ஜபித்து வா. பதறாதே கதறாதே குறையேதும் அண்டிடாது அய்யனையும் அடியேனையும் நாம தடத்திலும் லிங்க தடத்திலும் தரிசிப்பாய். ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம். லகரம் (லட்சம்) ககரம்(கோடி) உருவேற்று. ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் யாவும் நல்கும். ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.