கேள்வி: நீதிக் கதைகளை (பக்தி கதைகளை) எங்களுக்கு சொல்ல வேண்டும்:
இறைவன் அருளால் நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும். சதாசர்வகாலமும் நடப்பதெல்லாம் இறைவன் செயல் என்று எண்ணினால் இறைவன் அனைத்துக்கும் பொறுப்பாகி விடுகிறார். எனவே இதை எத்தனை வாய் மொழியாக கூறினாலும் மனிதனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
ஆங்கோர் தேசத்தில் (நாட்டில்) பலகாலம் முன்பு நடந்தது அப்பா. இதை எல்லாம் வெறும் கதை என்றும் மூட நம்பிக்கை என்றும் பலர் எண்ணுகிறார்கள். ஆங்கே மிகப்பெரிய ஏழை ஒருவன். சிறு தொழில் செய்து வாழ்ந்து வந்தான். சதாசர்வகாலம் பரம்பொருளை சிவ வடிவிலே உணர்ந்து நமசிவாயம் நமசிவாயம் என்று கூறிக் கொண்டு இருந்தான். யாராவது எதாவது வந்து கேட்டால் நமசிவாயம் அருள் இருந்தால் தருகிறேன் என்பான். அப்பா இந்த வேலையை செய்து தருகிறாயா? என்றால் நமசிவாயம் செய்யச் சொன்னால் செய்கிறேன் என்பான். அப்பா எனக்கு இது வேண்டும். தருகிறாயா? என்றால் நமசிவாயம் தரச் சொன்னால் தருகிறேன் என்பான். இப்படி சதாசர்வ காலமும் பார்ப்பதெல்லாம் அவனுக்கு நமசிவாயமாகவே பட்டது. மிகப் பெரிய வித்தை கற்காமலோ ஞான உபதேசம் இல்லாமலோ வெறும் பிறவியில் இருந்து அன்னவனுக்கு சிவன் மீது மிகப்பெரிய பற்றுதல் வந்துவிட்டது. சிறு தொழில் மூலம் கிடைத்த சிறிய வருமானத்தில் அவனும் அவன் குடும்பமும் திருப்தியாக வாழ்ந்து வந்தது. அப்பொழுது அனல் காலம் என்பதால் அவன் ஒரு நாள் காற்றை நாடி இல்லத்தின் வாயிலிலே கண் அயர்ந்து கொண்டிருந்தான்.
நமசிவாயம் அருள் இருந்தால் எனக்கு உறக்கம் வரட்டும். நமசிவாயம் எண்ணினால் இன்று தென்றல் வீசட்டும். நமச்சிவாயம் எண்ணினால் நான் நன்றாகத் தூங்குவேன் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் கள்வர்கள் (திருடர்கள்) சிலர் அரண்மனையில் இருந்து சில பொருள்களை திருடிக் கொண்டு ஓட காவலர்கள் துரத்த இங்கே இவன் இருப்பதை அறியாமல் இவன் மீது விழுந்தடித்துக் கொண்டு இவன் இல்லத்திற்குள் ஓடி ஔிந்து கொள்ள அப்பொழுது அந்த காவலர்கள் பின் தொடர்ந்து வந்து அந்த கள்வர்களை எல்லாம் பிடித்துக் கொண்டு இவனையும் பிடித்துக் கொண்டு சென்றார்கள். அனைவரையும் அரசன் முன் நிறுத்தி இந்த கள்வர்கள் இப்படி எல்லாம் செய்து இருக்கிறார்கள். இதோ இந்த மனிதன் வீட்டில்தான் ஔிந்து இருந்தார்கள். இவன்தான் அனைத்திற்கும் பொறுப்பு என்று கூற அரசன் அவனை ஏறிட்டுப் பார்த்தான்.
அரசன்: நீ என்னப்பா கூறுகிறாய்?
