கேள்வி: கோவில் திருப்பணி சிறப்பாக நடக்க ஆசிகள்:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயமாகும். ஒவ்வொரு மனிதனும் தம் தம் மனதிற்குள் ஆலயத்தை எழுப்புவதும் மனமாகிய கருவறையிலே தூய இறையை அமர்த்தி அன்றாடம் அன்பால் பூஜை செய்வதுமே இறைவன் விரும்புவது. இருப்பினும் எடுத்த எடுப்பிலேயே இது போன்ற தத்துவார்த்த விஷயங்களைக் கூறினால் அது பலனைத் தராது என்பதால்தான் புற வழிபாடுகளும் புற பூஜைகளும் முன்னோர்களாலும் மகான்களாலும் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலே பல்வேறு ஆலயங்கள் பல்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டு அது காலம் கடந்தும் நிற்கிறது. சில சிதிலமடைந்து விடுகிறது. இவை அனைத்திற்குமே பல்வேறு விதமான சூட்சும காரணங்கள் இருக்கின்றன. இந்த இன்னவன் எழுப்பிய வினாவின் அடிப்படையிலே இந்த ஆலயம் சிறப்புற வளர யாம் இறைவன் அருளால் நல்லாசிகள் கூறுகிறோம். எந்தவொரு ஆலயமும் மெய்யாக மெய்யாக வளர மெய்யன்பர்கள் ஒன்று பட்டால் போதும். அங்கே அருள் இணைப்பு இருந்தால் போதும் பொருள் இணைப்பு மிகப்பெரிய விஷயம் அல்ல. இறைவன் கருணையால் இனிதே நடக்கும். இந்தத் தமிழ் மண்ணில் உள்ள மூத்தோனுக்கு தலை சிறந்த ஆலயங்கள் அங்கெல்லாம் தொடர்புடைய மனிதர்கள் சென்று இயன்ற வழிபாடுகள் செய்து பணியை துவக்க நலம் நடக்கும். நல்லாசிகள்.
கேள்வி: சூளகிரி வரதராஜப் பெருமாள் பற்றி:
வரதராஜப் பெருமாள் திருக்கோவில். இடம் சூளகிரி. மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.
இறைவன் கருணையாலே அனைத்து புராண சம்பவங்களும் நடந்தது உண்மை. தக்க காலத்தில் இன்னமும் வலிவும் பொலிவும் அந்த சூழலும் உருவாகும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆலயம் வளர்ச்சி பெறுவது என்பது மனித நோக்கிலே இருப்பது அல்ல. பெருவாரியான மனிதர்கள் ஒரு ஆலயத்தை நோக்கிப் படையெடுத்தால் என்னவாகும்? அங்கு வெறும் வியாபாரம்தான் இருக்கும். இறையம்சம் இருக்குமா? எனவே ஒரு ஆலயம் அத்தனை எளிதாக பலரின் பார்வைக்கு வரவில்லை. பலரும் அதனை எண்ணிக்கூட பார்க்கவில்லை என்றால் சிலர் மட்டும் செல்கிறார்கள் என்றால் அதனால் ஆலயத்திற்குக் குறையொன்றும் அல்ல. தொடர்ந்து அந்தந்த காலத்தில் எந்தெந்த ஆத்மாக்கள் அந்த ஆலயத்தோடு தொடர்புடையவர்களோ அவர்கள் வந்து தொண்டினைத் தொடர்வார்கள். சிறப்பாய் அனைத்தும் நடக்கும். நல்லாசிகள்.
இக்கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்