அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
இறைவனின் அருளாணையின்படி ஒரு மனிதனின் அறியாமை நீங்க வேண்டுமென்றால் அவன் இதுவரை எடுத்த கோடானு கோடி பிறவிகளின் பாவம் நீங்க வேண்டும். பாவங்கள் நீங்க வேண்டுமென்றால் அவனுடைய மனம் ஒவ்வொரு நிகழ்வாலும் வேதனைப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வாலும் வெட்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வாலும் அவன் அனலில் (வெப்பத்தில்) இட்ட புழு போல் துடிக்க வேண்டும். அந்த எண்ணங்கள்தான் அப்படியொரு மனப்பாங்குதான் அவனுடைய பாவத்தை நீக்கும். எப்படி கயப்பு (கசப்பு) மருந்து நோயை நீக்குகிறதோ அதைப் போல கடினமான அனுபவங்கள் ஒரு மனிதன் சேர்த்த பாவங்களை நீக்குகிறது. ஆனால் எல்லோராலும் எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் துன்பங்களை நுகர இயலாது. நேரடியாக உனக்கு இவையெல்லாம் நடக்கும். தாங்கிக் கொள் என்றால் எத்தனை மனிதர்களால் தாங்கிக் கொள்ள இயலும்? எனவே தான் இறைவன் கருணை கொண்டு மனிதனுக்கு பல்வேறு விதமான பிறவிகளைத் தந்து அந்த அனுபவங்களின் வாயிலாக அந்த ஆத்மாவின் பாவங்களைக் குறைக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் மறைமுகமாக அவன் பாடுபட்டு தேடிய தனத்தையெல்லாம் வியமாக்கி (விரயமாக்கி) அதன் மூலம் பாவத்தைக் குறைக்க வைக்கிறார். பிறரை மனம் நோக செய்து பிறர் மனதையெல்லாம் வதைத்து பிறவியெடுத்த பிறவிகளுக்கு மீண்டும் பிறரால் மனம் வேதனை அடையும் வண்ணம் ஒரு சூழலை ஏற்படுத்தி அதன் மூலம் பாவத்தைக் குறைக்கிறார். ஒட்டு மொத்தமாக இப்படி வியாதியாக வழக்காக தொழிலில் ஏற்படும் மன உளைச்சலாக உறவு சிக்கலாக நட்பு சிக்கலாக நம்பிக்கை துரோகமாக இப்படி ஒவ்வொரு நாளும் நிகழும் நிகழ்வில் மனித பாவங்கள் குறைகின்றன. இதைப் புரிந்து கொள்வது கடினம். இதை புரிந்து கொள்வதற்கே ஒரு மனிதன் கோடானு கோடி பிறவி எடுத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில்தான் இறைவனின் அருளாணைக்கேற்ப எமை நாடும் மாந்தர்களுக்கு நீ குடம் குடமாக பாலை கொட்ட வேண்டுமப்பா. நீ பாடுபட்டு நேர்மையாக ஈட்டும் தனத்தையெல்லாம் உனக்கும் உன் குடும்பத் தேவைக்கும் போக அள்ளி அள்ளி வழங்கு. யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ வழங்கு. கள்வன் உன்னிடமிருந்து மறைமுகமாக கவர்ந்து கொள்வதற்கு முன்பாக நீயாகவே கொடுத்து விடு. கொடு கொடு கொடு கொடு கொடு கொடு கொடுத்துக் கொண்டேயிரு என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஆனால் இதையெல்லாம் கேட்கின்ற மனிதனுக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஏளனமாக இருக்கிறது. இது குறித்து பலவிதமான விமர்சனங்களெல்லாம் தமக்குத்தாமே தன்னை சேர்ந்த மனிதர்களோடு அவன் உரையாடிக் கொண்டு இவையெல்லாம் சாத்தியமா? இப்படியெல்லாம் செய்ய இயலுமா? இவையெல்லாம் முட்டாள்தனம் என்று அவன் பேசவில்லை. அவன் விதி பேசவைக்கிறது. பிறகு நாங்கள் எப்படியப்பா அல்லும் பகலும் 60 நாழிகையும் (ஒரு நாள் என்பது 60 நாழிகை) எமை (அகத்திய மாமுனிவர்) நாடும் மனிதர்களுக்கு வழிகாட்ட இயலும்?. எனவே இது போல ஜீவ அருள் ஓலையை நாட வேண்டுமென்றால் பின்பற்ற வேண்டுமென்றால் இது போல ஜீவ அருள் ஓலையை (ஜீவநாடி) நம்பி இந்த ஜீவ அருள் ஓலையை வாசிக்கும் இதழ் வாசிக்கும் மூடனையும் நம்பி இதன் மூலம் வாக்கை உரைப்பது மகான்கள்தான் என்று நம்பி வருகின்ற ஆத்மாக்களுக்கு அப்படி நம்பும் வண்ணம் எவனுக்கு கிரகநிலை அமைகிறதோ அல்லது அப்படி அமைக்க வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொள்கிறாரோ அது போல ஆத்மாக்களுக்கு நாங்கள்(சித்தர்கள்) இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டே இருப்போம். எனவே யாரும் விசனம் (துக்கம்) கொண்டிட வேண்டாம்.