நமசிவாயம் அருளாலே நான் இரவு உணவை முடித்து விட்டு நமசிவாயம் அருளாலே காற்றில்லை என்பதால் நான் நமசிவாயம் அருளாலே இல்லத்தின் வெளியே அமர்ந்து இருந்தேன். நமசிவாயம் அருளாலே நான் கட்டிலிலே அமர்ந்து இருந்தேன். நமசிவாயம் அருள் இருந்தால் தென்றல் வரட்டும் என்று இருந்தேன். நமசிவாயம் அருள் இருந்தால் உறக்கம் வரட்டும் என்று படுத்து இருந்தேன். ஆனால் நமசிவாயம் என்னவோ கள்வர்களை (திருடர்களை) அனுப்பி வைத்து இருக்கிறது. நமசிவாயமே கள்வர்களை அனுப்பி இருக்கிறார். நமசிவாயம் அருளால் தான் கள்வர்கள் உங்கள் அரண்மனையில் இருந்து பொருள்களை எடுத்து இருக்கிறார்கள். நமசிவாயம் அருள்தான் கள்வர்களை என் இல்லத்திற்குள் புக வைத்தது. அந்த நமசிவாயம் அருள்தான் உங்கள் கள்வர்களையும் என் இல்லத்திற்கு வரவழைத்தது. அதே நமசிவாயத்தின் அருள்தான் காவலர்களிடம் கள்வர்கள் பிடிபட்டார்கள். அதே நமசிவாயத்தின் அருளால்தான் நானும் பிடிபட்டிருக்கிறேன். நமசிவாயம் அருளால் அரசே நீங்கள் என்னை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நமசிவாயத்தின் அருளால்தான் நான் கூறிக் கொண்டு இருக்கிறேன். எனவே நமசிவாயத்தின் அருளால்தான் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்று இன்னவன் கூற
செய்வதை எல்லாம் செய்துவிட்டு இறைவன் மீது நீ பழி போடுகிறாயே? என்று எல்லோரும் சொல்ல நமசிவாயம் அருளால்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது நமசிவாயம் எண்ணம். நீங்கள் எல்லாம் என்னை கடுமையாக வசை பாட வேண்டும் என்று இருக்கிறது. நமசிவாயத்தின் எண்ணம் அப்படி இருந்தால் அப்படியே நடந்து விட்டுப் போகட்டுமே என்று இன்னவன் கூற நமசிவாயம் அருள் என்று கூறுகிறாயே இப்பொழுது நமசிவாயம் உன்னை தூக்கில் போட எனக்கு உத்தரவு இட்டிருக்கிறார். உன்னை தூக்கில் போடப் போகிறேன். உன் உயிரை எடுக்கப் போகிறேன் என்று அரசன் கூற ஆஹா நமசிவாயத்தின் கருணையே கருணை. நமசிவாயத்தின் அருளால்தான் இந்த சிந்தனையே உங்களுக்கு வந்திருக்கிறது. இந்ந உடல் பாரமானது. இந்த உடலுக்குள் இந்த ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆத்மாவை விடுதலை செய்ய என் அப்பன் முடிவு செய்து விட்டார் போலும். நமசிவாயம் உங்கள் உடலில் புகுந்து கொண்டு அரசே இப்படியொரு அருமையான கட்டளையைப் போட்டிருக்கிறார். எனவே நமசிவாயம் எண்ணப்படி எல்லாம் நடந்து விட்டுப் போகட்டும். நமசிவாயம் எண்ணப்படி நான் சித்தமாக இருக்கிறேன். நமசிவாயத்தின் எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு அடிபணிய நான் காத்திருக்கிறேன். எனவே நமசிவாயமே அனைத்துக்கும் பொறுப்பு என்று இவன் கூற அரசன் அவனின் உண்மையான பக்தியைப் புரிந்து கொண்டு ஏராளமான பொன்னும் பொருளும் கொடுத்து மற்ற கள்வர்களை (திருடர்களை) சிறைக்கு அனுப்பிவிட்டு இவனை அனுப்பி வைத்துவிட்டார்.
எனவே மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஏதோ ஒரு கதை போல் தோன்றினாலும் அப்படியொரு தீர்க்கமான அழுத்தந்திருத்தமான பக்தி இறை மீது இருந்தால் என்றும் அனைத்தையும் அனைவரும் சாதிக்கலாம் என்பதை இந்தக் கதை நினைவூட்டுகிறது.