ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 197

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு வாழ்த்துக்களும் வாக்குகளும் மகான்களின் மூலம் வரும் பொழுது அது அப்படியே 100 க்கு 100 பலிதமாக வேண்டுமென்றே மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். மெய்தான். அப்படியே நடந்தால் எமக்கும் (அகத்திய மாமுனிவர்) மனமகிழ்வே. ஆயினும் பாவகர்மங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறுவிதமான குழப்பங்களையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி விதவிதமான சிந்தனைகளைத் தந்து அவனவன் நிம்மதியை கெடுப்பதோடு அவனை சார்ந்தோரின் நிம்மதியையும் சார்ந்தோரின் பாவ கர்மாவை பொறுத்து கெடுத்து விடுகிறது. எனவே சுற்றி சுற்றி சுற்றி எங்கு வந்தாலும் பாவங்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை. பாவங்கள் விதியின் வாயிலாக பிறவியெடுத்து பிறவியெடுத்து அந்தப் பிறவிகளில் ஏற்படும் அனுபவங்களை மனிதன் நுகர்ந்தே ஆக வேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது. ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும் கடுகளவு துவேஷம் இல்லாத மனமும் அகங்காரமில்லாத மனமும் சிந்தனையில் சாத்வீகமும் அந்த சாத்வீகத்தில் உறுதியும் செயலிலும் வாக்கிலும் எண்ணத்திலும் நேர்மையும் பிறர் செய்கின்ற அபவாதங்களையும் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு அப்படி துன்பங்கள் எப்பொழுதெல்லாம் யார் கொடுக்கிறார்களோ அவர்களை நிந்திக்காமல் அவர்களை தரக்குறைவாக பேசாமல் இந்த மனிதன் துன்பத்தைத் தருவது போல் தோன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது என்று எடுத்துக் கொண்டு சமாதானம் அடைவதும் ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும் ஏளனமாகவும் அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும் பொழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வோடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே சித்தர்கள் வழி சித்தர்கள் வழி என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே? அந்த வழியில் பிரதான வழியாகும்.

சித்தர்களை வணங்குவேன் ஸ்தல யாத்திரைகளும் செய்வேன் மந்திரங்களை உருவேற்றுவேன். ஆனால் பெருந்தன்மையோ பொறுமையோ இல்லாது நடந்து கொள்வேன் என்றால் பலனேதுமில்லை. எனவே தளராத பக்தி தடைபடாத தர்மம் உறுதியான சத்தியம் பெருந்தன்மை இது போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும் தாக்கினாலும் அதனைத் தாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு மனோபாவமும் ஏற்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.