கேள்வி: திமிரி (வேலூர் மாவட்டம்) ஆலயத்தில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) எவ்வித இடையூறுமின்றி ஸ்தாபிதம் செய்யப்படவும் தீர்த்தத்தின் மகிமை பற்றியும் அந்த குளத்தில் நீராடினால் என்ன பயன்? என்றும் அந்த குளத்திற்கு கரை கட்டும் வேலை விரைவில் நடைபெற தங்கள் ஆசியும் மேலும் இந்த ஆலயத்தின் சிறப்பை இந்த இறைவனின் சிறப்பைப் பற்றியும் சொல்லி அருள வேண்டும்?
இறைவன் பெயர்: அருள்மிகு ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்.
திருக்கோவில் உள்ள இடம்: திமிரி வேலூர் மாவட்டம்.
இறைவனின் கருணையைக் கொண்டு முன்பே அன்னவனுக்கு சிலவற்றை இயம்பியிருக்கின்றோம். இறைவன் விருப்பத்திற்கேற்பவே அனைத்தும் நடந்து கொண்டேயிருக்கிறது. எனவே தக்க காலத்தில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) சிறப்பாய் அமையும். ஏன் இத்தனை தடைகள் வருகின்றன. ஏன் ஏக த்வஜஸ்தம்பம் ஆயத்தம் செய்தும் அது பலனளிக்காமல் போனது? என்பதற்கெல்லாம் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆயினும் கூட அன்னவனே அறிவான். ஐயன் (சிவபெருமான்) லிங்க ரூபமாய் வெளிப்பட்டு பல ஆண்டுகள் பூர்த்தியான பிறகே ஏகாந்த ஆலயமும் கலச விழாவும் காண நேர்ந்தது. அதுவும் இறை விருப்பமே. எனவே த்வஜஸ்தம்பமும் தீர்த்த நிலையும் விரைவில் இறைவன் அருளால் நன்றாக தம்மை அமைத்துக் கொள்ளும். இது போல நிலையிலே பொதுவாய் மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களை பயன் படுத்தினாலும் அதனை ஊறு (இடையூறு) செய்யாமல் பயன்படுத்தினால் அது என்றென்றும் அவனுக்கு தொடர்ந்து நலத்தை நல்கும். ஆனால் ஒரு மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களையும் குறிப்பாய் நீர் நிலைகளை பயன்படுத்தும் பொழுது அதனை முறையாக பயன்படுத்தாமல் முறை தவறி பயன் படுத்துவதால் நீர் தோஷத்திற்கு ஆளாகி நீரால் அதிக பாதிப்பு ஒன்று நீர் குறைந்து பாதிப்பு அல்லது நீர் அதிகமாகி பாதிப்பு வருகிறது.
திமிரி ஆலயம் என்று இல்லை. எந்த ஆலயத்திலும் தீர்த்தம் என்பது மிக மிக புனிதமானது உயர்வானது. அதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை. பல ஆலயங்களில் தீர்த்தம் இருந்த இடமே இல்லாமல் போயிருக்கிறது. இன்னொன்று தீர்த்தம் இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் அதனை மனிதன் வைத்திருக்கிறான். எனவே அந்த தீர்த்த தடம் நன்றாய் சுத்தி செய்யப்பட்டு பூரணத்துவம் பெற்றாலும் சிறிதளவு நீரையெடுத்து தெய்வ காரியங்களுக்கு அபிஷேகங்களுக்கு பயன்படுத்துவதே இத்தருணம் ஏற்புடையது. மனிதர்கள் அதிலே நீராடுவதோ வேறு செயல்கள் செய்வதோ ஏற்புடையது அல்ல. அப்படியானால் அடுத்ததொரு ஐயம் வரும். ஒரு மனிதன் இந்த தீர்த்தத்தில் இறங்கி நீராடினால் அதனால் அந்த தீர்த்தம் மாசுபட்டால் அது எப்படி புனித தீர்த்தமாகும் என்று. உண்மையில் தெய்வீகம் சார்ந்த எதனையும் மனிதனால் மாசுபடுத்த முடியாது. ஆனால் மனிதனுக்கு தரவேண்டிய நல்விஷயங்களையெல்லாம் இறைவன் சமயத்தில் மறை பொருளாக வைத்திருக்கிறார். அந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாமல் மனிதன் அதனை தவறாக கையாளும் பொழுது கிடைக்க வேண்டிய நற்பலன் கிட்டாமல் வேறு வேறு பலன்கள் அவனுக்கு வந்துவிடுகிறது. எனவே தீர்த்தம் பாதிக்கப்படும் என்று நாங்கள் அந்த நோக்கில் கூறவில்லை. அவ்வாறு நீராடாமல் இருப்பது தற்சமயம் அங்கு வரும் பக்தர்களுக்கு நன்மையைத் தரும். வேண்டுமானால் தூய சிந்தனையுடன் தூய தேகத்துடன் அந்த தீர்த்தத்தை எடுத்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் நோக்கிலே பயன்படுத்தலாமே தவிர மனிதர்களுக்கு அதனை தற்சமயம் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. அந்த தீர்த்தம் நன்றாய் பொலிவு பெற்ற பிறகு அந்த தீர்த்தத்தையும் அதுபோல் திமிரி ஐயன் இருக்கும் அந்த தீர்த்த நிலைக்கு அந்த தீர்த்தத்தையே வைத்துக் கொள்ளலாம்.
அருள்மிகு ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவிலைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்