அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
மூத்தோனை வணங்கு. (மூத்தோன் என்பவர் வினாயகர்) வணங்கி பின் பயணம் துவங்கு. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் தடைகளை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் பாவ கர்மாவை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் செயல் யாவும் ஜெயமாகும் என்ற நினைப்புக்கு ஆளாகு. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் குறையெல்லாம் அகற்றிக் கொள். மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று நாங்கள் (சித்தர்கள்) எம் முன் அமர்பவன் இளையானோக இருந்தாலும் மூத்தோனை இருந்தாலும் கூறுகிறோமே ஏன்? மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு என்றால் அங்கு மூப்பை குறிப்பதல்ல. அது மூப்புக்கெல்லாம் மூப்பான அந்த மூத்தோனை இறையின் அந்த வடிவம் விக்கினங்களைக் களையக் கூடியது. தடைகளை களையக் கூடியது. எண்ணிய காரியத்தை ஜெயமாக்கக் கூடியது. எனவேதான் நாங்கள் எதையெடுத்தாலும் மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்.
இந்த நிலையில் ஒருவன் வினவலாம் (கேட்கலாம்). நீக்கமற நிறைந்துள்ள பரம் பொருள் ஒன்றுதான். வடிவம்தான் வேறு. வேறு என்று கூறுகின்ற சித்தர்கள் ஏன் மூத்தோனை வணங்கு இளையோனை (முருகரை) வணங்கு அன்னை திரு வை (மகாலட்சிமி) வணங்கு என்று கூறவேண்டும்? பரம் பொருளை வணங்கு என்று கூறலாமே? கூறலாம்தான். ஆனால் இதுபோல் பலமுறை நாங்கள் (சித்தர்கள்) உதாரணம் கூறியிருக்கிறோம். சுவையான இனிப்பு பண்டங்கள் விற்கின்ற அங்காடியிலே (கடை) முன்பெல்லாம் ஒரு வகையான இனிப்பு பண்டங்கள் அதிலும் குறிப்பாக ஆலய திருவிழாக்களில் விற்பார்கள். அனைத்தும் சுவையான இனிப்பிலே விதவிதமான வண்ணங்களிலே செய்யப்பட்டிருக்கும். ஒன்று மிளகாய் பழம் போல் இருக்கும். இன்னொன்று பாகற்காய் போல் இருக்கும். ஒன்று சிங்கம் போல் இருக்கும். இன்னொன்று கிளி போல் இருக்கும். கடித்து சுவைத்தால் அனைத்தும் ஒரே சுவைதான். ஆனால் இதை அறியாத குழந்தை என்ன சொல்லும்? எனக்கு மிளகாய் பழம் மிட்டாய் வேண்டாம். அந்த சுவை நன்றாய் இராது. நாவிலே காரம் தாங்காது. கனி வடிவத்தில் இருக்கின்ற சுவையை வாங்கிக் கொடு என்று கூறும். வடிவம் தான் வேறு. ஆனால் சுவை ஒன்று என்பது குழந்தைக்கு தெரியாதது போல் அனைத்து விதமான தெய்வ வடிவங்களும் விதவிதமாக இருந்தாலும் இருக்கின்ற பரம் பொருள் ஒன்று. பிறகு ஏன் மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்? ஒரு மனிதன் அலுவலகத்தில் அதிகாரியாக அரசாட்சி செய்கிறான். இல்லத்தில் தாரத்திற்கு கணவனாக செயலாற்றுகிறான். பிள்ளைக்கோ தகப்பன் என்ற நிலையில் செயலாற்றுகிறான். நன்றாக கவனிக்க. அவன் அலுவலகத்தில் ஒரு கை சான்று (கையெழுத்து) இடவேண்டுமென்றால் அதற்கான விதிமுறை வேறு. அதே தருணம் பிள்ளையவன் வித்தை கூடத்திலிருந்து(பள்ளிக் கூடம்) ஒரு கைசான்று கேட்கிறார்கள் என்றால் அலுவலகத்தில் கடைப்பிடிக்கும் அதே விதிமுறையை பின்பற்ற இயலுமா? இயலாதல்லவா.
இப்படி ஒரே மனிதன் இல்லத்தில் ஒருவிதமாகவும் அலுவலகத்தில் ஒருவிதமாகவும் பொது இடத்தில் ஒருவிதமாகவும் ஆலயத்தில் ஒருவிதமாகவும் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது போல் பரம் பொருளும் தடைகளை நீக்கும் பொழுது விநாயகர் வடிவத்திலும் அதுபோல் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பொழுது முருகப்பெருமான் என்ற வடிவத்திலும் மனிதனுக்கு அன்பை போதிக்கும் பொழுது அன்னை (பராசக்தி) வடிவத்திலும் மனிதனுக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் பொழுது மகாலட்சுமி வடிவத்திலும் இறை மனிதனுக்காக தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறார். இதில் பேதங்கள் ஏதும் இல்லை. அதற்காக உருவத்தை மாற்றி வணங்கினால் கேட்டது கிடைக்காது என்ற தவறான பொருளை கொள்ள வேண்டாம். இல்லை எனக்கு பிடித்த ஒரே உருவத்தை நான் எப்பொழுதுமே வணங்கிக் கொள்கிறேன் என்றாலும் பாதகமில்லை. இருந்தாலும் நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம் என்றால் அதில் இறைவனின் சூட்சும காரணங்கள் இருக்கும் என்பதால் மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு பின் பயணம் துவங்கு ஆசிகள்.