கேள்வி: பிறவாத வரம் வேண்டும் என்று கேட்க வேண்டுமா? அல்லது பிறவி தொடர்ந்து வர வேண்டும் என்று கேட்க வேண்டுமா?
இறைவன் கருணையைக் கொண்டு இன்னவனுக்கு இன்னவன் வினாவிற்கு இத்தருணம் யாங்கள் இயம்புவது ஒன்று மந்திரி ஒருவன் இருக்கிறான். மிகவும் உயர்ந்த பதவி என்று வைத்துக் கொள்வோம். அவனை எனக்குத் தெரியும். என் தோழன். என்னோடு தங்கி பயின்றவன் என்று கூறுவது உயர்வா? அல்லது அந்த மந்திரி இன்னாரை எனக்குத் தெரியும். என்னுடன் கல்வி பயின்றவன். உள்ளே அழைத்து வாருங்கள் என்று கூறுவது சிறப்பா?. இறைவனைத் தெரியும் என்று மனிதன் கூறுவதை விட இத்தனை கோடி மனிதர்களில் இவனை எனக்குத் தெரியும். அதோ வருகிறாள் யார்? எம் தாய் என்று காரைக்கால் அம்மையாரைப் பார்த்து முக்கண்ணன் (சிவபெருமான்) கூறினாரே? அதோ வருகிறார் யார்? நம் தோழன் என்று சுந்தரரைப் பார்த்துக் கூறினாரே? (கூறியது சிவபெருமான்) அதைப் போல இறைவனைத் தேடி யாரும் செல்ல வேண்டாம். ஒவ்வொரு மனிதனையும் தேடி இறை வரும் வண்ணம் ஒவ்வொரு மனிதனும் பக்குவம் அடைந்தால் போதும்.
எப்படி பக்குவம் அடைவது? என்பதற்குத்தான் பல்வேறு நீதி நூல்கள் இருக்கின்றன. யாமும் சில காலமாக இறைவன் அருளால் வாக்கினை ஓதிக்கொண்டு இருக்கிறோம். எனவே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?. இது வேண்டுமா? வேண்டாமா? பிறவி தொடர்வதா? தொடராமல் இருப்பதா? இது போன்ற அனைத்தையும் விட்டுவிட்டு எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத வெற்றுப் பாத்திரமாக மனதை வைத்து இறையிடம் பரிபூரண சரணாகதி என்பதை எண்ணங்களால் வைத்து மெளனத்தையே மொழியாக்கி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தால் அவன் யார்? அவன் எதற்கு? அவன் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதை இறையே உணர்த்தும். எனவே இன்னவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இது பொருந்தும். எல்லோரும் இறையின் நகல்கள்தான். ஆனால் கனகம்(தங்கம்) இருக்கிறது. அது கனகம் (தங்கம்) என்று தெரியாத நிலையில் சேற்றிலே அமிழ்ந்து கிடந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். தூய்மைப்படுத்தினால் கனகம் என்பது தெரியும். அதைப் போல பற்று மாயை அறியாமை ஆசை சுயநலம் தன்முனைப்பு போன்ற அழுக்குகள் மனித ஆன்மாவை மூடியிருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டால் எல்லோரும் இறை நிலைக்கு உயர வாய்ப்பு உண்டு. ஆசிகள்.
கேள்வி: மூத்தோனை வணங்கு என்று சொன்னீர்கள். மூத்தோன் என்றால்? தமிழ் மூத்தோனாகிய முருகரா? அல்லது ஈஸ்வரனா? தாங்கள் குறிப்பாக சொன்னால் உதவியாக இருக்கும்:
யாம் (அகத்திய மாமுனிவர்) விநாயகப் பெருமானைக் குறிப்பிட்டோம். ஆனால் விதி உன் மதியில் அமர்ந்து மூவரையுமே கூற வைத்து விட்டது. எனவே மூவரையுமே நீ வணங்கு.