கேள்வி: அகத்தியர் வழிபட்ட ஸ்தலங்கள் கையாலயத்திலிருந்து கன்னியாகுமரி வரை:
இறைவன் அருளைக் கொண்டு யாம் கூறுவது யாதென்றால் இந்த அகிலாண்ட லோகம் அண்ட சராசரங்கள் அனைத்தையுமே யாம் ஸ்தலமாகத்தான் (பரமாகத்தான்) பார்க்கிறோம். இங்கு எதைப் பார்த்தாலும் எமக்கு இறையாகத்தான் தெரிகிறது. மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குதான் ஆலயம் என்ற ஒரு இடம். எம்மைப் போன்ற நிலையை எய்து விட்டவர்களுக்கு பார்க்குமிடமெங்கும் நீக்கமற தெரிவது இறையொன்றுதான். எனவே அந்த இறை இந்த ஆலயத்தில் மட்டும்தான் இருக்கிறது. நான் சென்று வணங்கியது இங்குதான். எனவே நீங்களும் சென்று வணங்குங்கள். உங்களுக்கும் நல்லது நடக்கும் என்பது போன்ற போதனைகளை ஒரு பொழுதும் யாம் (அகத்திய மாமுனிவர்) கூறவிரும்பவில்லை. அப்படிக் கூறியிருந்தால் அப்படியாவது ஆலயம் செல்ல வேண்டுமே என்கிற நோக்கில்தான். அந்த வகையில் பார்க்கப் போனால் எல்லா ஸ்தலங்களுக்கும் மனிதர்கள் பார்வையில் கூறப்போனால் இந்த மண்ணுலகிலே அனைத்து இடங்களுக்கும் ஏன்? ஆழி (கடல்) தாண்டியும் கூட யாங்கள் சென்று யாங்கள் என்றால் எம் போன்ற அனைத்து சித்தர்களும் சப்த ரிஷிகளும் சென்று வழிபட்டிருக்கிறோம். வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். இனியும் வழிபட இருக்கிறோம். எனவே இந்த ஆலயம் ஒன்றுதான் நாங்கள் சென்ற ஆலயம் அல்லது அந்த ஆலயம் ஒன்றுதான் நாங்கள் சென்ற ஆலயம் என்று யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏதோ அறிந்தோ அறியாமலோ ஒருவன் ஒரு லிங்கத்தையோ அல்லது பரம் பொருளின் வேறு வடிவத்தையோ வைத்து சிறு பூஜை செய்தாலும் அந்த பூஜை ஆத்மார்த்தமாக இருந்தால் அங்கும் நாங்கள் சென்று வழிபாடு செய்ய சித்தமாக இருக்கிறோம். எனவே எல்லா ஆலயங்களும் யாம் சென்ற ஆலயங்கள்தாம். இதில் எந்தவிதமான பேதமும் இல்லையப்பா.
கேள்வி: அகத்தியர் சிலா ரூபம் பிரதிஷ்டை செய்ய ஆசிகள்:
மனிதரிலே ஓரளவு பக்குவம் அடைந்த மனிதனைப் பார்த்து உனக்காக சிலை வைக்கிறோம். நீ அனுமதி கொடு. நாங்கள் எல்லாம் வணங்குகிறோம் என்றால் அவனே வெட்கப்படுவானப்பா. எம்மிடமே இது குறித்து கேட்டால் நாங்கள் என்ன பதில் கூறவது?